இலங்கை ஒரு தீவு. இங்கிருந்து வெளியே செல்லவும் உள்ளே வரவும், ஒரே ஒரு பிரதான வழி தான் இருக்கிறது. அது தான் கட்டுநாயக்க விமான நிலையம். தவிர, மத்தல, யாழ்ப்பாணம் ஆகிய விமான நிலையங்கள், கப்பல்கள் வரும் சில துறைமுகங்கள் ஆகியன இருந்த போதிலும், இவற்றின் மூலம் மிகச் சிலர் மட்டுமே வருகின்றனர்.

இவற்றையும் கணக்கில் எடுத்தாலும், பொதுவாக நாட்டுக்குள் நுழைவதற்காக மிகச் சில வாயில்களே இருக்கின்றன. எனவே, வருபவர்களை மிக இலகுவாகக் கண்காணிக்கலாம்.

ஆனால், வேறு நாடுகளுடனான நில எல்லைகள் இருக்கும் நாடுகளில், அவ்வாறு நாட்டுக்குள் வருபவர்களைக் கண்காணிப்பது மிகவும் கடினமாகும். உதாரணமாக, நேபாளத்திலிருந்து வெளியேற, 15 பிரதான வீதிகள் இருக்கின்றன. அவற்றில், 13 வீதிகள் இந்தியாவுக்கான வீதிகளாகும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மதிற்சுவரோ, வேலியோ போடப்பட்டு மூடப்படவில்லை. எனவே, அந்தப் பிரதான வீதிகளுக்குப் புறம்பாக, திருட்டுத்தனமாக நேபாளத்திருந்து இந்தியாவுக்கும் இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கும் நுழையும் பல வழிகள் இருக்கின்றன.

மெக்சிகோவிலிருந்து கள்ளத்தனமாக, பல மெக்சிக்கோகாரர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதாகக் குற்றஞ்சாட்டியே, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் மதிற்சுவர் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டார்.

இலங்கைக்குள் நுழைவதற்காக, அவ்வாறான வழிகள் இல்லாததாலும் இருக்கும் சட்டபூர்வமான வழிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக இருப்பதாலும், இலங்கைக்குள் வருபவர்களைக் கண்காணிப்பது இலகுவாக இருந்த போதிலும், கொரோனா வைரஸால் உலகமே அச்சுறுத்தப்பட்டு, இருந்த நிலையில், அந்த வைரஸ் தாக்கியவர்கள் பலர், நாட்டுக்குள் நுழைந்து, பலருக்கு அந்த நோயை எவ்வாறு பரப்பினார்கள்?

இலங்கையின் சுகாதாரத் துறையினரும், கொள்கை வகுப்பாளர்களும் இந்த விடயத்தில் கோட்டை விட்டுள்ளார்கள் என்பதையே இது காட்டுகிறது.

ஜனவரி மாதம் 27 ஆம் திகதி, இலங்கையில் முதலாவது கொவிட்-19 நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். சீனப் பெண்ணான அவர், அடையாளம் காணப்பட்டவுடன், மக்கள் முகமூடி அணிய ஆரம்பித்தனர். ஓரிரு நாள்களிலேயே கடைகளில் முகமூடிகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

அதாவது, மக்கள் அந்நோயின் பாரதுரத்தன்மையை அப்போதும், அறிந்து இருந்தார்கள். ஆனால், சுகாதார அதிகாரிகள், “முகமூடிகள் இப்போதைக்குத் தேவையில்லை” என்று கூறியதாலும், கடைகளில் முகமூடிகள் இல்லாதமையாலும், பிரத்தியேகமாக அக்கறை செலுத்தத் தவறிவிட்டனர்.

சீனப் பெண், கொவிட்-19 நோயாளி என அடையாளம் காணப்பட்டமையானது, சுகாதாரத் துறையினருக்கு, ஓர் எச்சரிக்கைச் செய்தியைக் கூறியது. அதாவது, வைரஸ் காவிகள், நாட்டுக்குள் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதே ஆகும்.

ஆனால், எங்கே பிழைவிட்டோம் என்று பார்க்க, அதிகாரிகள் முற்படவில்லை. எந்தவொரு வெளிநாட்டவரும், தடையில்லாமல் நாட்டுக்குள் வரக்கூடிய நிலைமை தொடர்ந்தது.

நோய் வேகமாகவும் பரவலாகவும் பரவியிருந்த சீனாவிலிருந்து வருவோரும், கண்டிப்பான முறையில் தனிமைப்படுத்தப்படவில்லை.

அவர்கள், இலங்கையில் தாம் தங்கும் இடங்களிலேயே 14 நாள்கள் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என, அரசாங்கம் அறிவித்தது. அவர்கள், உண்மையிலேயே உரிய முறைப் படி தனிமைப்பட்டு இருந்தார்களா என்பதை, உறுதி செய்து கொள்ள முறையான பொறிமுறையொன்று இருக்கவும் இல்லை.

மார்ச் மாதம் நடுப்பகுதி வரை, அந்த நிலை நீடித்தது. அப்போது இத்தாலி, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில், கொவிட்-19 நோய் வேகமாகப் பரவிக் கொண்டு இருந்தது. அந்த நாடுகளில் இருந்து பலர், இலங்கைக்கு வருகை தந்து கொண்டும் இருந்தனர்.

ஆனால், அவர்களிடமிருந்து இலங்கையில் உள்ளவர்களுக்கு நோய் பரவாது என்பதைப் போன்றதோர் மனப்பாங்கிலேயே, இலங்கை அதிகாரிகள் நடந்து கொண்டனர்.

மார்ச் மாதம் 11 ஆம் திகதி, இலங்கைப் பிரஜை ஒருவரைக் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. அவர், உல்லாசப் பிரயாணிகளுக்கு வழிகாட்டும் ஒருவர்; மறுநாள், அந்த நபரது நண்பரொருவரும் வைரஸால் தாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

அடுத்த நாள், மேலும் மூன்று கொவிட்-19 நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் பழகியவர்கள் என்பதும் தெரிய வந்தது. அப்போது தான், அரசாங்கம் விழித்துக் கொண்டது.

நோயுள்ளவர்கள் நாட்டுக்குள் வந்தால் மட்டுமே, நாட்டுக்குள் வைரஸ் பரவலாம்; உள்நாட்டவர்கள் நோய்வாய்ப்படலாம். ஏனெனில், ஏனைய நோய்களைப் போலன்றி, இந்த நோயின் காவி மனிதனே.

உள்நாட்டவர்களை நோய் தாக்குவதாக இருந்தால், வெளிநாடுகளிலிருந்து நோய்க் காவிகள், விமான நிலையப் பாதுகாப்புக் கடவைகளை மீறி, உள்ளே சென்றிருக்கிறார்கள் என்பதற்கு இது ஆதாரமாகும். அதாவது, மேலும் பலரும் நோய்க்கு இரையாகி இருக்கலாம்.

இதையடுத்தே, அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து வருபவர்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுத்தது. முதலாவதாக, சீனாவை அடுத்து, மிகவும் கூடுதலாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இத்தாலி, தென் கொரியா, ஈரானிலிருந்து வருவோரை மட்டும், தனிமைப்படுத்தும் மய்யங்களுக்கு அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்படடது.

இதுவும் விந்தையான நடவடிக்கையாகும். ஓரிரு நோயாளர்கள் இருக்கும் நாடொன்றிலிருந்து வருபவர் ஒருவர், நோய்க் காவியாக இருக்க முடியாதா? அவ்வாறானவர்களைத் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பத் தேவையில்லையா? தேவையில்லை என்றே அரசாங்கம் கருதியது.

