அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டிற்கிடையே ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்சினை?
கடந்தகால வரலாறு:
கடந்த 80 ஆண்டுகளாகவே அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையே அரசியல் ரீதியான தொடர்பு இருந்துவருகிறது.
40 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஈரானில் அதிபர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் அமெரிக்காவிற்கு ஆதரவளித்தே வந்துள்ளனர்.
மேலும் அமெரிக்காவிற்கு ஈரான் அளிக்கும் ஆதரவு மூலம் ஈரானின் எண்ணெய் விற்பனையும் உலகளவில் கொடி கட்டி பறந்தது.
ஆனால் 1978 மற்றும் 1979ம் ஆண்டுகளில் அப்போதைய அதிபர் முகமது ரேஷா பாலவிக்கு எதிராகவும் அவரது முடியாட்சிக்கு எதிராகவும் ஈரானில் போராட்டங்கள் வெடித்தன.
அபோது போராட்டாக்காரர்கள் ஈரானில் இருந்த அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றி அங்கிருந்த ஊழியர்களை பணையகைதிகளாக 444 நாட்கள் சிறைப்பிடித்து வைத்தனர்.
இந்த சம்பவம் அமெரிக்காவிற்கு பெரும் கோபத்தை தூண்டினாலும் ஈரானின் மீது அமெரிக்கா அப்போது போர் தொடுக்கவில்லை. பின்னர் 1981ம் ஆண்டு முடியாட்சி நிறைவடைந்து ஈரானில் சையது அலி ஹூசைன் காமேனி தலைமையில் குடியாட்சி தொடங்கியது.
அதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு நட்பாக இருந்த ஈரான் அதன் பிறகு அமெரிக்காவிற்கு எதிரியானது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான பல பொருளாதார உறவுகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் 1981ம் ஆண்டு எண்ணெய் விற்பனையில் போட்டியாக இருந்த அண்டை நாடானா ஈராக்குடன் ஈரானிற்கு போர் மூண்டது.
இந்த போரில் ஈராக்கிற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும், ஈரானிற்கு லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளும் ஆதரவளித்தன.
அந்த போர் முடிவுக்கு வந்த 1988ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி ஈராக்கில் இருந்த அமெரிக்க படைகள் ஈரானின் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தின. இந்த தாக்குதலில் 290 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதில் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்ட ஈரானிய மக்களே அதிகமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, போர் விமானம் என்று நினைத்து தவறுதலாக பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
8 ஆண்டுகள் நடைபெற்ற இந்த போர் 1988ம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்தது.
2000ம் ஆண்டில் ஈரானுக்கு எதிரான நாடுகள் ஒன்றிணைந்து, ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாகவும், அணு ஆயுத தளவாடங்களை வைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இதனால் ஈரானின் மீது ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா போன்றவை பொருளாதார தடை விதித்தன.
மேலும் 2002ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ், வட கொரியா மற்றும் ஈராக்குடன் இணைந்து, ஈரானை தீய சக்திகளின் பிறப்பிடம் என பிரகடனம் செய்தார்.
பின்னர் 2013ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒபாமாவும், ஈரானில் புதிதாக பதிவியேற்றிருந்த ஹாசன் ரூகானியும் தொலைப்பேசியின் மூலம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சு வார்த்தையின் நீட்சியாக 2015ம் ஆண்டு அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஈரான்.
அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருப்பது என்ன?
அணு ஆயுத ஒப்பந்தத்தின் படி, ஈரான் 2031ம் ஆண்டு வரை அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடக்கூடாது.
மேலும் அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படும் யுரேனியம் மற்றும் புளூட்டோனியம் போன்றவற்றையும் ஆயுத தயாரிப்பில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் ஒப்பந்தம் போடப்பட்டது.
மேலும் ஈரானில் எத்தனை அணு சக்தி மையங்கள் உள்ளன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
அந்த அணு சக்தி மையங்களை சர்வதேச அணு சக்தி கழகமும், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் ஆண்டுக்கு ஒருமுறை ஈரானில் ஆய்வு நடத்துவார்கள்.
