இஸ்ரேலைப் பற்றி ஒரு தனித் தொடர், பாலஸ்தீனத்தைப் பற்றி ஒரு தனித் தொடர் என்று எழுதுவது வீண் வேலை. அந்த அளவுக்கு இவை ஒன்றோடொன்று பின்னிப் படர்ந்திருக்கின்றன. இரண்டும் கடும் எதிரிகள்.
ஆனால் ஒன்றின் சரித்திரத்தில் இன்னொன்றுக்குப் பெரும் பங்கு உண்டு. சொல்லப்போனால் அதனால்தான் பகைமையே. அதனால்தான் இரண்டு நாடுகளும் ஒரு சேரவே இத்தொடரில் பயணம் செய்கின்றன.
வரலாறு, அரசியல் என்பதோடு நிறுத்திக் கொள்ள முடியாமால் மதம் என்ற மிக முக்கியமான கோணம் இந்த நாடுகளின் பகைமைக்கு ஒரு முக்கிய அடித்தளமாக இருக்கிறது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதல் வெளியாகும்போதெல்லாம் அதை அரசியல் பகைமை போலவே நாளேடுகள் வெளியிட்டாலும், நீறுபூத்த நெருப்பு போல இதன் அடித்தளமாக இருப்பது மதம்.
யூதர்களின் மதமான ஜூடாயிஸம் மிகப் பழமையானது. மத்திய கிழக்குப்பகுதியில் 3,500 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.
தூய்மை மற்றும் நல்லொழுக்கத்துக்கு உதாரணமாக இருக்கத் தகுந்தவர்களைப் படைக்க வேண்டும் என்று எண்ணித்தான் இறைவன் யூதர்களைப் படைத்தார் (என்று அவர்கள் நம்புகிறார்கள்).
ஏபிரகாமை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகளில் வளர்ந்த மதங்கள்தான் யூத மதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்றுமே. ஆனால் காலப் போக்கில் இவை ஒன்றுக்கொன்று கடுமையான எதிரிகள் ஆயின.
இப்போது இஸ்ரேலின் வசம் உள்ள ஜெருசலேம் இந்தப் பகைமைக்கு மையப் புள்ளியாகிவிட்டது. மூன்று மதங்களின் முக்கிய சங்கமங்கள் நடைபெறும் நகரம் ஜெருசலேம்.
Gennadi Zimmerman :: Old City, Christian ..
jerusalem christian quarter
ஜெருசலேம் – இது பாலஸ்தீனத்தின் தலைநகர். ஆனால் இதை ஏற்றுக்கொள்ள இஸ்ரேல் தயாரில்லை. ஜெருசலேம் என்பதை ‘எதிரணியினரின்’ தலைநகராக ஏற்றுக் கொள்வதற்கு மட்டுமல்ல, பாலஸ்தீனத்தை ஓர் அதிகாரபூர்வமான நாடாக ஏற்றுக் கொள்ளவே இஸ்ரேல் தயாரில்லை!
யூதர்களுக்கு மிக முக்கியமான புனிதத்தலம் ஜெருசலேம். வெளிநாடுகளில் இருக்கும் யூதர்கள்கூட பிரார்த்தனை செய்யும்போது இந்த நகரம் இருக்கும் திசையை நோக்கிதான் வணங்குவார்கள்.
கி.மு. பத்தாம் நூற்றாண்டிலிருந்தே இந்த நகரில் யூதர்கள் அதிக அளவில் வசித்தனர். இந்த நகரில் உள்ள ஆலயம் (டெம்பிள் மவுண்ட்) யூதர்களுக்கு மிக முக்கியமானது.
தங்கள் விவசாய விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை இந்த ஆலயத்துக்குக் கொண்டு வந்து (சமைத்தோ அப்படியேவோ) உண்ண வேண்டும் என்கிறது யூதர்களின் புனித நூல். அதிக அளவு என்றால் பிறருடன் பங்கிட்டுக் கொள்ளலாம்.
