ஸ்பெயினில் கொரோன வைரசினை கட்டுப்படுத்துவதற்கு உதவி வரும் இராணுவத்தினர் முதியோர் இல்லங்களில் பலரை கைவிடப்பட்ட நிலையில் மீட்டுள்ளதாகவும் சிலரை உயிரிழந்த நிலையில் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயினின் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரொப்பிலெஸ் இதனை  தெரிவித்துள்ளார்.

சில இடங்களிற்கு சென்றவேளை இராணுவத்தினர் முற்றாக கைவிடப்பட்ட நிலையில் முதியவர்களை மீட்டுள்ளனர்  என தெரிவித்துள்ள  பாதுகாப்பு அமைச்சர் கட்டில்களில் இறந்தநிலையில் சிலர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சில முதியோர் இல்லங்களில் கொரோனவைரஸ் பரவத்தொடங்கியதை தொடர்ந்து அவற்றின் பணியாளர்களும் உரிமையாளர்களும் அவற்றை கைவிட்டுள்ளனர் என ஸ்பெயினின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

crona_spainஇவ்வாறான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை சகித்துக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் தங்கள் கடமைகளை புறக்கணிக்கும் எவரும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

வைரஸ் பாதித்துள்ள சூழ்நிலையில் முதியோர்கள் நடத்தப்படும் விதம் குறித்து இருக்கமான நடைமுறைகளை பின்பற்றப்போவதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் அரசாங்கம் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்மை காரணமாக செவ்வாய்கிழமை முதல் உடல்களை சேகரிப்பதை நிறுத்தப்போவதாக மட்ரிட்டின் மாநகர இறுதிச்சடங்கு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply