காடுகளில் வவ்வால்களை சாப்பிடும் பாம்புகளில் இருந்து புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
பீஜிங்: சீனாவில் வுகான் நகரின் மையப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் 1072 பேர் கடுமையான காய்ச்சல், இருமல், தும்மலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த 1072 பேரையும் காப்பாற்ற சீன டாக்டர்கள் குழு போராடி வருகிறது. எந்த தடுப்பு மருந்துக்கும் கட்டுப்படாமல் கொரோனா வைரஸ் தீவிரமாக செயல்படுவதால் டாக்டர்கள் திகைத்துள்ளனர்.
கொரோனா வகை வைரஸ்கள் வரிசையில் இதுவரை 6 வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த 6 வகை வைரஸ் மூலம் பரவும் நோய்களைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.
ஆனால் தற்போது சீனாவில் பரவி இருப்பது கொரோனாவின் 7-வது வகை புதிய வைரசாகும். இந்த 7-வது வைரஸ் சற்று அதிக ஆக்ரோஷத்துடன் உள்ளது. இதனால் இதை எதிர்கொள்ள முடியாமல் வுகான் நகர மக்கள் தவித்தபடி உள்ளனர்.
இந்த 7-வது வகை வைரஸ் எந்த விலங்கிடம் இருந்து எப்படி, எந்த வகையில் உருவானது என்பதை தெரிந்து கொண்டால்தான் அதற்கு ஏற்ப தடுப்பு மருந்துகளை நிபுணர்களால் கண்டுபிடிக்க முடியும். அதற்கான முயற்சிகளில் சீன மருத்துவர்கள் குழு ஈடுபட்டுள்ளது.
வுகான் நகரில் உள்ள இறைச்சி விற்பனை சந்தையில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது உறுதிபடுத்தப்பட்டதால் அந்த சந்தையில் இருந்த இறைச்சிகள், உயிருடன் இருந்த ஆடு, மாடு, பன்றி, கோழி, பாம்பு, நரி, எலி, பூனை, நாய் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது.
இதற்கு முன்பு பரவிய பன்றி காய்ச்சல், சார்ஸ் காய்ச்சல், ஜிகா வைரஸ் காய்ச்சல் ஆகியவை வவ்வாலில் இருந்து வந்து இருப்பதை மருத்துவ நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
எனவே கொரோனா வைரசும் வவ்வால் மூலம்தான் பரவி இருக்கும் என்று சந்தேகப்பட்டனர். அந்த சந்தேகத்தின் அடிப்படையில்தான் முதல் கட்ட ஆய்வுகள் அமைந்தது.
கொரோனா வைரஸ்
அப்போது கொரோனா வைரசுக்கும் வவ்வாலுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வவ்வாலை சாப்பிடும் மற்ற உயிரினங்கள் பற்றிய ஆய்வு நடந்தது.
அதில் சீனாவில் உள்ள கட்டுவிரியன் பாம்புகள் அதிக அளவு வவ்வால்களை வேட்டையாடி உணவாக உட்கொள்வது தெரிய வந்தது.
சீனாவில் கட்டுவிரியன் பாம்புகள் அதிகம் உள்ளன. இந்த பாம்புகளில் விஷத்தன்மை குறைந்த வகை பாம்புகளும் உள்ளன. அந்த பாம்புகளை சீனர்கள் உணவாக சாப்பிடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
குறிப்பாக சூப் வைத்து சாப்பிடுவதற்கு இந்த வகை பாம்புகளை சீனர்கள் அதிகம் விரும்பி வாங்குவது உண்டு. அதிலும் உயிருடன் உள்ள பாம்புகளை வாங்கி சென்று சமைத்து சாப்பிடுவார்கள். இந்த பாம்புகளை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்தபோது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
கொரோனா வகை வைரஸ்கள் அடர்த்தியாக உள்ள வவ்வால்களை சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுமாம்.
அப்படி நோய் பாதிப்புக்குள்ளாகும் பாம்புகளில் இருந்து ஏற்கனவே உள்ள வவ்வாலின் வீரியம் காரணமாக புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
எல்லா கட்டுவிரியன் பாம்புகளிலும் இந்த வைரஸ் உள்ளதா என்ற ஆய்வு நடந்து வருகிறது.
மேலும் கட்டுவிரியன் மற்றும் நல்ல பாம்பில் இருந்து எப்படி புது வைரஸ் தோன்றுகிற சூழ்நிலை ஏற்படுகிறது என்ற ஆய்வும் நடக்கிறது.
இதற்கு விடை கிடைத்துவிட்டால் கொரோனா வைரசை ஒழிக்க மருந்து கண்டுபிடித்து விடலாம் என்று நிபுணர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.