முன்னாள் போராளிகள் பலரின் ஒருங்கிணைவில் உருவாகியுள்ள விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை என்ற அரசியல் கட்சியின் முதலாவது அங்குரார்ப்பண மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

அண்மையில் வவுனியாவில் ஒன்று கூடியிருந்த முன்னாள் போராளிகள் அணிகளான ஜனநாயக போராளிகள் கட்சி, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போரளிகள் அணி, தமிழர் தாயகக் கட்சி, தமிழர் தேசியக் கட்சி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக சமூக செயற்பாடுகளில் பங்கேற்றிருந்த தரப்பினர் உள்ளிட்டவர்கள் சமகால சூழலில் ஒருங்கிணைந்து செயற்படுவதன் அவசியம் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தனர்.

மாவீர்களின் உறவுகளையும் முன்னாள் போராளிகளையும், தாயக மக்களையும் மையமாக வைத்து அரசியல் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த இணக்கப்பாட்டினை அடுத்து 14 பேர் கொண்ட தலைமைத்துவக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது.

மேலும் முன்னாள் போராளிகள் பலர் விடுதலைப்புலிகள் என்ற சொற்பதம் உள்ளடங்கும் வகையிலேயே கட்சியின் பெயர் அமைய வேண்டும் என்பதில் அதீத விருப்பினை கொண்டிருந்தமையை முன்னிலைப்படுத்தி கட்சியின் பெயர் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.

எனினும் விடுதலைப்புலிகள் என்ற சொற்பதத்தினை உள்ளீர்க்கும் பட்சத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான நகர்வுகளைச் செய்கின்றபோது சிக்கல்கள் உருவாகும் என்ற அடிப்படையில் ஒரு சிலர் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் கட்சியொன்று பதிவு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் ‘விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை’ என்ற பெயர் உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply