அமெரிக்காவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. அங்குள்ள பிரபல நகரமான நியூயார்க்கில் இந்த வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ளது.
கடந்த திங்கட்கிழமை மட்டும் அங்கு 5,085 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவில் முதல் முறையாக ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 130 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு, திங்கட்கிழமை முடிவில் 43,700 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 550ஐ தாண்டியது.
இதற்கிடையே அமெரிக்காவில் முக்கிய மருந்துகள், மருத்துவ பொருட்கள், தனிநபர் பாதுகாப்பு கருவிகளான முகக்கவசம், கை கழுவும் திரவம் (சானிடைசர்) ஆகியவற்றை பதுக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார்.
பின்னர் டிரம்ப் கூறும்போது, “முக்கிய மருந்துகள், பாதுகாப்பு கருவிகளை கூடுதல் விலைக்கு விற்போர், பதுக்குவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். எளிதில் சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்க குடிமக்களின் துன்பத்தை பயன்படுத்தி யாரும் ஆதாயம் அடைவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” என்றார்.
அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க், வாஷிங்டன், கலிபோர்னியா ஆகிய பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், அந்த பகுதிகளுக்கு முக்கிய மருந்துகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி டிரம்ப் நிருபர்களிடம் தெரிவித்தார்.