இந்தியா முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில், இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தையும், தொழில்வாய்ப்புகளையும் இழந்துள்ளனர்.
தற்போது டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் கொரோனா வைரஸின் அச்சத்தை மீறி புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது டுவிட்டர் பதிவில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது வீடுகளுக்கு செல்ல 1000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக கூறினார்.
அதேபான்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில், பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார், எனினும் ஏனையோர் வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தினார்.
இந்த நிலையில், சொந்த ஊருக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் டெல்லி மற்றும் உத்தரப்பிரதேஸ் பஸ் நிலையத்தில் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காது கூட்டமாக கூடியுள்ளனர்.
இந் நிலையில் இவர்களின் இந்த நடத்தை மூலம் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 987 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 25 உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.