உலகம் முழுக்க அறிவியலாளர்கள் வியக்கத்தக்க அளவில் முயற்சிகள் மேற்கொண்டுள்ள போதிலும், நாம் இன்னும் நிறைய விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பல கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நாம் இருக்கிறோம்.
சில முக்கியமான கேள்விகள் இங்கே தரப்பட்டுள்ளன.
1. எத்தனை பேருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது?
இது மிக அடிப்படையான கேள்விகளில் ஒன்று. ஆனால் மிகவும் முக்கியமானவற்றில் ஒன்று.
உலகம் முழுக்க பல லட்சம் பேருக்கு இந்தப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையாகத்தான் இது இருக்கும்.
இந்த வைரஸ் பாதிப்பு இருந்தாலும், உடல் நலிவுறவில்லை என்பது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தாத எண்ணற்றவர்களைக் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.
ஒருவருக்கு நோய்ப் பாதிப்பு உள்ளதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கான பரிசோதனை முறை உதவியாக இருக்கும்.
நமக்கு கொரோனா தொற்று உள்ளது என அறிவது எப்படி?
2. உண்மையில் இது எந்த அளவுக்கு உயிர்ப்பலி வாங்கக் கூடியது?
எவ்வளவு பேர் இறந்துள்ளார்கள் என்பது நமக்குத் தெரியாத வரையில், மரண விகிதம் பற்றி நிச்சயமாகக் கூறுவது சாத்தியமற்றது. இப்போதைக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 1 சதவீதம் பேர் மரணம் அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நோய் அறிகுறி தென்படாதவர்கள் அதிகமாக இருந்தால், மரண விகிதம் இன்னும் குறைவாக இருக்கும்.
3. முழுமையான அறிகுறிகளின் பட்டியல் என்ன?
கொரோனா வைரஸ் தாக்குதலின் பிரதான அறிகுறிகளாக – காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல் உள்ளன. இவற்றைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும்.
உலர்ந்த தொண்டை, தலைவலி மற்றும் வயிற்றுப் போக்கு பாதிப்புகளும் சிலருக்கு ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வாசனை அறியும் தன்மை குறையக்கூடும் என்றும்கூட சில அனுமானங்கள் கூறுகின்றன.
ஆனால் லேசான சளி போன்ற அறிகுறிகள், மூக்கு ஒழுகுதல் அல்லது தும்மல் ஆகியவை சில நோயாளிகளுக்கு இருப்பதாகச் சொல்வதுதான் முக்கியமான கேள்வியாக உள்ளது.
இதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், வைரஸ் தாக்குதல் இருந்தாலும் தங்களுக்கு தொற்று பரவியுள்ளது என்பதை மக்கள் அறியாமல் இருப்பார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
4. தொற்று பரவலில் சிறுவர்களின் பங்கு என்ன?
சிறுவர்களுக்கு நிச்சயமாக கொரோனா வைரஸ் தாக்கும். இருந்தாலும், அவர்களுக்கு லேசான அறிகுறிகள் தோன்றலாம். முதிய வயதினருடன் ஒப்பிடும்போது, குழந்தைகளில் இந்த நோயால் ஏற்படும் மரண விகிதம் குறைவாகத்தான் உள்ளது.
ஒரு நோய் பரவுதலுக்கு குழந்தைகள் அதிக காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் நிறைய பேருடன் (பெரும்பாலும் விளையாட்டு மைதானங்களில்) கலந்து பழகும் வாய்ப்பு இருப்பதும் இதற்கு ஒரு காரணம். ஆனால், இந்த வைரஸ் தாக்குதலைப் பொருத்தவரையில், குழந்தைகள் மூலம் எந்த அளவுக்குப் பரவும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
5. உண்மையில் இது எப்படி தொடங்கியது?
இந்த வைரஸ் 2019 இறுதியில் சீனாவில் வுஹானில் வெளிப்பட்டது. அங்கு இறைச்சி அங்காடியில் நிறைய பேருக்கு இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதிகாரப்பூர்வமாக சார்ஸ்-சி.ஓ.வி.-2 என கூறப்படும் இந்த கொரோனா வைரஸ், வெளவால்களுக்குத் தொற்றக் கூடிய ஒருவித வைரஸ்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. இருந்தபோதிலும், வெளவால்களில் இருந்து வேறொரு விலங்கினத்துக்கு இது பரவி, அதில் இருந்து மனிதர்களுக்குப் பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆரம்பம் எது என்பது இன்னும் தெரியவில்லை. வெளவால்களிடம் இருந்து தொற்று பரவிய அந்த விலங்கினம், இதை மேலும் பரப்பும் வாய்ப்பு கொண்டதாகவும் இருக்கலாம்.
