மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியவரை கணவர் கொலை செய்து உடலைத் தோட்டத்தில் வீசிய சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார், கம்மாப்பட்டியைச் சேர்ந்தவர் மில்டன்ராஜ். கட்டடத் தொழிலாளியான இவருக்கு ராணி என்ற மனைவியும், அமிஷன் என்ற 3 வயது மகனும் உள்ளனர்.
இவருக்கு அதிக மதுப்பழக்கம் இருந்ததால், அவரின் மனைவி ராணி, தன் மகனுடன் அவரின் தாய் வீட்டில் வசித்துவருகிறார்.
இந்த நிலையில், இதே ஊரைச் சேர்ந்த விஜயன் என்பவருடன் கட்டட வேலைக்குச் சென்று வந்துள்ளார் மில்டன்ராஜ். கொத்தனரான விஜயனுக்கு வெண்ணிலா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
உயிரிழந்த மில்டன்ராஜ் – கொலை செய்த விஜயன்
இதற்கிடையில், கடந்த 25-ம் தேதி வெள்ளாளங்கோட்டையில் உள்ள கிறிஸ்துவ ஆலயத் திருவிழாவுக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றார் மில்டன்ராஜ்.
அதன் பின்னர், வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலையில் திருமங்கலக்குறிச்சியை அடுத்துள்ள ஒத்தவீடு அருகில் ஒரு தோட்டத்தில் அழுகிய நிலையில், உடலில் பல வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கயத்தாறு காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அத்தோட்டத்தில் கிடந்த சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், காணமல் போன மில்டன் ராஜ்தான் என்பது தெரியவந்தது. அவரது செல்போன் அழைப்புகளை போலீஸார் சோதனை செய்ததில், திருவிழாவுக்குச் செல்வதாகச் சொல்லப்பட்ட 25-ம் தேதி, அவரின் தாய், கொத்தனார் விஜயன் ஆகிய இருவரின் அழைப்புகள் மட்டும் பதிவாகியிருந்தது.
இதையடுத்து, போலீஸார் விஜயனைப் பிடித்து நடத்திய விசாரணையில் மில்டன்ராஜை கொலை செய்ததைக் ஒப்புக்கொண்டார்.
போலீஸாரிடம் விஜயன் அளித்த வாக்குமூலத்தில், “நானும் மில்டன் ராஜுவும் எப்போதும் ஒன்றாகவே வேலைக்குச் சொல்வோம், மதுவும் அருந்துவோம். ஒரு நாள் மது அருந்தியபோது, மில்டன்ராஜ் அவரது போனில் உள்ள ஒரு வீடியோவை என்னிடம் காண்பித்தார்.
அந்த வீடியோவில் என் மனைவி குளிக்கும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து, எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
`நான் கேட்கும் பணத்தைக் கொடுத்தால் வீடியோ, போட்டோக்களை அழித்துவிடுகிறேன்’ எனச் சொல்லி மிரட்டினார். `
பணத்தை ஏற்பாடு செய்ய, எனக்குச் சில நாள்கள் அவகாசம் வேண்டும்’ எனக் கேட்டேன். இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி மில்டன்ராஜுக்குப் போன் செய்து, `இன்னிக்கு வேலை இருக்கு வா. வேலை முடிஞ்சதும் நீ கேட்ட பணத்தைத் தருகிறேன்’ எனவும் சொல்லிக் கூப்பிட்டேன்.
உடனே, மில்டன்ராஜும் என்னுடன் பைக்கில் வந்தார். கயத்தாறு – செட்டிக்குறிச்சி சாலையில் திருமங்கலக்குறிச்சியை அடுத்த ஒத்தவீடு அருகே சூரியமினிக்கம் விலக்கிற்குச் சென்றதும் பைக்கை நிறுத்தினேன்.
ஏற்கெனவே தயாராக நிற்கச் சொன்ன என் நண்பர்களுக்குப் போன் செய்தேன். இருவரும் அங்கு வந்தனர்.
சும்மா பேசுவதுபோல பேசிக்கொண்டிருந்தோம். சில நிமிடங்களில் பைக்கின் முன்சீட்டில் மறைத்து வைத்திருந்த கத்தி, ஸ்குருடிரைவரால் மில்டனைக் குத்திக்கொலை செய்தோம்.
உடலை அருகில் இருந்த தோட்டத்துக்குள் போட்டோம். மில்டனின் சட்டைப்பையில் இருந்த செல்போனை எடுத்து, அதிலிருந்த வீடியோ, போட்டோக்களை அழித்துவிட்டு தப்பித்துச் சென்றோம்” எனக் கூறியுள்ளார்.
இதையெடுத்து போலீஸார் விஜயனைக் கைது செய்தனர். விஜயனின் நண்பர்களான மதன், பாலமுருகன் ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.