பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியிருக்க இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்கல் வெளியிட்டிருந்த அறிவிப்பை அந்நாட்டின் ராணி இரண்டாம் எலிசெபத் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த மாற்றத்திற்கு தாம் முழுமையான ஆதரவை அளிப்பதாக கூறியுள்ள அவர், எனினும் அரச குடும்பத்தின் முழு நேர உறுப்பினர்களாக அவர்கள் இருக்கவே தாம் விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் நாட்களில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்கல் இருவரும் விலக உள்ளதாக அறிவித்த பிறகு, எதிர்காலத்தில் அவர்களது பங்கு என்னவாக இருக்கும் என்பது குறித்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹாரி மற்றும் மேகன் இருவரும் புதிய வாழ்க்கை தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள விருப்பத்திற்கு நானும் என் குடும்பமும் முழு ஆதரவு அளிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் ஏற்படும் காலத்தில் ஹாரி மற்றும் மேகன் இருவரும் கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் மாறி மாறி தங்கள் காலத்தை செலவழிப்பதற்கு பிரிட்டன் ராணி ஒப்புக் கொண்டுள்ளார்.
“என் குடும்பத்தில் இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு கொண்டு வருவது சிக்கலான ஒன்று. ஒரு சில வேலைகள் நிலுவையில் உள்ளன. ஆனால் வரும் நாட்களில் இது தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.
அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகவும், பொருளாதார சுதந்திரத்தை பெறும் வகையில் முழு நேரப் பணிக்கு செல்லவும் இருவரும் திட்டமிட்டுள்ளதாக இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்கல் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
தங்களுடைய நேரத்தை வட அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் செலவிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள், அரசி, காமன்வெல்த் மற்றும் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு மதிப்பளிக்கும் கடமையை தொடரவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
கனடாவில் ஹாரி – மேகன்
ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் கனடாவில் குடியேறப் போவது குறித்தும், அவர்கள் பாதுகாப்புக்கான நிதி குறித்தும் இதுவரை எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான கனடியர்கள் ஹாரி – மேகன் இங்கு குடியேற ஆதரவளிப்பார்கள் என்றும், எனினும் இது குறித்து இன்னும் நிறைய விவாதங்கள் நடக்க வேண்டியிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் சஸ்செக்ஸ் ராயல் சாரிட்டி என்ற தொண்டு அமைப்பை சொந்தமாக தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கனவே ஹாரி-மேகன் தம்பதியினர் தொடங்கிவிட்டனர்.
இந்த தொண்டு நிறுவனம் உள்ளூரை விட ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடைய ஒரு உலகளாவிய அமைப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட உள்ளது.
குடும்பத்திற்குள் எந்த சண்டையும் இல்லை
அரச வாழ்க்கை வாழ்வது மற்றும் ஊடக வெளிச்சத்தில் இருப்பது தங்களுக்கு கடினமாக இருப்பதாக அவர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், ஹாரியின் அண்ணனான இளவரசர் வில்லியமுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளியான செய்திகளை அவர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக இளவரசர் ஹாரி மற்றும் இளவரசர் வில்லியம் இருவரும் கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
வருத்தத்தில் பிரிட்டன் ராணி
ஜானி டைமண்ட்
அரச குடும்ப செய்தியாளர்
ராணி எலிசபெத் வெளியிட்ட அறிக்கை முறைசாரா மற்றும் தற்செயலான அறிக்கை. இது அவரது தனிப்பட்ட அறிக்கை என்று கூறலாம்.
ஹாரி மற்றும் மேகனின் முடிவு ராணிக்கு வருத்தம் அளிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் இருவரும் தற்போதைய நிலையில் தொடர்வதையே அவர் விரும்பியிருப்பார்.
ஆனால், அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களாக இருந்து விலகியிருக்கும் முடிவை அவர்கள் எடுத்திருந்தாலும், அவர்கள் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் என்று ராணி தெளிவுபடுத்தி இருக்கிறார்.
ஹாரி மேகன் தம்பதியின் எதிர்கால் நிலை, பங்கு என்ன, அரண்மனைக்கும் அவர்களுக்கும் இடையேயான உறவு என்ன, என்று பல கேள்விகள் இருக்கின்றன.
மேலும் இந்த முடிவை ராணி ஒரு நிகழ்வாக பார்க்காமல், ஒரு மாற்றமாக கருதுகிறார் என்பதாகத் தெரிகிறிது. சில நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று ராணி கூறியுள்ளார். ஆனால், எடுக்கப்படும் முடிவுகள் ஆய்வு செய்யப்பட பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம்.