சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வீடு அருகே விழும் குண்டுகளால் தனது 4 வயது மகள் பயப்படக்கூடாது என்பதற்காக குண்டு விழும்போது சிரிக்கவேண்டும் என தந்தை சொல்வது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் பரவிவருகிறது.

டமாஸ்கஸ்:

சிரியாவில் 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நாட்டின் வடக்கு பகுதிகளை தற்போது சிரிய அரசுகள் தங்கள் வசம் கைப்பற்றிவருகின்றனர்.

மேலும், வடக்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் போராளிகள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது.

இட்லிப் மாகாணத்தின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள போராளிகள் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. மேலும், சிரியாவின் எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளையும் குவித்துவைத்துள்ளது.

உள்நாட்டில் தொடங்கிய இப்போர் தற்போது இட்லிப் மாகாணத்தை கைப்பற்றும் நோக்கில் உள்ள துருக்கி-சிரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், கடந்த வாரம் துருக்கி ராணுவ வீரர்கள் 10 பேர் சிரிய ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் துருக்கி நடத்திய தாக்குதலில் 50-க்கும் அதிகமான சிரிய வீரர்கள் உயிரிழந்தனர்.

இதற்கிடையில், போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எஞ்சிய பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகளின் ஆதரவுடன் சிரிய ராணுவம் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகிறது.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்துவருகின்றனர். பலரும் தங்கள் வசிப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிவருகின்றனர்.

இந்நிலையில், சிரியாவின் இட்லிப் பகுதியில் வசித்துவரும் அப்துல்லா தனது வீடு அருகே அரசுப்படையினரால் நடத்தப்படும் வான்வெளி தாக்குதலிலால் தனது 4 வயது நிரம்பிய குழந்தை செல்வா பயப்படக்கூடாது என்பதற்காக திசைதிருப்பும் நோக்கில் சிரிக்கவைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்.

மனதை பதறவைக்கும் இந்த வீடியோவில் வீடு அருகே குண்டுமழை பொழிந்த வண்ணம் உள்ளபோது குழந்தை செல்வாவிடம் அவளது தந்தை, ”விமானம் செல்கிறதா? அல்லது தாக்குதல் நடக்கிறதா? என கேட்கிறார். அதற்கு அந்த குழந்தை இது வான்வெளி தாக்குதல் என கூறுகிறது.

அப்போது வான்வெளி தாக்குதலால் அப்துல்லாவின் வீடு அருகே பெரும் சத்தத்துடன் குண்டுகள் விழுகின்றன.

உடனடியாக தனது மகள் பயந்துவிடக்கூடாது என எண்ணிய தந்தை அப்துல்லா மகளை திசைதிருப்பும் நோக்கில் இது மிகவும் வேடிக்கையாக உள்ளது அல்லவா? என கேள்வி எழுப்பினார். இதற்கு சிறுமி செல்வா ஆம் இது மிகவும் வேடிக்கையாக உள்ளது’’ என கூறுகிறார்.

பார்ப்போர் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.

Share.
Leave A Reply