எனக்கு 80 வயதாகியும் தினமும் 80 படிகளை ஏறி, இறங்க சிரமமாகிவிட்டதன் காரணத்தினாலேயே நான் எதிர்க்கட்சி தலைவருக்கான இல்லம் ஒன்றை கேட்டேன்.
எனினும் இரு ஆண்டுகளின் பின்னரே எனக்கு சலுகை கிடைத்தது. எதிர்க்கட்சித் தலைவர் வீட்டில் தொடர்ந்து குடியிருப்பதற்கு அனுமதிக்குமாறு நான் சபாநாயகர் கரு ஜயசூரியவிடமோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களையோ கோரவில்லை.
அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை அனைத்தும் அவர்கள் தமது சொந்த விருப்பத்துக்கமையவே செய்தனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சபையில் தெளிவுபடுத்தினார்.
எனினும் சம்பந்தனுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் சலுகைகளை தொடர்ந்தும் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சபையில் அறிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் இல்லம் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வசம் இருப்பதாக ஆளும் தரப்பின் உறுப்பினர்களான அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சில உறுப்பினர்கள் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இது குறித்த விளக்கம் ஒன்றினை சம்பந்தன் முன்வைத்தார்.
இதன்போது அவர் கூறுகையில், நான் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக தெரிவாகினேன்.
அப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக சம்மிட் பிளட்ஸ் 2 எனும் வீட்டில் இருபது வருடங்களுக்கு அதிகமான காலம் நான் வசித்து வந்தேன்.
அங்கு அந்த வீட்டில் ஒவ்வொரு தடவையும் நுழையும் போதும் வெளியேறும் போதும் 60 – 70 படிகள் ஏறி இறங்கவேண்டியிருந்தது.
எனது வயது முதிர்வினால் எனக்கு எண்பது (80) வயதிற்கு மேலாகிறது. ஆகவே எனது வயதில் இது மிகவும் அசௌகரியமாகவும் சிரமமாகவும் இருந்தது.
எனினும் நான் அதனைத் தாங்கிக் கொண்டேன். எனினும் எனது கோரிக்கைக்கு அமைய நான் எதிர்க்கட்சித் தலைவராகி இரண்டு வருடங்கள் கழிந்த பின்னர் 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலேயே எதிர்க்கட்சித் தலைவருக்குரிய வீடு எனக்கு வழங்கப்பட்டது.
எனவே இரண்டு வருடங்களின் பின்னர் 2017 செப்டெம்பர் மாதத்திலேயே நான் அந்த வீட்டில் குடிபுகக் கூடியதாகவிருந்தது.
எனக்கான ஒரு வீட்டை அவர்கள் தேடியபோது நான் ஒரு வீட்டை வாடகைக்குப் பெறலாம் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
அது ஏற்படுத்தக்கூடிய அதிக செலவைக் கருத்திற்கொண்டு நான் அதனைச் செய்ய விரும்பவில்லை என்றார்.