மன்னன் சாலமனால் கி.மு. 957ல் எழுப்பப்பட்டது இந்த ஆலயம். யூதர்கள் பலி செலுத்தும் இடம் என்றால் அதிகாரபூர்வமாக இது ஒன்றுதான்.
சரித்திரத்தில் இந்த ஆலயம் முழுவதுமாக இடிக்கப்படுவதும், பிரமாதமாக மீண்டும் எழுப்பப்படுவதும், மீண்டும் இடிக்கப்படுவதும், உருவாக்கப்படுவதும் என்று பலமுறை நடந்திருக்கிறது.
என்றாலும் புனிதத் தலம், புனித ஆலயம் என்கிற ஆழமான நம்பிக்கை யூதர்களுக்கு வேரோடு இருப்பதால் ஜெருசலேம் நகரை அவர்களால் வேறுபடுத்திப் பார்க்கவே முடியவில்லை.
அதே சமயம் கிறிஸ்தவ மதமும் ஜெருசலேம் நகரோடு நீரும் செம்புலச் சேறும்போல கலந்துள்ளது. குழந்தையாக இருக்கும் போதே ஏசுநாதர் அழைத்துவரப்பட்ட இடம் இது.
ஜெருசலேம் நகரில் நடைபெற்ற திருவிழாக்களை ஏசுநாதர் கண்டதாகக் கூறுகிறது பைபிள். இங்குள்ள புனித ஆலயத்தை (யூதர்கள் கொண்டாடும் அதே ஆலயம் தான்!) ஏசுநாதர் சுத்தம் செய்திருக்கிறார்.
ஏசுநாதரின் இறுதி உணவு மிகப் பிரபலமானது. அது நடைபெற்றது இந்த நகரில்தான். ஏசுநாதர் மீதான வழக்கு நடைபெற்றதும் இங்குதான்.
அவர் சிலுவையில் அறையப்பட்டது ஜெருசலேம் நகருக்கு மிக அருகிலுள்ள ஒரு பகுதியில். அவர் புதைக்கப்பட்ட இடமும், உயிரோடு மீண்டு வந்த இடமும்கூட ஜெருசலேம்தான்.
தொடக்கத்தில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் ரோம் சாம்ராஜ்ய மன்னனால் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். அதாவது கொலை செய்யப்பட்டார்கள்.
எனவே கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ள மீன்போல விரல்களால் ஒரு சங்கேதக் குறியைப் பகிர்ந்து கொண்டார்கள்.
நாளடைவில் கிறிஸ்தவ மதம் பிரபலமடைந்தது. எந்த அளவுக்கு என்றால், ரோமானியச் சக்ரவர்த்தி கான்ஸ்டன்டெயின் ‘‘கிறிஸ்தவ மதம்தான் இனி என்னுடைய மதம்’’ என்று சொல்லும் அளவுக்கு இதற்கு அடிகோலியதும் ஜெருசலேம்தான்.
தூய மேரியின் நந்தவனமும் ஜெருசலேம் ஆலயத்தைச் சுற்றி அமைந்திருப்பதாகக் கருதுகிறார்கள் கிறிஸ்தவர்கள்.
பைபிளின்படி மன்னன் டேவிட் தான் இஸ்ரவேலின் (அப்போதைய இஸ்ரேலின் பெயர்) தேசத்துக்குத் தலைநகராக ஜெருசலேத்தை நிர்மாணித்தான்.
அவன் மகன் மன்னன் சாலமன் அங்கு முதல் ஆலயத்தை எழுப்பினான்.
உலகின் மற்றொரு பெரிய மதமான இஸ்லாமுக்கும் ஜெருசலேம் நகர் என்றால் ரொம்ப ஸ்பெஷல்தான்.
நபிகள் நாயகம் ஓர் இரவில் ஜெருசலேம் நகருக்கு விஜயம் செய்ததிலிருந்து முஸ்லிம் மக்களிடையே தனிச்சிறப்பு பெற்றது ஜெருசலேம்.
