சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் நான்கு பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்பது பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மாற்றுத் திறனாளியான பதினொரு வயது சிறுமி ஒருவர் பல மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானபோது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்தச் சிறுமி குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார் என்பவர் இந்த துஷ்பிரயோகத்தில் ஈடுபட ஆரம்பித்து, பிறருக்கும் இந்தத் தகவலைப் பரப்பினார்.
இதற்குப் பிறகு அங்கு வந்த பிளம்பர், வேலை பார்ப்பவர்கள் என பலர் அந்தச் சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினர்.

ஒரு கட்டத்தில் சிறுமி வலியால் துடிக்கவே இந்த விவகாரம் வெளியில் வந்தது. இதையடுத்து அந்தச் சிறுமியின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் செய்தனர். உடனடியாக இந்த விவகாரத்தில் ஈடுபட்ட ரவிகுமார் (56), சுரேஷ் (32), ராஜசேகர் (48), எரால் பிராஸ் (58), அபிஷேக் (28), குமரன் (60), முருகேசன் (54), பரமசிவம் (60), ஜெய்கணேஷ் (23), பழனி (40), தீனதயாளன் (50), பாபு (36), ராஜா (32), சூர்யா (23), குணசேகரன் (55), ஜெயராமன் (26), உமாபதி (42) ஆகிய 17 பேர் கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் சிறுமியின் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

_110751401_f2859f94-470a-4ed0-8b35-726fdf65a339

சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக இந்தச் சிறுமியை இவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியிருந்தனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்களை குண்டர் தடுப்புக் காவல் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார்.

ஆனால், இவர்கள் மீதான குண்டர் சட்டம் ஜனவரி மாதம் உயர் நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டது. இருந்தபோதும் இவர்கள் யாருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, காயம் ஏற்படுத்துதல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழும் போக்ஸோ சட்டத்தின் 10, 12வது பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சிறுவர்களை பாலியல்வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழும் குற்றம்சாட்டப்பட்டது.

60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டு, 2018 டிசம்பர் 20ஆம் தேதி மகிளா நீதிமன்ற நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்னிலையில் விசாரணை துவங்கியது.

விசாரணை நடந்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே 10வது குற்றவாளியான பாபு என்பவர் சிறையிலேயே இறந்துவிட்டார்.

மீதமுள்ள பதினாறு பேர் மீது வழக்கு தொடர்ந்து நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஏழு சாட்சிகளும் அரசுத் தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர்.

வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மொத்தமுள்ள 16 பேரில் 15 பேர் குற்றவாளி எனவும் தோட்டக்காரரான குணசேகரன் என்பவர் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விவரங்கள் பிப்ரவரி 3ஆம் தேதி அறிவிக்கப்படுமென கூறப்பட்டிருந்தது.

அதன்படி இன்று குற்றவாளிகளுக்கான தண்டனைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக் , பழனி ஆகிய நான்கு பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், ராஜசேகர் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், தீனதயாளன், ராஜா, சூர்யா, சுகுமாரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், ஜெயராமன், உமாபதி ஆகிய 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், எரால் பிராஸுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ், மருத்துவ சாட்சிகள் இந்த வழக்கில் வலுவாக இருந்ததாகத் தெரிவித்தார்.

சிறாரை பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவோருக்கு மரண தண்டனை வழங்கும் திருத்தம் 2018 ஏப்ரலிலேயே கொண்டுவரப்பட்டுவிட்டாலும்கூட, குற்றம் நடந்த காலத்தில் அந்தப் பிரிவு போக்ஸோ சட்டத்தில் இல்லை என குற்றவாளிகள் தரப்பு வாதிட்டதாகவும் ஆகையால் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

Share.
Leave A Reply