ஒரு மரத்தில் இருந்து வடியும் வெள்ளை நிற பாலையும், ஒரு கொடியின் சாற்றையும் கலந்து ரப்பர் பந்துகள் தயாரிப்பதைப் பார்த்தனர்.
சமீபத்தில் One Mic Stand என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் Standup Comedy செய்த வரலாற்று ஆசிரியரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் சசி தரூர், லண்டன் மாநகர அருங்காட்சியகங்களை ‘சோர் பஜார்’ (திருட்டு தெரு) என்று குறிப்பிட்டார்.
ஏனென்றால், பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் எங்கெல்லாம் பரவியிருந்ததோ அங்கெல்லாம் இருந்து எதையாவது திருடி இங்கிலாந்திற்கு எடுத்துச்சென்றார்கள்.
அப்படி திருடிச்சென்ற பொருள்களை அருங்காட்சியகங்களில் வைத்திருக்கிறார்கள். அதனால்தான், லண்டன் மாநகர அருங்காட்சியகங்களைத் ‘திருட்டு பஜார்’ என்று சஷி தரூர் குறிப்பிட்டார்.
சீனாவிலிருந்து, பிரித்தானியர்களால் தேயிலை எப்படி திருடப்பட்டது என்று ஏற்கெனவே ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன்.
அதேபோன்று தென்அமெரிக்காவிலிருந்து பிரித்தானியர்கள் திருடிச்சென்ற பொருள், மனித வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
பிரித்தானியர்கள், தென்னமெரிக்காவிற்குச் சென்றபொழுது, அங்கிருந்த குழந்தைகள் ஒரு கோளத்தை (Sphere) வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
அது, குதித்து ஓடியது. இன்றைக்கு, அதன் மாறுபட்ட வடிவத்தை ரப்பர் பந்து என்று அழைக்கிறோம். அதை எப்படித் தயாரிக்கிறார்கள் என்று கவனித்தனர் பிரித்தானியர்கள்.
ஒரு மரத்திலிருந்து வடியும் வெள்ளை நிற பாலையும், ஒரு கொடியின் சாற்றையும் கலந்து ரப்பர் பந்துகள் தயாரிப்பதைப் பார்த்தனர்.
பார்த்ததோடு மறந்துவிடும் பழக்கம் பிரித்தானியர்களுக்கு இருந்ததில்லை. வழக்கம்போல, அந்த ரப்பர் பந்தை லண்டனுக்குக் கொண்டுவந்துவிட்டனர். இப்படித்தான் ரப்பர், தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு வந்தது.
அதை ஆராய்ந்த உலகின் தலை சிறந்த விஞ்ஞானியான மைக்கேல் ஃபாரடே (Michael Faraday), அதில் இருக்கும் மூலக்கூறு என்ன என்று கணித்துச் சொன்னார்.
அந்தப் பொருளை, கந்தகத்துடன் சூடுபடுத்தியதாகவும் தனது ஆய்வுக் குறிப்பேட்டில் எழுதினார். அதற்கு பல ஆண்டுகளுக்குப் பின்பு, அமெரிக்க விஞ்ஞானியான சார்ல்ஸ் குட்யர் (Charles Goodyear) ரப்பரை கந்தகத்துடன் சூடுசெய்து தயாரித்ததுதான் டயர் (Tyre).
இன்றைக்கும் குட்யர் (Goodyear) நிறுவன டயர்கள் உலகெங்கும் கிடைக்கிறது. டயர், மனித வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது. டயர் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொருளா என்ற கேள்வி உங்கள் மனட்தில் எழலாம்.
எரிபொருள் (டீசல், பெட்ரோல்) பயன்படுத்தி இயங்குகிற வாகனத்தில் இரண்டு பாகங்கள் முக்கியமானவை.
ஒன்று, Internal Combustion Engine மற்றது டயர். டெஸ்லா கார்கள் Internal Combustion Engine தேவையில்லை என்று நிரூபித்துவிட்டது.
ஆனால், டயரை வாகனத்திலிருந்து நீக்கிவிட்டால், வாகனத்தின் வேகம் மிகமிகக் குறைந்துவிடும். மரத்தாலோ அல்லது உலோகத்தாலோ ஆன சக்கரம் உள்ள வண்டி, அதிகபட்சமாக குதிரை வண்டி வேகத்தில் போக முடியும்.
அந்த வேகமே வாகனத்தில் பயணம்செய்பவருக்குக் கொடுமையாக இருக்கும். அதற்கு மேல் வேகம் சாத்தியமில்லை.
ஆனால், டயரைப் பொருத்திய ரேஸ் கார்கள், ஏறக்குறைய 400 கி.மீ வேகம் வரை பயணிக்க முடியும்.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் ஆரம்ப வெற்றிக்கும் இறுதித் தோல்விக்கும் காரணமாக இருந்த காரணிகளில் முக்கியமானது டயர்கள்.
ஜெர்மனி யுத்தத்தைத் தொடங்கிய பொழுது, அதிவேக தாக்குதல் நடத்தியது. அதை Blitzkrieg என்று அழைத்தார்கள்.
இந்தத் தாக்குதலுக்கு அடிப்படையாக அமைந்தது, அதிவேகமாகப் பயணித்த ஜெர்மனிய வாகனங்கள்.
