சுமந்திரன் தமிழ் மக்களின் தலைவராக வருவதாக இருந்தால், அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடென, புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்  சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது வீட்டில், இன்று (14)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பல்வேறுபட்ட இன்னல்களை எதிர் கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளதாகவும் தற்போது வந்துள்ள அரசாங்கம் என்பது தமிழ் மக்கள் கொஞ்சமாவது அனுபவித்து வந்த அற்பசொற்ப  உரிமைகளைக் கூட இல்லாமல் செய்கின்ற போக்கினை தான் தங்களால் அவதானிக்கக்கூடியதாக உள்ளதாகவும் சாடினார்.

“ஐக்கிய தேசியக்  கட்சிக்கு ஆதரவு வழங்கி கொண்டு, தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வருகின்ற பொதுத் தேர்தலை மய்யமாகக் கொண்டு தமிழ் மக்கள் மீது பல்வேறு பொய்களை கூறி மக்களிடம் வாக்கு கேட்கும் ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

“ஏற்கெனவே சம்பந்தன் தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார். மாவை சேனாதிராஜா அவர்களும் பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என்கின்ற ஒரு கருத்தும் தற்போது பரவி வருகின்றது,  இவர்கள் தேசியப் பட்டியல் மூலம் உள்வாங்கப்படலாம் என்ற ஒரு கருத்தும் கூட்டமைப்பு வசமுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் கூறப்பட்டு வருகின்றது.

“தேர்தலில் போட்டியிடாமல் தலைவர்கள் தேசியப்பட்டியல் மூலம் வருவதற்கான காரணம் என்னவென்றால், மக்கள் அவர்களை நிராகரித்து விடுவார்கள் என்ற யோசனையில் அவர்கள் இவ்வாறான கருத்துகளை முன்வைத்து வருவதனையும் எங்களால் காணக்கூடியதாக உள்ளது” எனவும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கடந்த அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

மாறாக அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்திருந்தனர். இதுவே அவர்களின் தவறான நோக்கமாகவும் இருந்தது.

மாறாக கடந்த கால அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பினை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டதே தவிர, அவர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் பெற்றுக் கொண்டு முடிந்திருக்கவில்லை.

மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் எடுத்த தவறான முடிவுகளே தமிழ்மக்களை இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.

அத்துடன், பதவி ஏற்ற இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடமாகாண ஆளுநர் சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடி உள்ளது.

கம்பரெலிய திட்டத்தினூடாக கடந்த கால அரசாங்கத்தின் மூலம் விடுவிக்கப்பட்ட நிதிகளை தற்போதுள்ள அரசாங்கத்தின் ஊடாக விடுவிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயன்று வருகின்றது.

இதன்மூலம் அவர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களை கம்பரெலிய திட்டத்தினூடாக சில திட்டங்களை மேற்கொண்டு பொதுத் தேர்தலில் வாக்கு வங்கியை நிறைவு செய்வதற்கு அவர்கள் இவ்வாறான திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

Share.
Leave A Reply