தாம் மாதவிடாய் நாட்களில் இல்லை என நிரூபிப்பதற்காக கல்லூரி மாணவிகள் 68 பேரின் உள்ளாடைகளை களைந்து விடுதி நிர்வாகிகள் சோதனை நடத்திய சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் ஸ்ரீசஹாஜானந்த் பெண்கள் நிறுவகம் (Shree Sahajanand Girls Institute ) எனும் கல்லூரியின் விடுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வி நிறுவனத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள். கல்லூரி கட்டுப்பாட்டில் இயங்கும் மாணவிகளின் விடுதியில் தொலைதூர பிரதேசங்களைச் சேர்ந்த மாணவிகள் தங்கியுள்ளனர்.

மேற்படி கல்லூரி சுவாமிநாராயண் மன்றத்தினால் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விடுதியிலுள்ள மாணவிகள், தமது மாதவிடாய் காலத்தில் சக மாணவிகளுடன் அமர்ந்து உணவு உண்பதும், பழகுவதும் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுதிக்கு வெளியே பயன்படுத்தப்பட்ட ஆரோக்கியத் துவாய் ஒன்று காணப்பட்டது. இதையடுத்து விடுதியிலுள்ள மாணவிகள் எவரும் தமது மாதவிடாய் நாட்களில் இல்லை என நிரூபிக்குமாறு விடுதி நிர்வாகம் வலியுறுத்தியது.

இதற்காக 68 மாணவிகளும் வரிசையாக விடுதியின் கழிவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளாடையை களைந்து சோதனைக்குட்படுத்தப்பட்டனர் என மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நடவடிக்கைக்கு எதிராக கல்லூரிக்கு வெளியே மாணவிகள் ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தினர்.

சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நாம் எதிர்கொண்ட இந்த அவமானத்தை விபரிக்க வார்த்தைகள் இல்லை என மேற்படி மாணவிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து சோதனைக்குட்படுத்திய விவகாரம் அம்பலமாகி சர்ச்யை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து கல்லூரியின் நிர்வாகக் குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி அதிகாரி ஒருவர் விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பெண் இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் கல்லூரி விடுதி மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, குஜராத் மாநில மகளிர் ஆணையம், இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார், இருந்து விரிவான அறிக்கையை கோரியுள்ளதாக மேற்டி ஆணையத்தின் தலைவர் லீலா அங்கோலியா தெரிவித்தார்.

Share.
Leave A Reply