இட்லிப்: சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும், கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு அளித்து வருகின்றன.

சிரியா உள்நாட்டுப் போரில் கடந்த 4 மாதங்களில் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

சிரியாவின் வடமேற்கு பிராந்தியத்திலிருந்து டிசம்பர் தொடக்கம் முதல் 9 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

போதுமான தங்குமிடம் இல்லாததால் 82 ஆயிரம் பேர் பேர் உறைபனியில் திறந்தவெளியில் வாழ்கின்றனர், மரங்களுக்கு அடியில் அல்லது பனி வயல்களில் குடியேறி உள்ளனர்.

முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் குளிரால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனிதாபிமான அமைப்பான ஏசிஎச்ஏ -யின் புள்ளிவிவரங்களின்படி, புதிதாக இடம்பெயர்ந்த குடும்பங்களில் 36 சதவிகிதம் உறவினர்களுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அல்லது வாடகை தங்குமிடங்களை பிடித்து உள்ளனர். அதே நேரத்தில் 17 சதவிகிதத்தினர் ஏற்கனவே நெரிசலான முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

குறைந்தது 15 சதவீதம் பேர் முடிக்கப்படாத கட்டிடங்களை தங்குமிடமாக்கி உள்ளனர், 12 சதவீதம் பேர் இன்னும் “தங்குமிடம் தேடுகிறார்கள் என கூறப்பட்டு உள்ளது.

சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு முடிவு கட்ட ரஷ்யா ஆதரவு பெற்ற சிரியா அரசுப்படை, கடந்த ஆண்டு முதல் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இட்லிப் நகரம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாக சமீபத்தில் சிரிய அரசு அறிவித்தது.இந்த நிலையில், வடமேற்கு சிரியாவில் பயங்கரமான நெருக்கடி நிலை உருவாகி உள்ளது.

இது குறித்து ஐ.நா. மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசர நிவாரணத் தலைவர் மார்க் லோகாக் கூறியதாவது:-

இடம் பெயர்ந்தவர்கள் பெருமளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள், முகாம்கள் நிரம்பியிருப்பதால் உறைபனி வெப்பநிலையில் அவர்கள் வெட்டவெளியில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

குழந்தைகளை சூடாக வைத்திருக்க தாய்மார்கள் பிளாஸ்டிக் எரிக்கின்றனர். குளிர் காரணமாக சிறு குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

அலெப்போ மாகாணத்தின் பகுதிகள் உட்பட இட்லிப் பிராந்தியத்தில் சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கின்றனர், அவர்களில் பாதி பேர் ஏற்கனவே நாட்டின் பிற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையே 2011 முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை 3,80,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வடமேற்கில் வன்முறை கண்மூடித்தனமானது என்று லோகாக் திங்களன்று எச்சரித்தார். சுகாதார வசதிகள், பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள், மசூதிகள் மற்றும் சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன, பல சுகாதார வசதிகள் மூடப்பட்டுள்ளன. நோய் பரவும் ஆபத்து உள்ளது. அடிப்படை உள்கட்டமைப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.

இடம்பெயர்ந்த மக்களுக்கான குடியேற்றங்கள் பாதிக்கப்படுவதாக நாங்கள் இப்போது தகவல்களை பெற்று வருகிறோம், இதன் விளைவாக இறப்புகள், காயங்கள் மற்றும் மேலும் இடம்பெயர்வு ஏற்படுகிறது என மார்க் லோகாக் கூறி உள்ளார்.

Share.
Leave A Reply