நாட்டின் 72 ஆவது சுதந்திரதினம் தெற்கில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்ட அதேவேளை, வடக்கில் கறுப்புக்கொடிகளைத் தொங்கவிட்டு சுதந்திரதினம் கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதனைப் பார்க்கும் போது நாட்டில் மீண்டும் பிரிவினையொன்றுக்கு அடித்தளமிடப்பட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நாட்டின் 72 ஆவது சுதந்திரதினம் நேற்று தெற்கில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் அதேநாளில் வடக்கில் கறுப்புக்கொடிகளைத் தொங்கவிட்டு அதனைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தியிருந்தார்கள்.
இதனைப் பார்க்கும் போது நாட்டில் மீண்டும் பிரிவினையொன்றுக்கு அடித்தளமிடப்பட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.
எமது நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் இனங்களுக்கு இடையிலான நல்லிணத்திற்கு முக்கியத்துவமளித்து செயற்பட்டோம். அதன் காரணமாக நாட்டுமக்கள் எவரும் பிரிவினையைக் கோரவில்லை.
அதுமாத்திரமன்றி இனநல்லிணக்கத்தைக் காண்பித்து நாம் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையையும் பெற்றுக்கொண்டோம். ஆனால் தற்போது நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையிலான பிரிவினையொன்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையிருக்கிறது. அவ்வாறிருக்க காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் நல்லிணக்கத்திற்கு உவப்பான செயல்களல்ல எனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.