அந்த அதிவேக தாக்குதலை பிரான்ஸ், ஹாலந்து, போலந்து போன்ற நாடுகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
இந்தப் போர் உத்தியை ஜெர்மனி தொடர முடியாமல் போனதற்குக் காரணமாக இருந்தது, இயற்கை ரப்பர் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட டயர்கள்.
ஏனென்றால், இயற்கை ரப்பர் கிடைக்கும் தென் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகள், ஜெர்மனியின் எதிரியான பிரித்தானியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அவற்றில் ஒன்றாக இருந்த ரப்பர் விளையக்கூடிய இந்தியாவை விடுவித்தால், ஜெர்மனிக்கு ரப்பர் கிடைக்கும் என்பது ஹிட்லரின் திட்டம்.
காந்திக்கும் நேருவுக்கும் ஹிட்லரை சுத்தமாகப் பிடிக்கவில்லை. போரைத் தொடங்க வேண்டாமென்று கடித வேண்டுகோள் விடுத்தவர், காந்தி.
நேருவை சந்திக்க விரும்பி தூது அனுப்பிய ஹிட்லரின் கூட்டாளி ஃபாஸிஸ்ட் முசோலினியைச் சந்திக்க மறுத்தவர்,
நேரு. எனவே, இந்திய விடுதலைப் போரை முன்னெடுத்த காந்தியும் நேருவும் தனக்கு உதவ மாட்டாரகள் என்பது ஹிட்லருக்குத் தெரியும்.
அதனால்தான் ஹிட்லர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அணுகி, அவருக்கு தன்னால் இயன்ற உதவியைச் செய்தார்.
நேதாஜி மூலம் இந்திய விடுதலை சாத்தியமானால், ஜெர்மனிக்கு ரப்பர் கிடைக்க வாய்ப்பிருப்பதாக ஹிட்லர் நம்பினார்.
இது கொஞ்சம் அதீத கற்பனையோ என்று தோன்றக்கூடும். வரலாற்று நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்தால், ஹிட்லரின் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொள்ளலாம்.
அமெரிக்க விமானங்கள், இத்தாலி மற்றும் ஜெர்மானிய டயர் தொழிற்சாலைகள்மீது குண்டு வீசியது. ஹிட்லர் தயாரித்து வைத்திருந்த டயர்களை அழித்ததன்மூலம் ஹிட்லரின் Blitzkrieg போர் உத்தியை நேச நாடுகள் முறியடித்தன.
ரப்பர் உற்பத்தியாகும் நாடுகள், பிரித்தானியர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஹிட்லரால் புதிய டயர்களைத் தயாரிக்க முடியவில்லை. இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த ஹிட்லர், குதிரைப் படையையும் தயாராக வைத்திருந்தார்.
Normandy Landing இல் தோல்வியடைந்த ஜெர்மானியப் படைகளிடம், டயர்கள் பொருத்திய வாகனங்கள் போதுமானவை இல்லை.
எனவே, குதிரைவண்டிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். ஆனால், குதிரைவண்டிகள் மோட்டார் வாகனங்கள்போல வேகமாகப் பயணிக்கத் தகுந்தவையல்ல. ஹிட்லருக்கு ஏற்பட்ட பின்னடைவுகளில் இதுவும் ஒன்று.
இந்தப் போர் நடந்துகொண்டிருந்த சமயத்திலேயே, அமெரிக்கா செயற்கை ரப்பரைத் தயாரிக்கும் முயற்சியில் வெற்றிபெற்றது.
இந்த செயற்கை ரப்பர் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்கு வகித்தது அமெரிக்காவின் ஏக்ரான் பல்கலைக்கழகம் (The University of Akron). இன்றைக்கு நாம் அதிவிரைவாகப் பயணம்செய்ய காரணமாக இருப்பது டயர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
பின் குறிப்பு 1: வாகனங்கள் பல வண்ணங்களில் இருக்கும். ஆனால், டயர்கள் மட்டும் கறுப்பாகவே இருக்கும்.
ஏன்? வாகனங்கள் நகரும்பொழுது உராய்வின்மூலம் Static Charging டயர்களில் உண்டாகும். இது விபத்துகளை உண்டாக்கும். இதைத் தவிர்க்க, டயர்கள் ஓரளவுக்கு மின்கடத்துபவையாக இருக்க வேண்டும். அதற்காக, ரப்பருடன் கார்பன் (கரியின் ஒரு வகை) கலப்பார்கள். எனவே, டயரின் வண்ணம் கரியின் வண்ணமான கறுப்பாக இருக்கிறது.
பின்குறிப்பு 2: ரப்பரை கந்தகத்துடன் சூடுசெய்து டயர் தயாரிக்கும் முறைக்கு வல்கனைசேஷன் (Vulcanisation) என்று பெயர்.
பின்குறிப்பு 3: டெஸ்லாவின் பேட்டரி கார்கள் 800 கி.மீ வேகத்தில் பயணிக்கும் என்று WhatsApp செய்திகள் வந்திருக்கும்.
இது உண்மையல்ல. பயணிகள் விமானங்கள், சராசரியாக 900 கி.மீ வேகத்தில் பறக்கும். வானில் பறக்கும் விமானங்களுக்கு இணையான வேகத்தில் தரையில் கார்கள் ஓடும் என்பதெல்லாம் அதீத கற்பனை.
– முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி, ஆராய்ச்சியாளர், சி.எஸ்.ஐ.ஆர்