இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இன்று இரண்டாவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இவ்வாறு இன்று உயிரிழந்த நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அவர் நீண்டகாலமாக நீர்கொழும்பு கொச்சிக்கடையில் வசித்த முஹம்மத் ஜமால் (60) என்பவரே உயிரிழந்தவராவாா். அத்துடன் அவர் கடந்த மார்ச் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து திரும்பியுள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்றினால் நேற்று (30) உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை யாரும் அறிந்திருக்கவில்லையென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் தொற்றிற்குள்ளாகும் விதத்தில் வெளியில் நடமாடியவருமல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றை அவர் மறைத்தார் என வெளியாகிய செய்தியை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததை இன்றுதான் குடும்பத்தினரே அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
நீண்டகாலமாக சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்மா என சிரமப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து இந்த வருத்தங்களால் அவர் சிரமப்பட்டு வருவதால், அண்மையில் ஏற்பட்ட சளி, இருமலையும் குடும்பத்தினர் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து நோயாளியாகவே இருந்ததால் வீட்டிலேயே இருந்தார். வெளியே செல்வதில்லை. சந்தைக்கு மீன் வாங்க சென்று வந்தார். அவருக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டதென்பதை தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. சந்தைக்கு சென்று வந்த சமயத்தில் தொற்று ஏற்பட்டிக்கக்கூடும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து சுகாதார அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் அவர் ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவரது உடல்நிலை சீரடையாததையடுத்து உறவினர்களால் இன்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அது முடியவில்லை. நீர்கொழும்பு வைத்தியசாலையிலேயே உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் நவலோகா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் கடமையாற்றிய 12 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நீர்கொழும்பு வைத்தியசாலை பணியாளர்கள் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நன்றி
யாழ்ஒளி