இங்கிலாந்து இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்ட ஆலோசனைக்கு பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் பொருளாதார ரீதியில் தாங்கள் சுயமாக செயல்பட திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதே நேரம் இங்கிலாந்து ராணிக்கான தங்கள் ஆதரவை தொடர்ந்து அளிப்போம் என்றும் கூறியுள்ள ஹரி தம்பதியினர், தங்கள் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் வசிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அரசக் குடும்பத்தினருடன் சில கருத்து வேறுபாடு உள்ளது என்று ஊடகங்களில் அவர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இந்த திடீர் முடிவு அரண்மனை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளவரசன் ஹரியின் இந்தத் திடீர் அறிவிப்பு இங்கிலாந்து மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. மேலும், இவர்கள் இங்கிலாந்து ராணியிடம் கூட ஆலோசனை நடத்தாமல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹரியின் முடிவு பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள பக்கிங்ஹாம் அரச குடும்பம், “ஹரி மற்றும் மேகனுடனான எங்கள் பேச்சுவார்த்தை முதல்கட்டத்திலேயே உள்ளது. மாறுபட்ட சூழலில் வாழ வேண்டும் என்ற அவர்களின் ஆசையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், இது நிறைய சிக்கலைத் தரும்.
இதைச் செயல்படுத்துவதற்கு நிறைய காலம் எடுக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரசு எடுக்கும் முக்கிய முடிவுகளில் அரச குடும்பத்தின் பங்கும் இருக்கும். அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அரசின் ஓர் அங்கமாகவே கருதப்படுகிறார்கள்.
இளவரசர் ஹரி இங்கிலாந்து முடிக்குரிய இளவரசர்கள் வரிசையில் இளவரசர் சார்ல்ஸ், இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மூன்று குழந்தைகளுக்கு அடுத்து ஆறாவது இடத்தில் உள்ளார்.