தன்னை 16 வயது சிறுவனாகக் காட்டிக்கொண்டு, சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த யுவதி ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் 8 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
தற்போது 21 வயதான ஜெம்மா வட்ஸ் எனும் யுவதிக்கே வைன்செஸ்டர் கிறவுண் நீதிமன்றத்தால் கடந்த வெள்ளிக்கிழமை 8 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இவர் சமூக வலைத்தளங்களில் ஜேக் மத்தியூ வட்சன் எனும் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி, தன்னை 16 வயதான சிறுவனாக காட்டிக்கொண்டார்.
13 முதல்16 வயது வரையான சிறுமிகளையே இவர் இலக்கு வைத்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவன் போன்று வேடமிட்ட தனது புகைப்படங்களை சிறுமிகளுக்கு அனுப்பி அவர்களை தான் காதலிப்பதாக ஜெம்மா வட்ஸ் ஆசை வார்த்தை காட்டினார் என ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அச்சிறுமிகளை நேரில் சந்திப்பதற்காக இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து, அவர்களை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தினார் என ஜெம்மா வட்ஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
20 முதல் 50 சிறுமிகள் ஜெம்மா வட்ஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தாம் நம்புவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சிறுமிகள் அனைவரும் தாம் 16 வயதான இளைஞனை காதலிப்பதாக எண்ணிக்கொண்டிருந்தனர்.
சிறுமிகளை மாத்திரமல்லாமல் அவர்களின் பெற்றோர்கள் சிலரையும் தான் சிறுவன் என நம்ப வைத்தார் ஜெம்மா வட்ஸ்.
இறுதியில், ஜெம்மா வட்ஸ் ஓர் ஆண் என்பதை பொலிஸாரே இனங்கண்டு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.சிறுவன் ஒருவனுடன் காதல் உறவில் இருப்பதாக மிக இளம் வயதான ஒரு சிறுமி தன்னிடம் கூறினார் என ஹாம்ப்ஷயர் பிரதேசத்திலுள்ள மருத்துவர் ஒருவர் பொலிஸாருக்கு 2018 மார்ச் மாதம் தகவல் தெரிவித்தமையே இவ்விடயம் அம்பலமாக வழிவகுத்தது.
இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தினர். ஜெம்மாவை 16 வயது சிறுவன் என்றே பொலிஸாரும் முதலில் எண்ணினர்.
ஜெம்மாவை லண்டனி லுள்ள அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஓர் யுவதி என்பது பொலிஸாருக்குத் தெரியவந்தது.
இது குறித்து பொலிஸார் அறிவித்தபோது, ஜேக் வட்ஸனை காதலித்துக் கொண்டிருந்த சிறுமிகள் பலரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
உலகமே நின்றுவிட்டதைப் போன்று உணர்ந்ததாக சிலர் கூறினர். சிலர் தற்கொலைக்கும் முயன்றனர்.
தீர்ப்பு அளிக்கப்பட்ட தினத்தில் ஜெம்மா வட்ஸ் நீதிமன்றத்துக்கு வந்தபோது…
பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஜெம்மா வட்ஸ், தான் ஜேக் எனும் பெயரில் 3 சிறுமிகளுடன் பாலியல் தொடர்புகளை வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார்.
2018 ஒக்டோபரில் அவர் மற்றொரு சிறுமியுடன் காணப்பட்ட நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
2019 நவம்பர் மாதம், பாலியல் ரீதியான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஜெம்மா வட்ஸ் ஒப்புக்கொண்டார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுசான் இவான்ஸ், ஜெம்மா வட்ஸுக்கு 8 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிகோல்ஸ் பிளம்பர் கூறுகையில், ‘இது ஓர் அதிர்ச்சிகரமான வழக்கு.
குற்றம்புரியும் ஒருவர், சிறார்களை சுரண்டுவதற்காக எந்தளவு தூரம் செல்லக்கூடும் என்பதை பெற்றோர்களுக்கு இது நினைவூட்டுகிறது’ என்றார்.
‘தமது பிள்ளைகளின் இணைய செயற்பாடுகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடுவதற்கான நம்பிக்கையை பெற்றோர்கள் கொண்டிருக்க வேண்டும்’ எனவும் அவர் கூறினார்.