மார்ச் 14, 15, 16, 17 ஆகிய நாள்களில், இலங்கையில், தொடர்ச்சியாகப் புதிதாகக் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை முறையே, 05, 08, 10, 15 என அதிகரித்துக் கொண்டே போகும் போது தான், அரசாங்கம் தாம் விட்ட சில பிழைகளை உணர்ந்தது.

அதன்படி, மார்ச் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை, வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில், தமது பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டது.

அவர்கள், எவரெவருடன் பழகினார்கள் என்பது, அதன் பின்னரே ஆராயப்பட்டது. அவர்கள் அதற்குள், ஆயிரக் கணக்கானவர்களுடன் பழகியிருப்பார்கள். அவர்கள் வைரஸ் காவிகளாக இருந்திருப்பின், அவர்கள் மேலும் பலருக்கு அவற்றைப் பரப்பி இருப்பார்கள்.

இவ்வாறு வைரஸ் தொற்றியவர்கள் தான், இப்போது நாளாந்தம் நோயாளராகக் கண்டறியப்படுகிறார்கள். குறைந்த பட்சம், மார்ச் முதலாம் திகதி, நாடு திரும்பியவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னரே, அவர்களை ஏதாவது ஒரு முறையில் தனிமைப்படுத்தி இருந்தால், நாட்டுக்குள் நோய் பரவுவதைப் பெருமளவில் குறைத்து இருக்கலாம்.

இலங்கை, தீவொன்றாக இருப்பதன் பயனை நாம் அடையவில்லை; இன்னமும் சீனர்கள் தனிமைப்படுத்தப்படுவதும் இல்லை.

பொது மக்களும் இந்தத் தனிமைப்படுத்தலைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது. அதனால் தான், நாம் முன்னர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோர், தனிமைப்படுத்தலை விரும்பாமல், தமது மனைவி, பிள்ளைகள், பெற்றோர் வசிக்கும் இடங்களுக்குச் சென்றார்கள்.

அவர்களது மனைவி, பிள்ளைகள், பெற்றோரும் அவர்களுக்கு நிலைமையை விளக்கிக் கூறாமல், அவர்களை வரவேற்றார்கள்.

வேறு சிலர், நிலைமையைப் புரிந்து கொள்ளாமல், தமது பிரதேசத்தில் தனிமைப்படுத்தும் நிலையங்களை நிறுவ வேண்டாம் எனப் போராட்டம் நடத்தினார்கள்.

மார்ச் மாதம் 11 ஆம் திகதி முதல், நாளாந்தம் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு, மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, சுகாதார அதிகாரிகள் மக்களை அறிவுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையிலேயே, நாட்டின் பாட​சாலைகளுக்கு இடையிலான மிக முக்கிய கிரிக்கெட் போட்டியாகக் கருதப்படும் றோயல்- தோமியன் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியைப் பார்க்கச் சென்ற ஒருவரும், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது, ஓரிரு நாள்களுக்குப் பின்னர் தெரிய வந்தது.

தாம், இந்தப் போட்டியை நடத்த வேண்டாம் எனப் போட்டி அமைப்பாளர்களுக்கு அறிவித்ததாகவும், ஆனால், அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் போட்டியை நடத்தி இருக்கிறார்கள் என்றும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கொவிட்-19 நோய் நிலைமை பற்றி, நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட செய்தியொன்றில் குறிப்பிட்டு இருந்தார். அவரது இந்தக் கூற்று, நாட்டில் முக்கிய பிரமுகர்களும் நிலைமையின் பாரதுரத் தன்மையை உணரவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.

இந்த கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டாம் என, ஜனாதிபதி வெறுமனே கருத்துத் தெரிவிக்காமல், அதைத் தடை செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

நாட்டு நிலைமை, அவ்வாறானதொரு போட்டியை நடத்துவதற்குப் பொருத்தமானதாக இல்லை என்பதை, உணர்ந்தமையாலேயே அவர் அதை நடத்த வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். அவ்வாறாயின், அதைச் சட்டப்படியே தடை செய்யாதது ஏன்?

