தமிழ்த் தேசிய அரசியலில், மாற்றுத் தலைமை(களு)க்கான வெளி, யாழ். தேர்தல் மாவட்டத்திலுள்ள ஏழு நாடாளுமன்ற ஆசனங்களுக்குள் மெல்ல மெல்லச் சுருக்கப்பட்டுவிட்டது.

கடந்த சில ஆண்டுகளாக, மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்கள் முன்னெடுத்துவரும் அரசியல், இதைத்தான் உணர்த்துகிறது.

அவ்வாறான கட்டத்தில் இருந்துதான், மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களும் அதன் ஆதரவுத் தரப்பினரும், எதிர்வரும் பொதுத் தேர்தலைச் சந்திக்கப் போகிறார்கள்.

அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடத்துணியும் சமூகங்களிடம், விடுதலைக்கான சித்தாந்தமும் அதை அடிப்படையாகக் கொண்ட அரசியலும் அவசியமாகும்.

விடுதலைக்கான சித்தாந்தம் என்பது, ஒரு சமூகத்துக்குள் காணப்படும் அக முரண்பாடுகளை, தர்க்க நியாயங்களோடு களைவதாகவும் இருக்க வேண்டும். (அக முரண்பாடுகள் என்பது சாதி, சமய, வர்க்க, பிரதேச வேறுபாடுகளைக் கொண்டதாகக் கூட இருக்கலாம்)

அதுதான், அந்தச் சமூகத்தின் சித்தாந்த அரசியலை ஒருங்கிணைக்கவும் தக்க வைக்கவும் உதவும். மாறாக, ஒரு பிரதேசம், மதம், சாதி,  வர்க்கம் ஆகியவற்றின் பிடியில் எழும் அரசியல், எப்போதும் சுயநல அடிப்படைகளைக் கொண்டதாக இருக்கும்.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது, சித்தாந்த அடிப்படையில் தோற்றம் பெற்ற ஒன்றுதான். பௌத்த, சிங்கள பேரினவாதம், மூர்க்கம் பெற்ற தருணத்தில், அதற்கு எதிரான திரட்சியை, தமிழ் மக்களிடம் ஏற்படுத்தும் அடிப்படைகளோடு எழுந்தது. அதன் நீட்சிதான் இன்றும் இருக்கின்றது.

ஆனால், அது, அக முரண்பாடுகளை முழுமையாகக் களைந்து, பூரணத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால், பூரணத்துவத்துக்கு அண்மித்த நிலையை எட்டியிருந்ததாகக் கொள்ளலாம்.

ஆனால், இன்றைய நிலை என்பது, வருந்தத்தக்க கட்டத்தை எட்டி இருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால், கட்சிகளோ அமைப்புகளோ அந்தக் கட்டத்தை அடைவது தொடர்பில், பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால், தமிழ்த் தேசிய அரசியலை அடிப்படையாகக் கொள்வதாகக் காட்டிக் கொள்ளும் தரப்புகள், குறிப்பாக மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையாளர்கள், அவ்வாறான நிலைக்குள் சிக்குவதென்பது, மிகவும் சிக்கலானது. அது, அவர்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் இன்னும் இன்னும் பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்கள், கடந்த ஒரு தசாப்த காலமாகத் திரட்சியொன்றுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சில முயற்சிகளை முட்டிமோதி எடுக்கவும் செய்திருக்கிறார்கள். ஆனால், அவை அனைத்தும் உதிரிகளை உருவாக்கி இருக்கின்றனவே தவிர, உருப்படியான தரப்பொன்றை இதுவரையில் உருவாக்கவில்லை. மாறாக, உருவாகியுள்ள உதிரிகளிடமும் பிளவுகளும் பிரச்சினைகளுமே ஏற்பட்டிருக்கின்றன.  

கூட்டமைப்புக்கான விதை, கிழக்கில்தான் போடப்பட்டது. அங்கு முளைத்த விதைதான், வடக்கு, கிழக்கு பூராவும் வளர்த்திருக்கின்றது. அதற்கு,  விடுதலைப் புலிகள் பாரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். புலிகளுக்குப் பின்னரான காலத்தில், கூட்டமைப்பில் பிரிவுகளும் பிளவுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருக்கின்றன.

