“விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்கிற காரணத்தினால் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியாது,
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கமுடியாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார்.
அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேராவை இன்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். அதன் போதே சம்பந்தன் இதனை வலியுறுத்தினார்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு உ ருவாக்கம் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் வேறுவிதமான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாகவும் பெருன்பான்மை மக்கள் அதிகாரபரவலாக்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை எனவும் அத்தகைய சந்தர்ப்பத்தில் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் எனவும் உண்மைக்கு புறம்பாக அறிக்கைகள் வெளியிடுவதனையும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.
அவை அனைத்தும் பதியப்பட்டவையாக உள்ளன எனவே இத்தகைய நிலையில் சர்வதேச சமூகம் வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த வாக்குறுதிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் காலத்தில் கொடுக்கப்பட்டவை எனவும் தற்போது விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்கிற காரணத்தினால் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியாது என்பதனையும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கமுடியாது என்பதனையும் இரா சம்பந்தன் வலியுறுத்தினார்கள்.
உலகின் பலவேறு பகுதிகளில் உள்ளவாறு ஒரு அதிகாரபரவலாக்கத்தின் மூலமான அரசியல் தீர்வொன்றினை நாம் எதிர்பார்க்கிறவம் என் வலியுறுத்திய இரா சம்பந்தன், இலங்கை எனது நாடு இங்கே சம உரிமையுள்ள பிரஜையாக நான் மதிக்கப்படவேண்டும்.
அண்மையில் இலங்கை பிரதமருடனான ஊடக சந்திப்பில் இந்திய பிரமர் இலங்கை மக்கள் நீதியுடனும் சமத்துவத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்கான சூழல் அமைய வேண்டும் என்பதனை வலியுறுத்தி இருந்தார் என்பதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
நியாயமுள்ள அரசியல் தீர்வொன்றினை அடைய முடியாதே போனால் அது பாரிய பின்விளைவுகளை கொண்டுவரும் என தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள், தமிழ் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிங்கள தலைவர்கள் மதிக்காதன் விளைவே விடுதலைப்புலிகளின் உருவாக்கத்திற்கு காரணம் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருது தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், 2012ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய இராஜ்ஜியம் மனித உரிமை பேரவையில் முன்வைத்த பிரேரணையின் அமுலாக்கத்தின் அவசியம் குறித்து தெளிவுபடுத்தினார்.
நிலையான அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றினை நிலைநாட்ட வேண்டுமெனில் பிரேரணையில் உள்ள விடயங்கள் அமுலாக்கப்படவேண்டும் எனவும் திரு சுமந்திரன் அவர்கள் வலியுறுத்தினார்.
இதற்கப்பால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படுவதன் அவசியத்தினை விளக்கிய சுமந்திரன், தம் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்துகொள்ளாமல் எந்தவொரு நஷ்ட ஈட்டிற்கும் எம்மக்கள் அணுமதிக்கப்போவதில்லை என தெரிவித்த சுமந்திரன், அரச படைகளிடம் கையளிக்கப்பட்டவர்கள் இருந்திருப்பின் அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்ற உண்மை வெளிக்கொணரப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.
உண்மையை கண்டறிந்து நஷ்ட ஈடு வழங்குவதில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலம் மற்றும் நஷ்ட ஈட்டு அலுவலகம் என்பன சேர்ந்து இயங்க வேண்டும் என தாம் எதிர்பார்த்ததாகவும் அது தற்போது நிகழ்வதற்கான சாத்தியங்கள் குறைவு எனவும் தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள் எம்மால் இயலுமான அனைத்தையும் நாம் செய்து விட்டோம்.
இனிமேல் இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவனத்தை சர்வதசேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என இரா சம்பந்தன் தெரிவித்தார்.
பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் முகமாக புதிய அபிவிருத்தி திட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு தேவை என்பதனை சுட்டி காட்டினார்.
மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு ஒரு விசேட வேலைத்திட்டம் தேவை என்பதனையும் சுட்டிக்காட்டிய எம். ஏ சுமந்திரன் அவர்கள் மீன்பிடித்துறை , விவசாயம், பண்ணனை வளர்ப்பு போன்ற துறைகள் நவீனமயப்படுத்தப்பட வேண்டியதன் அவைசியத்தினையும் சுட்டிக்காட்டிய அவர் அவ்வாறு செய்யப்படுகின்ற பொழுது உச்ச பயன்பாட்டினை அடைய முடியும் என்பதனையும் எடுத்துக்கூறினார்.
சர்வதேச சமூகத்தின் குரல் இலங்கை விடயம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் கேட்ட வேண்டும் எனவும் தமிழ் மக்களிற்கான ஒரு அரசியல் தீர்வு எட்டப்படும் பணியில் சர்வதேசத்தின் பங்களிப்பு அத்தியாவசியமானது எனவும் இரா சம்பந்தன் வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த குழுத்தலைவர் இலங்கை அரசாங்கமானது தனக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் ஐக்கிய அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என தெரிவித்தார்.