திருமண நாளைக் கொண்டாட வேலூரிலிருந்து சென்னைக்கு வந்த தம்பதி, கடல் அலையில் நள்ளிரவில் மோதிரத்தை அணிந்தபோது ஏற்பட்ட சோகச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரின் மனைவி வேணி சைலா(27) . இந்தத் தம்பதிக்குத் திருமணமாகி 2 ஆண்டுகளாகின்றன.
2-வது ஆண்டு திருமண நாளை உற்சாகத்துடன் கொண்டாடத் திட்டமிட்ட இந்தத் தம்பதியர், வேலூரிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுவந்தனர். அவர்களோடு நண்பர்களும் உறவினர்களும் வந்தனர்.
சென்னை கிழக்குக் கடற்கரை சாலை கானாத்தூரில் அறை எடுத்துத் தங்கிய இந்தத் தம்பதியர் மற்றும் உறவினர்கள் திருமணநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட ஏற்பாடு செய்தனர்.
இதற்காக அனைவரும் நேற்றிரவு (6.2.2020) பாலவாக்கம் கடற்கரைக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில் அமர்ந்து கேக்கை வெட்டி திருமணநாளைக் கொண்டாடினர்.
அனைவரும் கேக் சாப்பிட்ட பிறகு கடற்கரையில் அமர்ந்து செல்போன்களில் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
பின்னர், சரியாக 7.2.2020-ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் விக்னேஷுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுப்பதற்கு வேணி சைலா திட்டமிட்டிருந்தார். இதற்காக விக்னேஷை அழைத்துக் கொண்டு கடலுக்குள் சென்றார் வேணி. மற்றவர்கள் கடற்கரையில் அமர்ந்திருந்தனர்.
கடல் அலையில் கால்களை நனைத்த வேணி சைலாவும் விக்னேஷும் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது வேணி சைலா, கடல் அலை வரும்போது விக்னேஷுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்க ஆசைப்பட்டார்.
அவர் ஆசைப்பட்டபடியே கடல் அலைவந்தது. அப்போது கையில் மறைத்து வைத்திருந்த மோதிரத்தை வேணி எடுத்தார். அதை விக்னேஷ் கையில் போட்டுவிட்டு அழகுபார்த்தார்.
ஆனால் அந்த உற்சாகம் சில நொடிகள்கூட நீடிக்கவில்லை. இருட்டில் கடலுக்குள் நின்றுகொண்டிருந்த விக்னேஷ், வேணி ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
அதைப்பார்த்த விக்னேஷ், வேணி சைலாவின் குடும்ப நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். `காப்பாற்றுங்கள்’ எனச் சத்தம் போட்டனர்.
சிறிது நேரத்தில் கடலில் நீந்தியபடி விக்னேஷ் மட்டும் கரை ஒதுங்கினார். ஆனால் வேணி சைலா என்ன ஆனார் என்று தெரியவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ், உடனடியாக நீலாங்கரை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீஸார் வேணி சைலாவைத் தேடினர். இந்தச் சமயத்தில் வேணியின் சைலாவின் சடலம் கொட்டிவாக்கம் கடற்கரை பகுதியில் கரைஒதுங்கியது.
இந்தத் தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற போலீஸார் சடலத்தைக் கைபற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “வேணி சைலா வேலூரில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்துவந்தார்.
விக்னேஷ், தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இந்தத் தம்பதியருக்குக் கைக்குழந்தை உள்ளது. திருமண நாளைக் கொண்டாட குடும்பத்தோடு சென்னை வந்த இடத்தில் இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது” என்றனர்.