ஜெருசலேம் நகரிலுள்ள ஒரு பாறையின் மீது நின்றபடிதான் முகம்மது நபிகள் சொர்க்கத்துக்குச் சென்றாராம். குரானில் ஜெருசலேம் நகர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அதன் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வரும் விளக்கங்கள் ஜெருசலேம் நகரைக் குறிப்பிடுவதாகவே உள்ளனவாம்.
‘’மிகத் தொலைவிலுள்ள மசூதி என்று குரானில் குறிக்கப்படுவது ஜெருசலேம் நகரிலுள்ள மசூதிதான். அங்கு தான் இஸ்லாமின் பிற தூதர்களை அவர் சந்தித்தார்.
ஏபிரஹாம், டேவிட், சாலமன் போன்று ஜெருசலேம் நகரோடு தொடர்பு கொண்டவர்கள் முஸ்லிம்களுக்கும் முக்கியமானவர்கள்தான்.
அது மட்டுமா?
(இன்னும் வரும்..)
பிறவிப் பகைவர்கள் – பாலஸ்தீனம், இஸ்ரேல் – 1
Al-Aqsa (மஸ்ஜித் அல் அக்ஸா]
ஜெருசலேம் நகரில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் இது. ஒட்டுமொத்த பாலஸ்தீனிலேயே, இதனைக்காட்டிலும் பெரிய பள்ளிவாசல் வேறு ஏதும் கிடையாது. ஒரே சமயத்தில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கே அமர்ந்து தொழ முடியும்.
முகம்மது நபியின் பாதம் பட்ட பூமி இதுவென்பது, முஸ்லிம்களின் நம்பிக்கை. அவரது விண்ணேற்றத்துடன் தொடர்புடைய நிலம் இது. இந்த அல் அக்ஸா பள்ளிவாசலுக்குச் சற்றுத்தள்ளி, இன்னொரு பள்ளிவாசல் இருக்கிறது.
அதன் பெயர் மஸ்ஜித் ஏ உமர். கலீஃபா உமர் கட்டிய பள்ளிவாசல் இது. இந்த அல் அக்ஸா மற்றும் மஸ்ஜித் ஏ உமர் ஆகிய இரு பள்ளிவாசல்களையும் இணைத்த வளாகத்தை, முஸ்லிம்கள் ‘பைத்துல் முகத்தஸ்’ என்று அழைப்பார்கள்.
இந்த இடத்தை முன்வைத்துத்தான், யூதர்களுக்கும் அரேபியர்களுக்குமான பிரச்னை ஆரம்பித்தது. அல் அக்ஸா பள்ளிவாசல் இருக்கும் இடத்தில்தான், யூதர்களின் புராதனமான புனிதத்தலமான சாலமன் தேவாலயம் இருந்தது என்பது இஸ்ரேலியர்களின் வாதம்.
அதற்கு ஆதாரமாக அவர்கள் சுட்டிக்காட்டுவது, அந்தப் பள்ளிவாசலின் ஒருபக்கச் சுற்றுச் சுவராக இன்னமும் மிச்சமிருக்கும் அந்த உடைந்த சுவர். (Wailing wall எனப்படும் அழுகைச் சுவர்.
சாலமன் ஆலயம் இருந்ததன் அடையாளம், இந்தச் சுவர்தான் என்பது யூதர்களின் கருத்து. இந்தச் சுவரில் முகத்தைப் புதைத்து அழுதபடியே யூதர்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம்.). யூதர்களின் வாதம் என்னவெனில், அல் அக்ஸா பள்ளிவாசலுக்கும் முகம்மது நபி விண்ணேறிய சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
அல் அக்ஸாவுக்குச் சற்றுத் தொலைவில் உள்ள Dome of the Rock எனப்படும், மஸ்ஜித் ஏ உமர் பள்ளிவாசல் இருந்த இடத்திலிருந்துதான் முகம்மது நபி விண்ணேற்றம் செய்தார் என்று நம்பபடுகிறது.