ரேஸ் பைக்கில் ஆர்த்தியை அழைத்துக்கொண்டு பெங்களூருவுக்குச் சென்றார். சேலம் ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டி செல்லும்போது, ரேஸ் பைக்கை ஓட்ட விரும்புவதாக விருப்பம் தெரிவித்திருக்கிறார் ஆர்த்தி.
காதலர் தினத்தில், காதலியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக பைக் ஓட்டக் கொடுத்த சம்பவத்தில் காதலி உயிரிழந்தது, சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அஸ்தம்பட்டி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர், துளசி. இவர்களுடைய மகள் ஆர்த்தி. வயது 19.
இவர் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதியைச் சேர்ந்த இன்ஜினீயரிங் மாணவர் அசோக்.
வயது 21. ஆர்த்தி, பெங்களூருவில் பள்ளியில் படிக்கும்போது, அசோக்கிற்கும் ஆர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இருவரும் காதலர்களாக இருந்துவந்திருக்கிறார்கள்.
சமீபத்தில், 3 லட்ச ரூபாய் மதிப்பிலான கே.டி.எம் ரேஸ் பைக்கை வாங்கியிருந்தார் அசோக். அந்த பைக்கில், காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்காக சேலம் வந்திருந்தார்.
பிறகு, அந்த ரேஸ் பைக்கில் ஆர்த்தியை அழைத்துக்கொண்டு பெங்களூருவுக்குச் சென்றார். சேலம் ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டி செல்லும்போது, ரேஸ் பைக்கை ஓட்ட விரும்புவதாக விருப்பம் தெரிவித்திருக்கிறார் ஆர்த்தி.
ஓட்டுநர் உரிமை ஆர்த்திக்கு இல்லாதபோதும் தன் காதலி ஆசையாகக் கேட்டதால், பைக்கை ஓட்டக் கொடுத்து பின்புறம் அமர்ந்துகொண்டார் அசோக்.
தீவட்டிப்பட்டி சமத்துவபுரம் அருகே போகும்போது, முன்னால் சென்ற டூவீலர் மீது பைக் மோதி, ஆர்த்தியும் அசோக்கும் கீழே விழுந்துள்ளார்கள்.
பைக்கின் பின்புறமாக வந்த லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் ஆர்த்தி. இதை எதிர்பார்க்காத அசோக், சம்பவ இடத்திலேயே கதறியழுதார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது சம்மந்தமாக தீவட்டப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பிறகு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆர்த்தியின் உடல் கொண்டுசெல்லப்பட்டது.