நடிகர் விஜயின் வீட்டில் புதன்கிழமையன்று துவங்கிய சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தொடர்பான இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
விஜய் மற்றும் ஃபைனான்சியர் அன்புச் செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், 38 இடங்களில் நடந்த சோதனையின்போது 65 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஏ.என்.ஐ செய்தி முகமை அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அது இருவருக்கும் சொந்தமான இடங்களில் கிடைத்த பணமா, ஒருவருக்கு மட்டுமே சொந்தமான இடத்தில் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
நேற்று காலையிலேயே ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தொடர்பான இடங்கள், ஃபைனான்சியர் அன்புச்செழியன் தொடர்பான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், விஜய் தற்போது நடித்துவரும் மாஸ்டர் படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சிகள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திற்குள் படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தன.
பிற்பகல் இரண்டு மணியளவில் அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜயிடம் அவரை விசாரிப்பதற்கான சம்மனை அளித்தனர்.
இதற்குப் பிறகு அவரை தங்கள் காரிலேயே நெய்வேலியிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
வருமான வரித்துறையினரின் வாகனத்திலேயே சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார் விஜய்.
நேற்று இரவு முதல் தற்போதுவரை அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம், வசூல் ரீதியாக சாதனை படைத்ததாக ஜனவரி 29ஆம் தேதி ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓவான அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், இந்த ஆண்டில் தமிழ் சினிமாவிலேயே அதிக தொகையை வசூலித்த படம் எனக் குறிப்பிட்டிருந்தார்.