ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரும், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவருமான ஒய்ஷி கோஷ் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 50-க்கும் மேற்பட்ட குண்டர்கள் பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சபர்மதி விடுதியில் குழுமியிருந்த மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் கூறுகின்றனர்.

மாணவர்களுடன், ஆசிரியர்கள் சிலரும் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றன.

கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து கடந்த இரண்டு மாதங்களாக ஜே.என்.யு. மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அடுத்த செமஸ்டர் தேர்வுக்கான பதிவு தொடங்கியதை அடுத்து, அதை நிறுத்திவைக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

_110399860_aishegosh1இந்நிலையில் மாணவர் சங்கத்தை சேர்ந்த சதீஷ் சந்திர யாதவ் என்பவர் நேற்று தாக்கப்பட்டுள்ளார். இன்று, அதைக் கண்டித்து மாணவர்கள் ஒரு பேரணி மேற்கொண்டபோது பாஜக சார்பு ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரிய பெரிய கற்களைக் கொண்டு பேரணியில் வந்த மாணவர்களை கடுமையாக தாக்கியதாகவும், இதில் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவர் ஒய்ஷி கோஷ் கடுமையாக காயமடைந்ததாகவும், அவரது முகம் முழுவதும் ரத்தக் களரியாகியுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றே மாணவர் ஜே.என்.யு. மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், தங்கள் மாணவர்களும் தாக்கப்பட்டதாகவும், இடது சாரி மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபடுவதாகவும் ஏ.பி.வி.பி. டெல்லி ஊடகப் பொறுப்பாளர் அஷுடோஷ் சிங் தெரிவித்துள்ளார்.

_110400267_img-20200105-wa0003அங்கிருந்த காவலர்கள் தாக்குதலில் இறங்கிய மாணவர்களைத் தடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதனிடையே அடுத்து என்ன செய்வது என்று ஆலோசிக்க மாணவர் சங்கத்தினர் சபர்மதி விடுதி அருகே குழுமியிருந்தபோது, வெளியில் இருந்து பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்ததுடன், மாணவர்களையும் தாக்கியதாகவும் அவர் கூறினார்.

_110400269_img-20200105-wa0002அனைத்திந்திய மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவரும், ஜே.என்.யு. மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான என். சாய் பாலாஜி, ஒய்ஷி கோஷ் தாக்கப்பட்டு ரத்தம் சொட்டும் காட்சியை காட்டும் காணொளியை தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்தவர்களே அவரைத் தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply