உலகின் மிகச்சிறிய நாடாக கருதப்படும் சீலேண்ட் குறித்தும், அதன் வரலாறு குறித்தும் அறிந்துகொள்வோம்.
உலகின் மிகச்சிறிய நாடு இத்தாலியில் உள்ள வாடிகன் நகரம் என்பதை நாம் அறிவோம். ஆனால் அதைவிடவும் சிறிய நாடு என கூறப்படும் சீலேண்ட் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டங்களில் பிரிட்டனின் தேம்ஸ் நதி கடலில் கலக்கும் முகத்துவாரங்களில் அந்நாடு திறந்தவெளி கடல் கோட்டைகள் எனும் சிறிய தளங்களை அமைத்தது.
அவை மற்ற நாட்டு விமானங்கள் பறப்பதை தடுக்கவும், பிரிட்டிஷ் கப்பல் தடங்களில் ஜெர்மன் அரசு கடற்படை சுரங்கம் அமைப்பதை தடுக்கவும் உறுதுணையாக இருந்தன.
கடற்படை சுரங்கம் என்பது மேற்பரப்பு கப்பல்கள் அல்லது நீர்மூழ்கிக் கப்பல்களை சேதப்படுத்த அல்லது அழிக்க நீரில் அமைக்கப்படுகிற சுயமாக-வெடிக்கும் தளமாகும்.
1956 ஆம் ஆண்டு வரை இந்த கோட்டையில் சிப்பாய்கள் இருந்தனர், அதன் பின்னர் இந்த கோட்டைகள் கிட்டத்தட்ட ஆங்கிலேயர்களால் கைவிடப்பட்டன.
பின்னர் அவை பைரேட் வானொலி நிலையங்களாக பயன்படுத்தப்பட்டது. பைரேட் வானொலி நிலையங்கள் என்பது உரிமம் பெறாத வானொலி அலைகள் மூலம் தகவல்கள் தொடர்பு கொள்வது ஆகும்.
சீலேண்ட்
அந்த கோட்டைகளில் ஒன்றான ரஃப்ஸ் தளத்தை 1967ம் ஆண்டு ராய் பேட்ஸ் என்பவர் கைப்பற்றி அதை சீலேண்ட் என்ற பெயரில் சொந்த நாடாக அறிவித்தார்.
அன்று முதல் பேட்ஸின் குடும்பம் அங்கு அரச குடும்பமாக உள்ளது. அது பிரின்சிபாலிட்டி (முதன்மை) ஆப் சீலேண்ட் என அழைக்கப்படுகிறது.
ஒரு சிறிய கட்டிடம் மற்றும் அதன் மேல்பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு போதுமான தளத்துடன், 15 முதல் 40 கெஜம் வரை உள்ள சீலேண்டிற்கு 1975ம் ஆண்டு தனி பாஸ்போர்ட், நாணயம், கொடி போன்றவை உருவாக்கப்பட்டது.
1978ம் ஆண்டு அலெக்சாண்டர் என்பவர் பேட்ஸின் மகனான சீலேண்டின் இளவரசர் மைக்கேலை பிணைக்கைதியாக பிடித்து அப்பகுதியை கைப்பற்ற முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.
அதன் பின்னர் தனி நாடு அந்தஸ்து கேட்டு பலமுறை பேட்சின் குடும்பம் பிரிட்டிஷ் நீதிமன்றத்தை அணுகியது. ஆனாலும் சீலேண்ட் உலகின் மிகச்சிறிய நாடாக உலக அளவில் அங்கீகரிக்கப்படவில்லை.
சீலேண்ட் ஒருசில இணையதள நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் குறுகிய கால வருகை அல்லது இசை வீடியோ படப்பிடிப்பு தவிர, அதிகாரத்திற்கு எதிரான உறுதியான கோட்டையாகவும், சுதந்திரத்தின் கலங்கரை விளக்கமாகவும் சீலேண்ட் திகழ்கிறது.
கடந்த 2002ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி சீலேண்டின் மக்கள் தொகை எண்ணிக்கை 27 என்பது குறிப்பிடத்தக்கது.
202001111248323751_Sealand-The-Worlds-Tiniest-Country_SECVPF.gif