இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவுகள், சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியானதை அடுத்து ஏற்பட்ட கொதிநிலை அடங்குவதற்குள், அவர் நேற்றும் நேற்று முன்தினமும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் வெளிப்படுத்திய தகவல்கள் இலங்கை அரசியலிலும் அதற்கு அப்பாலும் மேலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரஞ்சன் ராமநாயக்க, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 100 பேரிடம் மதுபானசாலை நடத்தும் அனுமதிப்பத்திரம் உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 75 பேர் மணல் ஏற்றும் பெர்மிட் வைத்துள்ளதாகவும், இருவர் போதைத் தூள் வியாபாரம் செய்வதாகவும், இன்னொருவர் சூதாட்ட வியாபாரம் (காசினோ) நடத்துவதாகவும் தெரிவித்திருந்தமை பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கு காவலர்களால் அழைத்து வரப்பட்ட நிலையிலேயே, ரஞ்சன் ராமநாயக்க நேற்றும், நேற்று முன்தினமும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டார்.
என்ன நடந்தது?
ரஞ்சன் ராமநாயக்க வசித்துவரும் – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய உத்தியோகபூர்வ இல்லத்தில் இம்மாதம் 4-ஆம் தேதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்ற அனுமதியுடன் தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.
அதன்போது, அங்கிருந்து அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாத கைத்துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டதோடு, ஏராளமான இறுவட்டுகளும் (டிவிடி), ‘ஹார்ட் டிஸ்க்’ களும் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட இறுவட்டு மற்றும் ‘ஹார்ட் டிஸ்க்’களில் ரஞ்சன் ராமநாயக்கவினுடையவை என நம்பப்படும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் அடங்கியிருந்ததாகத் தெரியவருகிறது.
அன்றைய தினம் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், மறுநாள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அதன்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் எனக் கூறப்படும் சில ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகத் தொடங்கின.
அவற்றில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நீதிபதிகள், ஊடகவியலாளர்கள், போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடிய ஒலிப்பதிவுகள் முக்கியமானவையாகும்.
இவ்வாறு வெளியான தொலைபேசி உரையாடல்கள் பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ரஞ்சனுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் நீதிவான் தம்மிக்க ஹேமபால மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் பிலப்பிட்டிய ஆகியோர் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அதேவேளை, ரஞ்சனுடன் உரையாடியதாகக் கூறப்படும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்கு மூலமொன்றினைப் பதிவு செய்து கொண்டது.
அதன்போது ரஞ்சன் ராமநாயக்கவுடன் தான் உரையாடியதாக வெளியாகிவுள்ள குரல் பதிவு உண்மையானவை என்று முன்னாள் நீதிபதி பத்மினி ரணவக்க ஒப்புக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ரஞ்சன் ராமநாயக்கவை இடைநிறுத்துவதாக, அந்தக் கட்சி அறிவித்தது.
மீண்டும் கைது
இந்தப் பின்னணியிலேயே, நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த 14ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டு, மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது அவரை இம்மாதம் 29ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில்தான் விளக்க மறியலின் பொருட்டு கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, நேற்றும் நேற்று முன்தினமும் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளும் பொருட்டு, சிறைச்சாலை வாகனத்தில் பாதுகாப்புடன் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
ரஞ்சனின் நாடாளுமன்ற உரை
செவ்வாய்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க 30 நிமிடங்கள் நீடித்த உரையொன்றினை ஆற்றினார்.
அதன்போது அதிர்ச்சிகரமான, திகைப்பூட்டும் வகையிலான பல்வேறு தகவல்களை அவர் வெளிப்படுத்தினார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதம மந்திரியுமான மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடிய 07 பதிவுகள் தன்னிடம் உள்ளதாகவும் தனது உரையில் ரஞ்சன் தெரிவித்தார்.
“எனது தொலைபேசி குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழு ஒன்றை அமைக்கப் போவதாக பிரதமரும் ஜனாதிபதியும் கூறியுள்ளனர்.
அதனைச் செய்யுங்கள், அந்த ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்க ஆவணங்களுடன் நான் வருவேன்,” என்றும் ரஞ்சன் இதன்போது கூறினார்.
தன்னால் கண்டறியப்படும் ஊழல், மோசடிகளை வெளிப்படுத்துவதற்கான சாட்சியங்களுக்காவே இவ்வாறு தொலைபேசி உரையாடல்களை தான் ஒலிப்பதி செய்ததாக நாடாளுமன்றத்தில் கூறிய ரஞ்சன் ராமநாயக்க; தன்னிடமுள்ள குரல் பதிவுகளை நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
“மோசடிகளுக்கு எதிரான எனது போராட்டத்தின் பொருட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்ட குரல் பதிவுகள் வெளியானதால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்புக் கோருகிறேன்” என்றும் இதன்போது அவர் கூறினார்.
ரஞ்சனின் உரை குறித்து மனோ கருத்து
இந்த நிலையில் ‘இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் ரஞ்சன் ராமநாயக்க செவ்வாய்கிழமையன்று பேசியது போன்ற வெளிப்படுத்தல் (Revelation) உரையை அதற்கு முன்னர் தான் ஒருபோதும் கேட்டதில்லை’ என்று தமிழ் முற்போக்கு முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.