அப்படி ஆய்வு செய்யும்போது அவர்களுக்கு அணு ஆயுத தளவாடங்கள் இருப்பதாக சந்தேகம் ஏற்படும் இடங்களில் எல்லாம் ஆய்வு செய்ய ஈரான் அரசு அனுமதிக்க வேண்டும் போன்றவை ஒப்பந்தங்கங்களில் இடம்பெற்றிருந்தன.
டொனால்ட் ட்ரம்ப் அதிபரான பிறகு:
ஆனால் அமெரிக்காவில் ஒபாமாவின் ஆட்சிக்கு பின்னர் அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் இறுக்கமான போக்கையே கடைபிடித்தார்.
மேலும் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் மீறுவதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். மேலும் ஈரானுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை கைவிடுவதாகவும் அறிவித்தார்.
பின்னர் ஈரான் மீது 2018ம் ஆண்டு பொருளாதார தடையை வித்தித்து, அந்நாட்டில் இருந்து யாரும் எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டாலும் அவைகளும் ஈரானிடமிருந்து வாங்கும் எண்ணெயின் அளவை வெகுவாக குறைத்துக்கொண்டன.
பின்னர் 2019ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஓமன் நாட்டின் 6 எண்ணெய் கிணறுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியது.
மேலும் அதே ஆண்டு ஜூன் மாதம் 20 தேதி ஈரானின் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி அமெரிக்காவின் ராணுவ ட்ரோனை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
பின்னர் 2020 ஆண்டு ஜனவரி 3ம் தேதி ஈரானின் இரண்டாவது பெரிய தலைவராக கருதப்பட்ட ராணுவ தளபதி குசேம் சுலைமாணியை ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கா சுட்டுக்கொன்றது.
மேலும் சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு காரணமாக அவர் தீவிரவாத இயக்கங்களுக்கு துணை போவதகாவும் அணு ஆயுதங்களை சட்ட விரோதமாக தயாரிப்பதாகவும் அமெரிக்கா காரணம் கூறியது.
இந்த சம்பவத்திற்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்தது. மேலும் ஈரானில் இருக்கும் 5000 அமெரிக்க படை வீரர்களையும் தீவிரவாதிகள் என ஈரான் அரசு அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் விமானம் தாக்குதல்:
இந்நிலையில் கடந்த 8ம் தேதி ஈரான் நாட்டின் தெஹரான் விமான நிலையத்திலிருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட உக்ரைன் விமானம் வானில் வெடித்து சிதறியது.
இதில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் விமானிகள் உட்பட 176 பேர் உயிரிழந்தனர்.
முதலில் விமானம் விபத்துக்குள்ளானதாகவே செய்திகள் பரவின. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக குற்றஞ்சாட்டின. இந்த குற்றச்சாட்டை முதலில் மறுத்து வந்த ஈரான் நேற்று (11-01-2020) மனித தவறினால் உக்ரைன் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவித்தது.
உலக நாடுகள் கண்டனம்
இதற்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ஈரானிலும் அரசுக்கு எதிராக ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஈரானில் நடந்து வரும் போராட்டங்களை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், தாம் அதிபர் ஆனது முதல் ஈரான் மக்களுக்கு ஆதரவாக இருந்து வந்ததாகவும், அது தொடரும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் உலக நாடுகளிடையே மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதாக அந்நாட்டிற்கான பிரிட்டன் தூதர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
உலகளவில் ஈரானின் நடவடிக்கைகளும் அமெரிக்காவின் நடவடிக்கைகளும் போர் மூளுமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த பதற்றத்தை நிரூபிக்கும் விதமாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளத்தில் மூன்றாம் உலகப்போர் என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டானது.
மேலும் உலக அரசியலையை கவணிக்கும் பல தலைவர்களும் மூன்றாம் உலகப்போர் ஏற்படலாம் என்ற கவலையையும் தெரிவித்தனர்.
மேலும் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் தலைவரான போப்பாண்டவர், அமெரிக்காவும் ஈரானும் போர் பதற்றத்தை ஏற்படுத்தாமல் பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
ஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக பகை நீடித்துவருகின்றது. மேலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதைப்போலவும், முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.
மேலும் இரு நாடுகளுமே அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் என்பதால் போர் ஏற்பட்டால் இரண்டு நாடுகளுக்குமே பேரிழப்பு ஏற்படும் என்பதே நிதர்சனமான உண்மை.