உலகின் மிகப்பழைமையான தொழிலாகக் கருதப்படும் பாலியல் தொழில், பல நாடுகளில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், மற்றும் சில நாடுகளில் வரையறுக்கப்பட்ட வகையில் சட்ட ரீதியாக்கப்பட்டுள்ளது.
நமது அயல்நாடான இந்தியாவில் இத்தொழில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அதேநேரம், பாலியல் தொழிலுக்கு பெயர் பெற்ற, சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்துள்ள மற்றும் அதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் ஆசிய நாடான தாய்லாந்தில் அது சட்ட விரோதமானதாகவே கருதப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்த வரையில், பாலியல் தொழிலானது சட்டவாக்க கட்டுரை 360(சி) பிரிவின்படி, சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட தொழிலாகவே கருதப்படுகிறது.
இத்தொழில் அயல்நாடுகளில் உள்ளதைவிட இலங்கையில் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. எனினும் ஏறத்தாழ 40,000 பெண்கள் இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், 30,000ற்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைகள் பதிவுசெய்யப்படுவதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
அதேநேரம் ஐக்கியநாடுகள் அபிவிருத்திக்கூட்டம், ஐ.நா.சனத்தொகை நிதியம் என்பன வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய ஆய்வின் பிரகாரம் தயாரித்துள்ள 210 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், சீனா, மியன்மார், கம்போடியா ஆகிய நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தால் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
அநேகமான ஆசிய நாடுகள் பாலியல் தொழிலை தடை செய்துள்ளதால், பாலியல் தொழிலாளர்கள், சட்டத்துக்கு புறம்பான வகையிலும், தலைமறைவாகவுமே இத்தொழிலில் ஈடுபடுவதால், எயிட்ஸ் மற்றும் வேறு பால்வினைத் தொற்றுகளுக்கும் அவர்கள் தள்ளப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் பொதுவாக பாலியல் தொழிலாளர்கள் விபசார விடுதிகள், நடன கிளப்புகள், உடல் பிடிப்பு நிலையங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், உல்லாச விடுதிகள் என்பவற்றை மையமாகக் கொண்டு இயங்குகின்றனர்.
பின்தங்கிய இடங்களில் சேரிப்புற வீடுகள், விடுதிகள், ஒதுக்குப்புறங்கள் என்பவற்றையும் இவர்கள் தமது தொழிலுக்காகக் பயன்படுத்துகின்றனர்.
வறுமை, ஏமாற்றங்கள், கணவரால் மற்றும் குடும்பத்தால் கைவிடப்பட்ட நிலை போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ள போதிலும், வசதி வாய்ப்புகளுக்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும், உல்லாசத்துக்காகவும், இத்தொழிலில் ஈடுபடும் பெண்களும் உள்ளனர்.
கிராமப்புறங்களிலும், பின்தங்கிய பகுதிகளிலுமிருந்து கொழும்பு போன்ற பெருநகரங்களுக்கு வறுமையின் நிமித்தம் தொழில் தேடி வரும் பெண்களும், தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளால் தமது வறுமையை சமாளிப்பதற்கும், குடும்பத்தை கொண்டு நடத்துவதற்கும் இத்தொழிலில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
அதேநேரம் metropolitan Cities எனப்படும் கொழும்பு போன்ற பெருநகரங்களில் படித்த, தொழில் செய்யும், வசதியான இளம்பெண்கள் கூட உல்லாசத்துக்காகவும், மேலதிக வருமானத்துக்காவும் இத்தொழிலில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சிக்குரிய உண்மையாகும்.
போர்காலப்பகுதியில் கணவர்மாரை இழந்த பல பெண்கள், தமது குழந்தைகளை காப்பாற்றுவதற்கும் குடும்ப வறுமையை போக்குவதற்கும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட துரதிஷ்டவசமான நிலையும் பல இடங்களில் இடம்பெற்றிருக்கின்றன.
கணவரால் கைவிடப்பட்ட திருமணமான பெண்கள் மாத்திரமன்றி, திருமணமாகாத இளம் பெண்கள் கூட தமது குடும்ப சூழ்நிலைகள், வறுமை காரணமாக இத்தொழிலில் ஈடுபடுகின்றனர்.
கணவரை இழந்த பெண்ணொருவர் தனது 6 பிள்ளைகளை பராமரிப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறார்.
சாதாரண தொழில் மூலம் கிடைக்கும் மாத வருமானத்தில் தனது பிள்ளைகளையும் பராமரித்து, நாளாந்த செலவை ஈடுகட்ட முடியாததால், எவரது உதவிகளும் அற்ற நிலையில் இத்தொழிலில் ஈடுபட தான் நிர்பந்திக்கப்பட்டதாக கூறுகிறார்.
தம்மிடம் வரும் ஆண்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ள தாம், சமூகத்தில் உள்ள ஏனையவர்களின் கீழ்த்தரமான பார்வைக்கும், இழிசொற்களுக்கும ஆளாகியிருப்பது வேதனைக்குரிய விடயமென்றாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக தம்மால் இத்தொழிலிருந்து மீண்டு வர முடியாத நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்.
அதேபோல தன்னுடைய கணவரது வருமானம், பிள்ளைகளையும் குடும்பத்தையும் சமாளிக்கப் போதுமானதாக இல்லையாதலால், அவருக்குத் தெரிந்தே இத்தொழிலில் ஈடுபடுவதாக 4 பிள்ளைகளின் தாயாரான மற்றொரு பெண் கூறுகிறார். மண்வீட்டில் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசிக்கும் இவர், தமக்கு வீடொன்றை பெற்றுத் தருவதற்கு யாராவது உதவுவார்களா எனவும் கோரிக்கை விடுக்கிறார்.
இந்நிலையில் வாய்பேச முடியாத மற்றுமொரு பெண், கணவரது துன்புறுத்தல்களுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளான நிலையில், தமது 3 பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாக, கண்ணீர்மல்க கண்களைத் துடைத்தபடி செய்கை மூலம் காண்பித்தார்.
திருமணமான பெண்கள் மாத்திரமன்றி, தமது காதலரால் ஏமாற்றப்பட்ட அல்லது தொழில் நிமித்தம் அழைத்துச் செல்லப்பட்டு முகவர்களால் ஏமாற்றப்பட்ட அல்லது பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட அல்லது பல்வேறு எதிர்பாராத துர்பாக்கிய சம்பவங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்ட இளம் பெண்கள் கூட செய்வதறியாத நிலையிலும், தமது வாழ்வாதாரத்துக்கான பணத்தை தேடிக்கொள்வதற்காகவும் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
இது இவ்வாறு இருக்கையில், கொழும்பு போன்ற பெருநகரங்களில் படித்த, உயர்ந்த நிறுவனங்களில் தொழில் செய்யும் இளம் பெண்கள் சிலர் கூட, உல்லாசத்துக்காகவும், மேலதிக வருமானத்துக்காகவும், தமது ஆடம்பர வாழ்க்கைக்கான செலவுகளை ஈடுகட்டுவதற்காகவும், ஒரு பொழுதுபோக்கான விடயம் போல இத்தொழிலில் ஈடுபடுகின்றனர்.
தமது அலுவலக தொழில் நேரம் முடிந்த பின்னரும், வார இறுதி விடுமுறை நாட்களிலும் தமக்கான பெரும் பணக்கார வாடிக்கையாளர்களை தேடிக்கொள்ளும் இவர்கள், நடன கிளப்புகள், சொகுசு ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகளில் அவர்களுடன் பொழுதைக் கழிப்பதன் மூலமாக ஆயிரக்கணக்கான ரூபாய்களை மாத்திரமல்ல சிலவேளைகளில் லட்சங்களில் கூட வருமானத்தை பெற்றுக்கொள்கின்றனர். இதனை அவர்கள் தமது சுகபோக வாழ்க்கைக்கும், ஆடம்பரத்துக்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இலங்கையில் பாலியல் தொழிலாளர்கள் ஏராளமாக உள்ள நிலையில், கலாசார மற்றும் மத அம்;சங்களின் அடிப்படையில் அவர்கள் கண்டனம் செய்யப்பட்டாலும், அவர்களது இருப்பை யாராலும் மறுக்க முடியாது. இலங்கையில் பாலியல் தொழில் சட்டவிரோதமான நடவடிக்கையாக கருதப்படும் நிலையில், கைது செய்யப்படும் பாலியல் தொழிலாளர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதோடு சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள்.
எனவே இத்தொழிலை சட்ட ரீதியாக்குமாறும், பாலியல் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி, இத்தொழிலுக்கு அங்கீகாரத்தை வழங்குமாறும், சில நிறுவனங்களால் பல்வேறு கோரிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், இலங்கையில் பாலியல் தொழில் இது வரை அங்கீகரிக்கப்படவில்லை என்பதே உண்மை.
பாலியல் தொழில் காரணமாக, எயிட்ஸ் மற்றும் பால்வினைத் தொற்றுகள் பரவி வரும் நிலையில் அது சமூகத்தில் அபாயகரமான விளைவுகளை யும் ஏற்படுத்தியுள்ளது. அதுமாத்திரமன்றி ஆசிய கண்டத் தில், தொன்மையான கலாசார பாரம்பரி யத்தைத் கொண்ட இலங்கையில் எமது மதம், ஒழுக்கநெறிகள், கட்டுக்கோப்பு களுக்கு அமைய அது கலாசார சீரழிவு களையும், எதிர்கால இளம் சந்ததியினர் மத்தியில் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும்.
இந்நிலையில் பாலியல் தொழில் இலங்கையில் சட்டரீதியாக்கப்படுமா, மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுமா என்பது வினா மாத்திரமல்ல, விவாதத்திற் குரிய ஒரு விடயமுமாகும்.