எல்லாவற்றையும் ஜனாதிபதியே செய்ய வேண்டுமா, ஜனாதிபதியின் ஆலோசனையின் படியே தான் செய்ய வேண்டுமா?

அமைச்சர்களான பவித்திரா வன்னியாரச்சி, டலஸ் அலகப்பெரும ஆகியோரது கருத்தைப் பார்த்தால், ஜனாதிபதியின் ஆலோசனை இல்லாமல், அவர்கள் எதையும் செய்வதில்லைப் போல்த் தான் தெரிகிறது. எதற்கெடுத்தாலும், “அதி மேதகு ஜனாதிபதியின் ஆலோசனையின் படி” என்றுதான் அவர்கள் கூறிவருகிறார்கள்.

ஆனால், இந்தக் கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரையில், ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தும், சுகாதார அமைச்சரோ, விளையாட்டுத்துறை அமைச்சரோ அதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை; ஏன்?

அத்தோடு, இந்தப் போட்டியின் அமைப்பாளர்கள் படிக்காதவர்கள் அல்லர். அவர்கள், இந்தப் போட்டியை நிறுத்த வேண்டும் என, ஏன் நினைக்கவில்லை? இது, சாதாரண இரு பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியாக இருந்தால், ஜனாதிபதி வெறுமனே கருத்துத் தெரிவித்துவிட்டு, அமைதியாக இருந்திருப்பாரா?

அமைச்சர்கள், அதிகாரிகள் போட்டியை நடத்த விட்டு இருப்பார்களா? போட்டி அமைப்பாளர்களும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்த பின்னர், போட்டியை நடத்தத் துணிந்திருப்பார்களா?

அரசாங்கமும் அதிகாரிகளும், கொரோனா வைரஸ் பிரச்சினையை எந்தளவு பாரதுரமாகக் கணக்கில் எடுத்துள்ளார்கள் என்பதைக் காட்டும் முக்கியமான நிகழ்வாக, இந்தப் போட்டியும் அமைந்துள்ளது.

பொது மக்களும் சரியாக நிலைமையைப் புரிந்து கொள்ளவில்லை. எனவே, மக்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதைத் தடுப்பதற்காக, அரசாங்கம் முதலில் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கிய போது, பலர் அந்த விடுமுறையைப் பாவித்து, உல்லாசப் பயணங்களில் ஈடுபட்டு இருந்தார்கள்; சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றிருந்தார்கள்.

மார்ச் மாதம் 11ஆம் திகதி முதல், இன்று வரை இலங்கையில் கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்படாத நாளே இல்லை. நோய் பரவும் நிலைமை, வழமை நிலைமைக்குத் திரும்பி வருவதாகவும் கூற முடியாது.

சில நாள்களில் சுமார் ஐந்து நோயாளர்கள் கண்டறியப்பட்ட போதிலும், சில நாள்களில் அந்த எண்ணிக்கை ஒன்பதாகவும் பத்தாகவும் அதிகரித்திருந்தது. புதன்கிழமை (25) நோயாளர் எண்ணிக்கை 102ஐத் தாண்டி இருந்தது; அவர்களில் இருவரது நிலைமை மோசமாகவும் இருந்தது.

உலகில் பல செல்வந்த நாடுகளே, கொரோனா வைரஸ் தாக்குதலால் செய்வதறியாது தடுமாறுகின்றன. இந்த நிலையில், வெளிநாட்டுக் கடனில் தங்கியிருக்கும் இலங்கை, மிக ஆபத்தான நிலையில் இருப்பதைச் சகலரும் உணர வேண்டியிருக்கிறது.  பொறுப்புடன் நடந்து கொள்ள, எமது அகம்பாவம் சில வேளைகளில் இடங்கொடுக்காவிட்டாலும், அவ்வாறு நடந்து கொள்ள நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம் என்பதே உண்மை.

-எம்.எஸ்.எம். ஐயூப்

Share.
Leave A Reply