மிருசுவில் பகுதியில் இன்று (22) அதிகாலை மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிருசுவில் படித்த மகளிர் குடியேற்ற திட்டத்திற்கு அண்மையில் இன்று அதிகாலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
வீதியோரமாக சடலம் காணப்பட்டது. உடலில் அடி, வெட்டு காயங்கள் காணப்பட்டன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அந்த பகுதியை சேர்ந்த குலேந்திரன் என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தமிழ்பக்கம் சில தகவல்களை திரட்டியது. விசாரணையில் ஈடுபடும் பொலிஸ் தரப்புடன் பேசியதில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று அதிகாலை இந்த சடலத்தை, மணல் அள்ளச் சென்ற உழவு இயந்திரக்காரர்கள் கண்டனர்.
பெண்ணொருவரும், இளைஞன் ஒருவனும் அந்த சடலத்தை வீதியில் சுமந்து கொண்டு வந்ததாகவும், உழவு இயந்திரத்தை கண்டதும் சடலத்தை வீதியில் போட்டு விட்டு ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதியோரமாக சடலத்தை அவதானித்து, அந்த பகுதி இளைஞர்களிற்கு அறிவித்தனர். இளைஞர்கள் அங்கு ஒன்று கூடியதையடுத்து, கிராமசேவகருக்கு விடயம் அறிவிக்கப்பட்டது.
கிராமசேவகர் ஊடாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், அங்கு நடத்திய ஆய்வில், கொலை நடந்து அதிக நேரமாகியிருக்கவில்லையென்பதை கண்டறிந்தனர்.
உடனடியாக பொலிஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சடலத்திலிருந்து சென்று, சற்று தள்ளியிருந்த பெண்ணொருவரின் வீட்டிற்கு சென்றது. முன்னாள் போராளியான அந்த பெண், தற்போது அரசியல் தொடர்புள்ளவராக ஊரில் சொல்லப்படுகிறது. அந்த பெண்ணிற்கும், கொல்லப்பட்டவரிற்கும் ஏற்கனவே அறிமுகமிருப்பதாக ஊரில் ஏற்கனவே தகவலிருந்தது.
36 வயதான அந்த பெண், வீட்டில் தனித்து வாழ்ந்து வந்தார். சில வருடங்களின் முன்னர் கணவர் பிரிந்து சென்றுள்ளார். அது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அதிகாலையில் பொலிசார் அங்கு சென்றபோது, அந்த பெண் வீட்டை கழுவியிருந்தார். அதிகாலையில் எதற்காக வீடு கழுவப்பட்டுள்ளது என பொலிசார் வினவியபோது, விரதத்திற்காக வீடு கழுவியதாகவும், சமைக்கவுள்ளதாகவும் அவரால் பதிலளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிசார் வீட்டை சோதனையிட்டபோது, வீட்டின் அறைச்சுவர்களில் இரத்த கறைகள் அவதானிக்கப்பட்டதாகவும், அதையடுத்து பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிகாலையில் அந்த நபர் வீட்டுக்குள் நுழைந்து அத்துமீற முயன்றபோது, தற்காப்பிற்காக தாக்குதல் நடத்தியதாக வாக்குமூலமளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, வீட்டு கிணற்றிற்குள் இருந்து கொலைக்கு பயன்படுத்தியதென சந்தேகிக்கப்படும் கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்டவை மீட்கப்பட்டது.
அவரது வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்ததாக தெரிவிக்கப்படும் இளைஞன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அந்த பெண் பொலிசாரின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.