யாழ். மாநகர சபையின் அசமந்தப் போக்கால் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவது யாழ். பிரதேச செயலக அதிகாரிகளால் கண்டறியப்பட்டு அங்கிருந்த 17 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் என தன்னை அறிமுகப்படுத்தியவரும் அதிகாரிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றுடன் இணைந்து விடுதி ஒன்றும் இயங்கி வந்துள்ளது.

எனினும் அந்த விடுதி பதிவு செய்யப்படவில்லை. அந்த விடுதியில் கலாசார சீரழிவு நடவடிக்கை இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலக கலாசார பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பாதுகாப்புப்  பிரிவினர், கிராம அலுவலர், பொலிஸார் இணைந்து நேற்று பிற்பகல் குறித்த விடுதியை சுற்றிவளைத்தனர்.

அங்கு தங்கியிருந்த வெள்ளைக்கடற்கரையைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தாயாரும் அவரது கணவர் எனத் தெரிவித்த ஒருவரும் அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்கள் இருவரும் ஒரே இடத்தைச் சேர்ந்த போதும் பெண் திருமண வயதையடையாதால், அவர்கள் இருவருக்கும் பதிவுத் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. அதனால் அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாநகரசபை பதிவு செய்யப்படாத விடுதிகளை இயங்க அனுமதித்துள்ளமையே இவ்வாறான கலாசார சீரழிவுகளுக்கு வழிவகுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply