முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஆயுள்தண்டனை கைதியான நளினி சிறையில் வைக்கப்பட்டிருப்பது, சட்டவிரோதமானது என்று குற்றம்சாட்டுகிறார் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்.

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, கடந்த 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள்.

இவர்களில் முருகனின் மனைவியான நளினி, இந்தியாவிலேயே அதிக காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதி ஆவார்.

  uztrewasddd

தங்களை விடுதலை செய்ய வேண்டுமென்று இவர்கள் அனைவரும் நீண்டகாலமாகச் சட்டப்போராட்டம் நடத்திவருகிறார்கள்.

2018-ம் ஆண்டு பேரறிவாளன் தாக்கல்செய்த கருணை மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், `ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு’ என்று உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், `அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 161-ன் கீழ் ஏழு பேரையும் விடுதலை செய்யலாம்’ என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க அரசு முடிவுசெய்தது.

இது தொடர்பாக, 2018 செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

அந்தப் பரிந்துரையின் மீது இதுவரை கவர்னர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்தநிலையில், “சட்டவிரோதக் காவலில் இருக்கும் என்னை விடுதலை செய்ய வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார் நளினி.

விடுதலை செய்வது என்று மாநில அமைச்சரவை முடிவெடுத்த பிறகு, இன்னமும் விடுதலை செய்யாமல் சிறையில் வைத்திருப்பது சட்டவிரோதமானது என்பது நளினியின் வாதம்.

நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

ஏற்கெனவே, இந்த வழக்கில் நீதிபதிகள் தாமாக முன்வந்து மத்திய அரசை எதிர்மனுதாரராகச் சேர்த்தனர். அதன்படி மத்திய அரசு இந்த வழக்கில் பதில் மனுவைத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இந்த மாதம் 12-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நளினி தரப்பில் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜரானார்.

அவர், “நளினி உட்பட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, அதைச் சட்டப்படி ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைத்த பின்னரும், ஏழு பேரையும் சட்டவிரோதமாகச் சிறைக்குள் அடைத்து வைத்திருப்பது நியாயமற்றது.

அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு மாநில கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று பல தீர்ப்புகளின் வாயிலாக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசே தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, அதில் கவர்னர் கையெழுத்திடக்கூடத் தேவையில்லை.

இந்த விஷயத்தில் தமிழக அரசே தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். எனவே, சட்டவிரோதமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

 uretzhhee

Governor Banwarilal purohit

அதைத் தொடர்ந்து, நளினி சட்டவிரோதக் காவலில் இருக்கிறாரா, அல்லது சட்டப்படி சிறையில் இருக்கிறாரா என்பது குறித்து இம்மாதம் 18-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 இதுகுறித்து வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அரசு முடிவெடுத்துவிட்டது.

இது தொடர்பாக, 09.09.2018 அன்று அமைச்சரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

அதில், கவர்னர் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை. கவர்னருக்கு அனுப்பப்பட்டது கவர்னருக்கான அறிவுரைதானே தவிர, அது பரிந்துரை கிடையாது. அது வெறும் சம்பிரதாயமான ஒன்றுதான்.

uztrewassddதமிழக அமைச்சரவை அரசமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி இந்த முடிவை எடுத்துள்ளதால், இந்த முடிவை மாற்றவோ, ஆவணங்களைத் திருப்பி அனுப்பவோ கவர்னருக்கு உரிமை இல்லை.

அந்த அறிவுரை வழங்கிய மறுகணமே அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்திருக்க வேண்டும்.

அமைச்சரவை முடிவெடுத்துவிட்டால், அதில் கவர்னர் கையெழுத்திட வேண்டிய அவசியம் கிடையாது என்று 1980-ம் ஆண்டு மாரு ராம் வழக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

எந்தவிதமான தன்னிச்சையான முடிவு எடுப்பதற்கும் கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. நான் நளினிக்காகத்தான் ஆஜராகிறேன்.

10.09.2018 முதல் ஒவ்வொரு நாளும் சட்டவிரோதக் காவலில்தான் நளினி இருக்கிறார். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்றார்.

இந்த வாதத்தின்படி நளினி விடுதலை செய்யப்பட்டால், பேரறிவாளன் உள்ளிட்ட மற்றவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள்.
ஆனால், தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்பதைப் பொறுத்தே அது அமையும்.
Share.
Leave A Reply