கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை, கணவர் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். லாரி ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
பிரகாஷ்-பிரியா தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வீட்டுக்கு சின்னத்துரை என்னும் நபர் காலையிலும், மாலையிலும் பால் ஊற்றி வந்துள்ளார்.
தினமும் காலையிலும், மாலையிலும் வீட்டுக்கு வந்து சென்றதில் சின்னத்துரை-பிரியா இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பானது நாளடைவில் கள்ளக்காதலாக உருவெடுத்துள்ளது.
இதை பிரகாஷ் கண்டிக்க, சின்னத்துரை பால் ஊற்றுவதை நிறுத்தி விட்டார். ஆனால் பிரியா கணவருக்கு தெரியாமல் அவரை தேடிச்சென்று சந்திக்க ஆரம்பித்துள்ளார்.
சம்பவ தினமான நேற்று வெளியே சென்ற பிரகாஷ் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது பிரியா வீட்டில் இல்லை.
அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது அவர் சின்னத்துரை வீட்டுக்கு சென்றதாக அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் அரிவாளை எடுத்துக்கொண்டு சுவர் ஏறிக்குதித்து சின்னத்துரை வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி இருக்கிறார். இருவரும் சத்தம்போட்டு அலறியுள்ளனர்.
சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிப்போய் பிரகாஷை தடுத்து இருவரையும் காப்பாற்றி உள்ளனர்.
பின்னர் இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கெங்கவல்லி போலீசாருக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர்.
எனினும் போலீசார் வருவதற்கு முன்னரே ரத்தக்கறையுடன், கெங்கவல்லி காவல் நிலையத்தில் பிரகாஷ் சரணடைந்தார். பிரகாஷை கைது செய்த போலீஸார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.