யாழ் மாவட்டத்தில் ஒரு நபரின் செயலால் முழு தீபகற்பமே ஏதோவொரு வகையில் தனிமைப்படுத்த நேரிட்டது என பதில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டுவரும் தனிமைகாக்கும் நிலையங்களான புனானை மற்றும் தியதலாவையிலிருந்து 14 நாட்கள் பூர்த்தி செய்த 134 பேர் இன்றைய தினம் (30) வீடுகள் நோக்கிச் சென்றுள்ளனர்.
அவர்கள் தொடர்ந்தம் 14 நாட்கள் வீடுகளில் தனிமையைப் பேணுமாறு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 1700 பேர் கண்காணிப்புச் செயன்முறையைப் பூர்த்தி செய்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 47 நிலையங்களில் 1964 பேர் தொடர்ந்தும் கணிகாணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களில் 18 பேர் வெளிநாட்டவர்களாவர். இவ்வாறு நாளைய தினம் (31) 321 பேர் வீடு திரும்பவுள்ளனர்.
பெரியகாடு நிலையத்திலிருந்து 24 பேரும், புனானையிலிருந்து 11 பேரும், வவுனியாவிலிருந்து 206 பேரும் பூர்த்தி செய்து ஆரோக்கியமாக வீடு திரும்பவுள்ளனர். ஏற்றுமதித் தயாரிப்பு வலயத்திலிருந்து 498 பேர் தத்தமது வீடுகளுக்கு செல்வதற்கு இராணுவத்தினரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புத்தளம் கடயான்குளத்தில் கண்டறியப்பட்ட நோயாளியுடன் தொடர்புபட்ட 68 பேரை தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளோம். புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்புடன் இவர்களைத் தனிமைப்படுத்தியுள்ளோம்.
மேலும் கண்டி மாவட்டத்தில் அக்குறணைப் பிரதேசமும் அட்டலுகம பிரதேசமும் தனிமைப்படுத்தியிருக்கின்றோம். யாழ் மாவட்டத்தில் ஒரு நபரின் செயலால் முழு தீபகற்பமே ஏதோவொரு வகையில் தனிமைப்படுத்த நேரிட்டது. தொடர்புபட்டவர்களில் 17 பேர் கண்காணிப்பு நிலையத்திலும் 240 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தியும் உள்ளோம். இவ்வாறு முழு யாழ்தீபகற்பமும் தனிமைப்படுத்தினோம். இதனால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றுவது தடுக்கப்பட்டுள்ளது.
இவ்வகையில்தான் நாம் குறித்த பிரதேசங்களைத் தனிமைப்படுத்துகின்றோம். அதற்கு வேறெந்தக் காரணமும் இல்லை. அதேபோல் கடந்த தினத்தில் இத்தொற்றுக்குள்ளாகி இறந்தவர் நடமாடிய நாத்தாண்டிப் பகுதியில் இரு கிராமங்களிலுள்ள 08 வீடுகளிலுள்ளவர்களை சுய தனிமைப்படுத்தலை சுகாதார உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.