ஆனாலும், கூட்டமைப்பு இன்றைக்கும் தமிழ் மக்களின் (ஏக) பிரதிநிதிகள் என்கிற தகுதியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

கூட்டமைப்பின் அரசியலோ, அதன் முடிவுகளோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. கிட்டத்தட்ட ‘குறைகுடம்’ போலத்தான் கூட்டமைப்பின் அரசியல் இருந்து வருகின்றது. குறைகுடத்தின் தளம்பல்களைச் சகித்துக் கொள்ள முடியாத மக்கள், விரக்தியுடன் இருக்கிறார்கள்.

ஆனால், விரக்தியடைந்த மக்களை ஒன்றிணைக்கும் தரப்புகள், (அதுவும் பூரணத்துவம் மிக்க அரசியலைச் செய்யும் தரப்புகள்) தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் எழுச்சி பெறாமைதான், கூட்டமைப்பு மீதான விரக்திகளைத் தாண்டி, அதன் ஆதரவுத் தளம் நிலைபெறுவதற்குக் காரணமாகும்.

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் களம் என்பது, தேர்தல் வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டதுதான்.

யார் விரும்பினாலும் இல்லையென்றாலும் மக்களின் பிரதிநிதிகள் என்கிற அடையாளத்தைப் பெறுவதற்குத் தேர்தல் வெற்றிகள் அவசியமாகின்றன.

TNA.png

கூட்டமைப்பு தொடர்ச்சியாகப் பெற்ற வெற்றிகள்தான், அவர்களை (ஏக) பிரதிநிதிகள் நிலைக்குத் தள்ளியுமிருக்கின்றன. அப்படியான கட்டத்தில், மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையாளர்கள், தேர்தல் வெற்றியைக் குறிவைத்து, இயங்குவது தவிர்க்க முடியாததுதான்.

ஆனால், மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையைக் கொண்டு நடக்கும் இவர்கள், ஒரு பிரதேசத்துக்குள் மாத்திரம் வெற்றிக்கான அடியைத் தேடுவதுதான் பிரச்சினையாகின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடங்கி, அண்மையில் உருவான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வரையில், அவர்களின் எல்லை என்பது, யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருக்கப்பட்டுவிட்டது.

அதுவும், யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் வரும், கிளிநொச்சி கூட அவர்களின் எல்லைகளுக்குள் சேர்வதில்லை. அப்படியான நிலையில், மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களின் வீச்சு என்பது, தமிழ் மக்களிடம் என்ன வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற கேள்வி எழுகின்றது.

எந்தத் துறையாக இருந்தாலும், ஒரே நாளில் பெரிய வெற்றிகளைப் பெற்றுவிட முடியாதுதான். ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பிக்கும் பயணம், மெல்ல மெல்ல அடுத்த கட்டங்களை அடைய வேண்டும். அதற்கு, காலமும் நேரமும் தேவைதான்.

அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், தமிழ்த் தேசிய அரசியலின் மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையாளர்கள் இன்று நேற்று உருவானவர்கள் அல்ல.

இவர்கள், புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான நாள்களில், கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிராக எழுந்தவர்கள்.

இவர்களால், கடந்த ஒரு தசாப்த காலத்தில், ஒற்றை வெற்றியையேனும், நம்பிக்கை கொள்ளும் அளவுக்குப் பெற முடியவில்லை என்பதுதான் பெரிய சிக்கல்.

ஒவ்வொரு தேர்தல் காலத்திலும், மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களின் குறி, யாழ். தேர்தல் மாவட்டம்தான். அதைத்தாண்டி, அவர்கள் சிந்திப்பதில்லை. ஒப்புக்கு வேண்டுமானால், வேட்பாளர்களை நிறுத்துவார்கள்.

இந்த நிலையை உருவாக்கியதில், யாழ். மய்யவாதிகளும் ஊடகங்களும் அரசியல் கட்டுரையாளர்களும் புலம்பெயர் அமைப்புகளும் பங்காளிகள் ஆவார்.

ஒவ்வொரு தேர்தலும், யாழ். தேர்தல் மாவட்டத்துக்காக மாத்திரம் நடத்தப்படுவது மாதிரியான நிலைப்பாடொன்றை, இவர்கள் வரையறுக்கிறார்கள்; அதன் அடிப்படையில்தான் சிந்திக்கிறார்கள்; செயற்படுகிறார்கள்(?). அதனால்தான், யாழ்ப்பாணத்தைத் தாண்டி, மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களால் வடக்கு, கிழக்கில் கோலோச்ச முடிவதில்லை.

தேர்தல் அரசியலுக்கு என்றொரு வடிவம் இருக்கின்றது. எவ்வளவு முட்டி மோதினாலும், யாராலும் 100 சதவீத வாக்குகளைப் பெற முடியாது. 

அப்படியான நிலையில், தேர்தலொன்றில் விழப்போகும் வாக்குகளில், பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்கான ஓட்டம்தான் வெற்றியின் அடிப்படை.

அப்படியான நிலையில், ஒரு பிரதேசத்துக்குள் மாத்திரம் சுருங்கிவிட்டவர்களால், அந்த அடிப்படைகளைத் தொடுவது சிரமமானது.

kajan-8_1080

வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “…நேர்மையாகவும் கொள்கையில் உறுதியாகவும் செயற்படும் எமது கட்சிக்கு, தமிழ் மக்கள் அமோக ஆணையை வழங்கிக் குறைந்தது, 15 ஆசனங்களை வடக்கு, கிழக்கில் பெற ஆதரவு தர வேண்டும்…’ என்றார். உண்மையிலேயே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தன்னுடைய வாக்கு எல்லையை, யாழ்ப்பாணத்துக்குள் சுருக்கிக் கொண்டுவிட்ட கட்சி.

அப்படியான நிலையில், வடக்கு,  கிழக்கு பூராவும் பெரிய வெற்றியொன்றை (கிட்டத்தட்ட ஏக பிரதிநிதிகள் அளவுக்கான வெற்றியை) மக்கள் வழங்க வேண்டும் என்று, என்ன அடிப்படையில் கோருகிறார்?

வடக்கு, கிழக்கு மக்களிடம் நம்பிக்கையைப் பெறுவதற்கு அவரும், அவரது கட்சியும் கடந்த காலங்களில் எவ்வாறான நடவடிக்கைகளை  முன்னெடுத்திருக்கிறார்கள்?

அதுபோலத்தான், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டணியான, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நிலையும் ஆகும்.

இவர்களின் உண்மையான எல்லை எது என்பதை, பொதுத் தேர்தல் சிலவேளை உறுதிப்படுத்தலாம். ஏனெனில், புதிய கூட்டணியில் ஈ.பி.ஆர்.எல்.எப் தவிர்ந்த எந்தக் கட்சியும் தனி வாக்கு வங்கியைக் கொண்டிருப்பவை அல்ல.

பெருவெளியாகக் காணப்பட்ட மாற்றுத் தலைமைக்கான வெளி, உதிரிகள் எடுத்துக் கொண்ட சொற்பவெளி போக, சுருங்கிவிட்டது. அது, வடக்கு, கிழக்கின் அரசியலைக் கூட்டமைப்பின் பக்கத்துக்கு மீண்டும் தள்ளிவிட்டிருக்கின்றது.

புத்திஜீவிகள் உள்ளிட்ட மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையாளர்கள், யாழ். தேர்தல் மாவட்டத்தை மாத்திரம் முன்னிறுத்திச் சிந்திப்பதை எப்போது நிறுத்திவிட்டு, வடக்கு, கிழக்கு என்கிற சிந்தனைக்கு வருகிறார்களோ, அன்று ஆரோக்கியமான மாற்றுத் தலைமைக்கான வெளி மீண்டும் திறக்கும். அதுவரை, ஒப்பாரிகள் ஓயப்போவதில்லை.

-புருஜோத்தமன் தங்கமயில்-

Share.
Leave A Reply