தமது சேவை அடையாள அட்டையை ஊரடங்கு சட்ட விதிவிலக்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டோர், வாகனங்கள் தவிர ஏனைய அவ்வாறான அனுமதியற்ற நபர்கள், வாகனங்கள் பிரதான பாதைகளிலோ குறுக்கு வீதிகளிலோ பயணித்தால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் இன்று மீளவும் அரிவித்தது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு, மிக கண்டிப்பாக நடை முறைப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் சார்பில் பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.
அவ்வாறு கைதுசெய்யப்படுவோர் நீதிமன்றங்கள் முன்னிலையில் ஆஜர் செய்யப்படுவர் எனவும், நீதிமன்றங்களில் அவர்கள் குற்றவாளிகளாக காணப்படுமிடத்து அவர்களுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அவ்வாறு பாதைகளில் அனுமதியின்றி பயணிக்கும் வாகனங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டு கொரோனா பரவல் காலம் முடியும் வரை அது மீள கையளிக்கப்படமாட்டாது என பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.