இராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது குறைந்தது மூன்று ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன..

அமெரிக்க தூதரகத்தின் உணவு விடுதியை ஒரு ஏவுகணை தாக்கியது. மற்ற இரண்டு ஏவுகணைகள் தூதரகத்திலிருந்து சற்று தொலைவில் விழுந்தது என ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

_110656669_cb991b22-5f3f-4663-91cc-e4ad094adaa4

குறைந்தது மூன்று பேர் காயமடைந்ததாகப் பாதுகாப்புப் படையினர் சிலர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர். இத்தனை வருடங்களில் இவ்வாறான தாக்குதல் நடத்தப்படும்போது தூதரக ஊழியர்கள் காயமடைவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

இதுவரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இராக்கில் உள்ள இரான் ஆதரவு படையினர் இந்த தாக்குதலை நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

இராக்கின் பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி இந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எங்களை சண்டைக்கு இழுக்காதீர்கள் என்றும் அவர் கூறி உள்ளார்.

அமெரிக்க அரசு கட்டமைப்புகள்

இராக்கில் உள்ள அமெரிக்க அரசு கட்டமைப்புகளைப் பாதுகாக்க இராக் அரசை அமெரிக்க உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்தையும் இராக் ராணுவ தளத்தில் பணியமர்த்தப்பட்ட அமெரிக்கத் துருப்புகளைக் குறி வைத்தும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது.

_110656671_6690e59a-5f03-45d5-a3a7-58aa8cf8f5ec

இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சமீபமாக நிலவும் மோதலில் இராக்கும் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. இரானின் அதிகாரமிக்க ராணுவ தளபதி காசெம் சுலேமானீ ட்ரோன் தாக்குதலால் ஜனவரி 3ம் தேதி பாக்தாதில் கொல்லப்பட்டார்.

மேலும் இராக்கில் உள்ள அமெரிக்க துருப்புகளை வெளியேற்ற இராக்கின் அதிகாரமிக்க ஷியா கிளேரிக் அமைப்பினர் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி உள்ளனர்.

ஏற்கனவே , இராக்கிலிருந்து அந்நியப் படைகள் வெளியேற வேண்டும் என்று இராக் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விலை மதிப்பு மிக்க விமான தளம்

இதற்கு எதிர்வினையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “எங்களுக்கு அங்கு (இராக்கில்) அசாதாரணமான, விலை மதிப்பு மிக்க விமான தளம் உள்ளது. அதைக் கட்டுவதற்குப் பல நூறு கோடி டாலர்கள் செலவு பிடித்தது. எங்களுக்கு அந்தப் பணத்தைத் திருப்பித் தந்தால் ஒழிய நாங்கள் வெளியேறமாட்டோம்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், இராக்கில் உள்ள அமெரிக்க அரசு கட்டமைப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என அமெரிக்க அரசாங்கம் கோரியுள்ளது.

 

Share.
Leave A Reply