சென்னை வளசரவாக்கம் வேலன் நகர் 4-வது தெருவில் வசித்து வந்தவர் தாரகேஸ்வரி (வயது 56). இலங்கையைச் சேர்ந்த இவர், கடந்த சில வருடங்களாக சென்னையில் தனது தாய் வேதநாயகி (80), மகன் ஆதிசன்(32) ஆகியோருடன் வசித்து வந்தார்.
தாரகேஸ்வரியின் தம்பி குகதாசன்(49). இவர், சபரிமலைக்கு மாலை அணிந்து இருந்ததால் இலங்கையில் இருந்து கடந்த 13-ந்தேதி சென்னை வந்தார்.
பின்னர் சபரிமலைக்கு சென்றுவிட்டு திரும்பிய குகதாசன், தனது அக்கா தாரகேஸ்வரி வீட்டில் தங்கி இருந்தார்.
மதுபாட்டில் மாயம்
குகதாசனுக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. சபரிமலைக்கு சென்றுவிட்டு வந்தவுடன் மீண்டும் மதுகுடிக்க தொடங்கினார். நேற்று முன்தினம் 2 மதுபாட்டில்களை வீட்டுக்கு வாங்கி வந்தார்.
அதில் ஒரு பாட்டில் மதுவை குடித்துவிட்டு மற்றொரு பாட்டிலை வீட்டில் மறைத்து வைத்து இருந்தார்.
பின்னர் இரவில் மீண்டும் மது குடிப்பதற்காக தான் மறைத்து வைத்த மதுபாட்டிலை தேடியபோது மாயமாகி இருந்தது.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தனது அக்கா தாரகேஸ்வரிதான் மதுபாட்டிலை எடுத்து மறைத்து வைத்து இருப்பதாக நினைத்து அவரிடம் கேட்டார். ஆனால் தாரகேஸ்வரி, தனக்கு அதுபற்றி தெரியாது என்றார்.
குத்திக்கொலை
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த குகதாசன், வீட்டில் இருந்த கத்தியால் தனது அக்கா தாரகேஸ்வரியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
அவரது அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்து தடுக்க முயன்ற தாரகேஸ்வரியின் மகன் ஆதிசன், தாய் வேதநாயகி ஆகிய இருவரையும் குகதாசன் கத்தியால் குத்தினார். இதில் இருவரும் காயமடைந்தனர்.
வலியால் 3 பேரும் அலறி துடித்தனர். இவர்களின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், தாரகேஸ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த ஆதிசன், வேதநாயகி இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தம்பி கைது
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. உதவி கமிஷனர் மகிமைவீரன், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குசென்று கொலையான தாரகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடிபோதையில் இருந்த குகதாசனை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். தாரகேஸ்வரியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குடிபோதையில் மதுபாட்டிலை மறைத்து வைத்ததாக கூறி அக்காவை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது