இலங்கையில் யானை ஒன்று விடுதிக்குள் உல்லாசமாக நடந்து செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆனால் உண்மையில் இந்த யானை தினமும் அந்த விடுதிக்கு வருகை தரும் என்றும் அங்கு சமையல் அறை வரை சென்று உணவை உண்ணும் என்றும் ஜெட்விங் யாளா விடுதி ஊழியர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் தங்கும் விடுதிகளை தேர்வு செய்யும்போது அனைவரும் யானை சவாரியையும் சேர்த்து தேர்வு செய்ய விரும்புவார்கள். சிலர் விடுதியில் உள்ள ஜன்னல் கதவுகள் வழியே யானையை காண விரும்புவார்கள்.

ஆனால் இலங்கையில் உள்ள ஜெட் விங் யாளா விடுதிக்கு யானையே தினமும் வருகை தருகிறது ஆச்சரியம் தருவது.

அந்த யானையின் பெயர் நாட்டா கோட்டா. நாட்டா கோட்டா என்றால் சிறிய வால். இந்த யானை விடுதிக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை தனது தும்பி கையால் தட்டும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியை பலர் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.

இலங்கையின் யாளா தேசிய பூங்காவிற்கு அருகில் ஜெட் விங் விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், ”இந்த யானை 2013ம் ஆண்டில் இருந்தே அவ்வப்போது வருவதுண்டு” என்றார்.

மேலும் கடலோரம் உள்ள சில ரிசார்ட்டுகளுக்கும் இந்த யானையின் வருகை காணப்படும் என கூறுகின்றனர்.

விடுதியில் உள்ள செடிகளுக்கு மத்தியிலேயே நாட்டா கோட்டா யானை உறங்கும் என்கின்றனர். பழங்கள் மற்றும் உணவுகளை திருடும் பழக்கமும் நாட்டா கோட்டா யானைக்கு உள்ளது.

எனவே விடுதியில் தங்கும் சுற்றுலாவாசிகள் தங்கள் உணவு மற்றும் பழங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

விடுதியின் சமையல் அறையை சுற்றியுள்ள மின் வேலியால் தற்போது சமையல் அறை வரை நாட்டா கோட்டா செல்வதில்லை.

”நாட்டா கோட்டா சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும், விடுதிக்கு வருகை தரும் விருந்தினர்கள் யானையின் அமைதியான நடவடிக்கைகளை கண்டு மகிழ்வதாக” கூறுகின்றனர் விடுதி ஊழியர்கள்.

Share.
Leave A Reply