இரண்டு பெண்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை அபகரித்துச் சென்றார் எனக் கூறப்படும் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவங்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு புறநகர்ப் பகுதியிலும் ஏறாவூர் நகரிலும் இடம்பெற்றுள்ளன.
மட்டக்களப்பின் புறநகர்ப் பகுதியான சுவிஸ் கிராமத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்த தங்கச் சங்கிலியை அபகரித்த சந்தேக நபர் கடற்கரையோர சவுக்கடி வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் ஏறாவூரை நோக்கிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், ஏறாவூர் பழைய சந்தை வீதியில் மற்றொரு பெண்ணின் தங்கச் தங்கச் சங்கிலியையும் குறித்த நபர் அபகரித்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து துரிதமாகச் செயற்பட்ட ஏறாவூர் பொலிஸார், குறித்த பிரதேசங்களில் காணப்பட்ட கண்காணிப்புக் கெமரா பதிவுகளின் உதவியுடனும் புலனாய்வு விசாரணை அடிப்படையிலும் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரை நேற்றுக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் பயன்படுத்திய மோட் டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஏறாவூர் பொலிஸாரும் மட்டக்களப்பு பொலிஸாரும் இணைந்து இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.