நெய்வேலி என்.எல்.சி சுரங்கப் பகுதியில் மாஸ்டர் படப்பிடிப்புத் தளத்திலிருந்து நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துவந்தனர்.
சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 22 இடங்களில், காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள்.
தி.நகர் ஏ.ஜி.எஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, ‘பிகில்’ படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்க்கு அளிக்கப்பட்ட சம்பளம் தொடர்பான ஆவணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த ஆவணங்களின் அடிப்படையில், நடிகர் விஜய்யிடம் விசாரிக்க வருமான வரித்துறை டீம் முடிவு செய்திருக்கிறது.
நடிகர் விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் `மாஸ்டர்’ படத்தில் நடித்துவருகிறார். இதற்கான படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி சுரங்கப் பகுதியில் நடந்துவருகிறது.
இதனால், ஷூட்டிங் முடிந்தபிறகு நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு ஐ.டி தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே நேரடியாகச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், விஜய்யைத் தங்கள் காரிலேயே சென்னைக்கு அழைத்துவந்துள்ளனர்.
நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது என விசாரித்தோம். “ ‘மாஸ்டர்’ ஷூட்டிங் நடந்துவரும் என்.எல்.சி 2-வது சுரங்கப் பகுதிக்கு இன்னோவா கார் ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் டீம் வந்தது. தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும் நடிகர் விஜய்யைப் பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த சி. ஐ.எஸ்.எஃப் படை வீரர்கள், அவர்களை அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. பின்னர், என்.எல்.சி உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்று, ஷூட்டிங் நடந்த பகுதிக்கு அவர்கள் சென்றனர்.
ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே விஜய்க்கு சம்மன் அளித்து, சிறிதுநேரம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், கூடுதலாக விசாரிக்க வேண்டி இருப்பதாகக் கூறி, தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர்.
அதற்கு விஜய், `ஈவ்னிங் ஷூட்டிங் முடிந்ததும் நேராக வருகிறேனே?’ என்று பதிலளித்திருக்கிறார். ஆனால், தங்களுடன் உடனே வருமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து, தன்னுடைய காரில் வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளை முன்னால் செல்லும்படியும் விஜய் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், தங்கள் காரிலேயே வரும்படி அழைத்திருக்கிறார்கள். இதனால், அவர்கள் வந்த இன்னோவா காரிலேயே விஜய் சென்னைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்” என்றனர்.
இதுதொடர்பாக வருமான வரித்துறை வட்டாரங்களில் விசாரித்தோம். “இது நேரடியாக விஜய்யைக் குறிவைத்து நடந்த சோதனை கிடையாது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தொடர்புடையது.
அந்த வகையில், சில ஆவணங்கள் குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனாலேயே, அவர் சென்னைக்கு அழைத்துவரப்படுகிறார்.
அதேபோல், `எங்கள் காரில்தான் வர வேண்டும்’ என்று அதிகாரிகள் தரப்பில் கறார் காட்டியதாகச் சொல்லப்படுகிறது.
அப்படி எந்த இடத்திலும் அதிகாரிகள் குறிப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு அதற்கான அதிகாரமும் இல்லை. சின்ன அளவிலான ரெய்டு என்றால், சம்பந்தப்பட்ட நபரை அவர்களது வாகனத்திலேயே வரச் சொல்லிவிட்டு வந்துவிடுவார்கள்.
பெரிய அளவிலான ரெய்டு என்பதாலேயே விஜய்யைத் தங்கள் காரில் வரும்படி அவர்கள் அழைத்திருக்க வாய்ப்பிருக்கிறது.
சென்னையில் உள்ள விஜய்யின் வீடு அல்லது வருமான வரித்துறை அலுவலகம் என இரண்டில் ஒரு இடத்துக்கு அவர் அழைத்துச்செல்லப்படலாம்.
பின்னர், தங்களிடமுள்ள ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் கேட்பார்கள். விஜய்யின் வீடு, அலுவலகம் உள்ளிட்டவை சென்னையில் இருக்கின்றன.
அவர் சென்னையில் இருந்திருந்தால், இது பெரிதாக்கப்பட்டிருக்காது. நெய்வேலியில் இருந்து அவர் அழைத்து வரப்பட்டதால் விவகாரம் பெரிய அளவு கவனம் பெற்றிருக்கிறது. இது வழக்கமான நடைமுறைதான்” என்கின்றனர்.
`மாஸ்டர்’ படப்பிடிப்புத் தளத்திலிருந்து விஜய் அழைத்துச் செல்லப்பட்டதால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, சென்னையில் சாலிகிராமம் மற்றும் நீலாங்கரை பகுதிகளில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், சென்னைக்கு அழைத்து வரப்பட்ட விஜய்யிடம் பனையூரில் உள்ள இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.