மனைவியை கணவர் சுமந்து கொண்டு ஓடும் போட்டி தமிழகத்தின் தென் காசி மாவட்டத்தில் நடைபெற்றது.தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீரசிகாமணி கிராமத்தில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் 23 ஆவது பொங்கல் விளையாட்டு விழா நடத்தப்பட்டது.
இவ்விழாவில் பல்வேறு வயதினரும் கலந்துகொண்ட இசை நாற்காலி போட்டி, பானை உடைத்தல், உறியடித்தல், இளவட்டக்கல் தூக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
பொங்கல் விளையாட்டு விழாவின் விசேட நிகழ்ச்சியாக திருமணமான ஆண்கள் தங்களது மனைவியை முதுகில் சுமந்து ஓடும் போட்டி நடந்தது.
இதில் மொத்தம் 5 தம்பதியினர் கலந்துகொண்டனர்.வீதியில் நடத்தப்பட்ட போட்டியில் தங்கள் இல்லத்தரசிகளை குழந்தைகளை போல கையில் தூக்கிக் கொண்டும், முதுகில் உப்பு மூட்டையாக சுமந்து கொண்டும் கணவன்மார்கள் தயாராக இருந்தனர்.
போட்டி ஆரம்பிக்கப் பட்டதும் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு மனைவியரை தூக்கிக் கொண்டு ஓடினர்.
மனைவியை குழந்தை போல கையில் தூக்கிச்சென்ற கணவன்மார் தங்கள் மனைவியரை நடுரோட்டில் வீழ்த்தினர்.
இறுதியில் மனைவியரை உப்பு மூட்டை போல சுமந்து சென்ற இருவர் மட்டும் வெற்றிகரமாக எல்லைக் கோட்டை கடந்தனர்.பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மனைவியை கணவன் தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகின்றன. தம்பதியினரிடையே இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக 1800 ஆண்டகளவில் பின்லாந்தில் தொடங்கப்பட்ட இந்த பந்தயம், பின்னர், பல நாடுகளுக்கும் பரவியது.
ஒவ்வொரு ஆண்டும் பின்லாந்து, பிரிட்டன், அவுஸ்திரேலியா, வடஅமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மனைவியை சுமந்து செல்லும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தற்போது இந்த போட்டி சாம்பியன்ஷிப் போட்டியாக நீரிலும், நிலத்திலும், சகதியிலும் ஜோடிகள் இறங்கிச் செல்லும் விதமாக தக்க பாதுகாப்பு விதிமுறைகளுடன் நடத்தப்படுகிறது. இதில் உலக சம்பியன்ஷிப் போட்டியும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.