யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாழடைந்த கிணற்றிலிருந்து ஆண் சிசுவின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலைய தொலைப்பேசி இலக்கத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்திலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிறந்து 2 நாட்களே இருக்கலாம் எனக் கருதப்படும் சிசுவின் சடலத்துடன் தொப்புள் கொடியும் காணப்படுகிறது.

நேற்று காலை அந்த பகுதிக்குச் சென்ற ஒருவர் துர்நாற்றம் வீசியதை அடுத்து கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார். இதன் போது அழுகிய நிலையில் சடலம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். தடயவியல் பொலிஸாரும் தடயங்களைப் பதிவு செய்தனர். அத்துடன் புங்குடுதீவு 11ஆம் வட்டாரம் பகுதிக்குப் பொறுப்பான தாதி  மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் உதவியுடன் புலன் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

குழந்தையின் தாய் எனக் கருதப்படும் பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply