கோவையில் கோழிப்பண்ணை அமைக்க போலி ஆவணம் தயாரித்து வங்கியில் ரூ.33 கோடி மோசடி செய்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை திருச்சி ரோட்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயங்கி வருகிறது. தனியார் வங்கியான அதில், லட்சுமி பிரகாஷ் என்பவர் பொதுமேலாளராக உள்ளார்.
இந்நிலையில், சென்னை தலைமையகத்திலிருந்து வந்த தணிக்கையாளர் குழு, வரவு செலவு கணக்குகளைத் தணிக்கை செய்துள்ளது.
அதில், சில குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், வங்கியின் முன்னாள் உதவி பொதுமேலாளர் சிவசுப்பிரமணியம் (55) என்பவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, லட்சுமி பிரகாஷ், கோவை மாநகர போலீஸ் ஆணையாளரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், உதவி ஆணையாளர் சௌந்தர்ராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
மகேஷ்
விசாரணையில், கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த புரோக்கர் மகேஷ் (41), கட்டுமானத் தொழில் செய்துவரும் சூலூர் பாண்டியன் (44), செலக்கரிச்சல் பகுதியில் ஆயி அம்மன் என்ற மில் நடத்தி வந்த கோமதி (42) ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து செயல்பட்டது தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் இணைந்து, பல்லடம், கரடிவாவி ஆகிய பகுதிகளில் கோழிப்பண்ணை அமைக்க இருப்பதாகக் கூறி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் திருச்சி சாலை கிளையில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
சிவசுப்பிரமணியம்
அப்போது, உதவிப் பொதுமேலாளராக இருந்த சிவசுப்பிரமணியன் நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டியும், கட்டப்படாத கட்டுமானங்களைப் போலி ஆவணங்கள் மூலம் கட்டப்பட்ட கட்டுமானம் எனக் காண்பித்து ரூ.33 கோடி கடன் பெற்றுக் கொடுத்துள்ளார்.
போலி ஆவணங்களைத் தயாரிப்பது, போலிப் புகைப்படங்கள், போலியான நிலை நிறைவுகளைச் சமர்பிப்பது என்று சிவசுப்பிரமணியம், இந்த மோசடியின் மூளையாகச் செயல்பட்டுள்ளார்.
கோமதி
இந்நிலையில், கடனைப் பெற்றவர்கள், மேற்படி பணத்தைத் திருப்பிச் செலுத்தாததால் வங்கிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மோசடியில் சிவசுப்பிரமணியம், மகேஷ், பாண்டியன், கோமதி உள்ளிட்ட 29 பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதன்பேரில் ஏமாற்றுதல், கூட்டுச் சதி உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிவசுப்பிரமணியம், மகேஷ், பாண்டியன், கோமதி ஆகிய 4 பேரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சிவசுப்பிரமணியம் வங்கியிலிருந்து தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, பாண்டியன் என்பவர் வங்கியால் நியமிக்கப்பட்டிருந்த இன்ஜினீயர் என்பது குறிப்பிடத்தக்கது.