சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேன் நாட்டு பயணிகள் விமானத்தின் கறுப்பு பெட்டி தரவுகளை உடனடியாக பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று கனட நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வலியுறுத்தியுள்ளார்.
எனினும் கறுப்புப் பெட்டி தொடர்பில் பகுப்பாய்வினை மேற்கொள்ள ஈரானிடம் உரிய உபகரணங்கள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வார தொடக்கத்தில், ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Abbas Mousavi,
“விமான விபத்தில் உயிரிழந்த இரட்டைப் பிரஜைகளை ஈரானிய குடிமக்களாக தெஹ்ரான் கருதுவதாக நாங்கள் கனடாவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இது குறித்தும் கருத்து தெரிவித்த ட்ரூடோ, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இரட்டை குடியுரிமையை ஈரான் அங்கீகரிக்கவில்லை என்பது கவலையளிப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் விருப்பங்களை ஈரான் மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஈரானின் இமாம் கோமெய்னி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஜனவரி 8 ஆம் திகதி உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிங் விமானம் கியேவ் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது.
மொத்தம் 167 பயணிகளும், 9 பணியாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர். அவர்களில் ஈரான், கனடா, உக்ரேன், ஆப்கானிஸ்தான், ஜேர்மனி, சுவீடன் மற்றும் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்தோர் உள்ளனர்.
விபத்துக்குள்ளான இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஈரானிய இராணுவம் தற்செயலாக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஒப்புக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.