6. கோடையில் இந்தப் பாதிப்புகள் குறையுமா?
சளிக்காய்ச்சலும், சளியும் குளிர் மாதங்களில் சாதாரணமாகக் காணப்படும். ஆனால் வெப்பநிலை அதிகமாகும்போது, வைரஸ் பரவும் நிலையில் மாற்றம் ஏற்படுமா என்பது இன்னும் தெரியவில்லை.
பருவநிலை மாற்றத்தால் இதில் தாக்கம் இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பிரிட்டன் அரசின் அறிவியல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர். அப்படி ஒரு தாக்கம் இருந்தால், சளி மற்றும் சளிக்காய்ச்சல் போன்றவற்றின் மீதான தாக்கத்தைவிட குறைவாகவே இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
கோடையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு குறைந்தால், மீண்டும் குளிர் பருவத்தில் அதன் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. அப்போது வழக்கமான குளிர்பருவ நோய்களால் அதிக நோயாளிகளை மருத்துவமனைகள் கையாண்டு கொண்டிருக்கும் சமயமாக அது இருக்கும் என்று கூறப்படுகிறது.
7. சிலருக்கு ஏன் தீவிரமான அறிகுறிகள் தென்படுகின்றன?
பெரும்பாலானவர்களுக்கு கோவிட் – 19 லேசான அறிகுறிகளை மட்டுமே காட்டுகிறது. இருந்தபோதிலும், 20 சதவீதம் பேர் அதிக தீவிரமான நோய்க்கு ஆட்படுகிறார்கள், காரணம் என்ன?
இதில் ஒருவருடைய நோய் எதிர்ப்பு சக்தி எப்படி இருக்கிறது என்பது தான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓரளவுக்கு மரபணு சார்ந்த விஷயமாகவும் அது உள்ளது. இதற்கான காரணத்தைப் புரிந்து கொள்வது, தீவிர கவனிப்பு தேவைப்படும் நிலையில் இருந்து மக்களைக் காப்பாற்ற, நோயைத் தடுக்க உதவியாக இருக்கும்.
8. நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும், ஒருவருக்கே இரண்டு முறை இது தாக்குமா?
இதுகுறித்து நிறைய அனுமானங்கள் உள்ளன. குறிப்பிட்ட வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் எவ்வளவு காலத்துக்கு நீடித்திருக்கும் என்பதற்கு, குறைவான ஆதாரங்களே உள்ளன.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிராக நோயாளி வெற்றிகரமாக போராடி மீண்டுவிட்டார் என்றால், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டதாக அர்த்தம். ஆனால் இந்த நோய் சில மாதங்கள் தான் அறியப்பட்டுள்ளது என்பதால், இதன் நீண்டகால பாதிப்பு பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. முதல்நிலையில் நோயுற்று குணமானதாக அறிவிக்கப்பட்டவருக்கு அந்த நிலையில் முறையாக பரிசோதனை செய்யாமல் அனுப்பியதால் தான், மீண்டும் அவர் நோயுறுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நீண்டகால நோக்கில் என்ன நடக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு, நோய் எதிர்ப்பாற்றல் குறித்த கேள்விகளுக்கு விடை காண்பது முக்கியமானது.
9. இந்த வைரஸ் நிலைமாற்றம் அடையுமா?
வைரஸ்கள் எப்போதும் நிலைமாற்றம் அடைந்து பெருகிக் கொண்டே தான் இருக்கும். ஆனால் அதன் மரபணு குறியீடுகளில் ஏற்படும் மாற்றங்கள், கணிசமான மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்காது.
பொதுவாக, நீண்டகால நோக்கில் வைரஸ்களின் உயிர்க்கொல்லி குணம் குறையும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்கு உத்தரவாதம் கிடையாது.
வைரஸ் நிலைமாற்றம் அடைந்து பெருகும் நிலை ஏற்பட்டால், நமது நோய் எதிர்ப்பாற்றலால் அதைக் கண்டறிய முடியாமல் போகும், அதற்கான தடுப்பூசி மருந்துகள் வேலை செய்யாமல் போகும் (சளிக் காய்ச்சலில் நடந்தது போல) நிலை ஏற்படும் என்பது தான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.