வௌவால்களுக்கு, ‘வைரஸ்களின் கூடாரம்’ என்ற பெயர் சமீபகாலமாக சூட்டப்படுகிறது. அந்த அளவுக்கு, அவற்றிடமிருந்து பல்வேறு வைரஸ் தொற்று நோய்கள் மனிதர்கள் மத்தியில் பரவியுள்ளன.

பீட்டர் டஸ்ஸாக் என்ற சீன ஆய்வாளர், கடந்த 15 ஆண்டுகளாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் தொற்றுநோய்கள் குறித்து ஆய்வுசெய்துகொண்டிருக்கிறார்.

தான் செய்த ஆய்வுகளின் அடிப்படையில், “கொரோனா வைரஸுக்கான ஆதாரம் என்னவென்று 100 சதவிகிதம் உறுதி செய்யப்படவில்லை.

இருப்பினும், அது சைனீஸ் ஹார்ஸ்ஷூ (Chinese horseshoe bat) என்ற ஒருவகை வௌவால்களிடமிருந்துதான் பரவியது என்பதற்கு மிகவும் வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று கூறியுள்ளார்.

vaval.jp-1

வௌவால்கள், நோய்களைச் சுமந்து பறக்கும் லட்சக்கணக்கான பூச்சிகளை டன் கணக்கில் சாப்பிடுகின்றன.

வௌவால்களுக்கு, ‘வைரஸ்களின் கூடாரம்’ என்ற பெயர் சமீபகாலமாக சூட்டப்பட்டுவருகிறது. அந்த அளவுக்கு, அவற்றிடமிருந்து பல்வேறு வைரஸ் தொற்று நோய்கள் மனிதர்கள் மத்தியில் பரவியுள்ளன. அவை… ஹென்ட்ரா, லாகோஸ், லிசா, நிபா, இப்போது கொரோனா.

பல்வேறு வகையான வைரஸ்களை, எந்தவித பிரச்னையும் இன்றித் தன் உடலில் சுமந்துகொண்டிருக்க ஒரு வௌவாலால் முடியும்.

ஆப்பிரிக்கா, மலேசியா, பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்திய மார்பக், நிபா மற்றும் ஹென்ட்ரா போன்ற வைரஸ்கள் அவற்றிடமிருந்து உற்பத்தியும் ஆகின்றன.

இபோலா வைரஸ், அவற்றின் உடலில்தான் உருவாவதாகக் கூறப்படுகிறது. அப்படிச் சுமந்துகொண்டிருக்கும் வைரஸ்களில், அவற்றைப் பாதிக்கக்கூடிய ஒரேயொரு வைரஸ் இருக்கிறது என்றால், அது ரேபிஸ் மட்டும்தான்.

எப்படி வௌவால்கள் இத்தனை வைரஸ்களைச் சுமந்துகொண்டு வாழ்கின்றன. இந்தத் தொற்றுநோய்களைப் பரப்பும் வைரஸ்களால், அவற்றுக்கு ஏன் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை?

மற்ற பாலூட்டிகளோடு ஒப்பிடுகையில், வைரஸ்களைத் தாக்குப்பிடித்து பாதிப்புகளின்றி இருக்கின்ற உடலமைப்பு வௌவால்களின் தனித்தன்மையாகும்.

பறக்கும் பாலூட்டிகளான இவை, நோய்களைச் சுமந்து பறக்கும் லட்சக்கணக்கான பூச்சிகளை டன் கணக்கில் சாப்பிடுகின்றன.

அதேநேரம், வாழை, அவாகேடோ, மா போன்ற பழங்களின் மகரந்தச் சேர்க்கையிலும் பங்கு வகிக்கின்றன. இருப்பினும், தொற்றுநோய்களைச் சுமந்துகொண்டு எந்தவித பாதிப்பும் இன்றி வாழக்கூடிய திறன் அவற்றுக்கு இருக்கிறது.

இதனால் அவற்றைச் சாப்பிடும்போது, விலங்குச் சந்தைகளில் வளர்ப்பதற்காக விற்கும்போது, ஒரு வாழ்விடத்திலிருந்து வேறோர் வாழ்விடத்திற்கு அவை இடம் மாறும்போது வைரஸ்களையும் சுமந்தே சென்று மற்ற உயிரினங்களுக்கு, குறிப்பாக மனிதர்களுக்குப் பரப்புகின்றன.

வௌவால் குறித்த அறிவியல் ஆய்வுகளில், அவை எப்படி தொற்றுநோய்களைச் சுமந்துகொண்டே சுற்றுகின்றன என்ற கேள்வி நீண்டகாலமாக இருந்துவந்தது.

பிற்காலத்தில் அதற்கான விடை, வௌவால்களின் எதிர்ப்புச்சக்தி குறித்த ரகசியம் அவற்றின் பரிணாம வளர்ச்சியில் ஒளிந்துள்ளதைக் கண்டுபிடித்தார்கள்.

hgfdsa

டி.என்.ஏ-வை உணர்தல் (DNA sensing) என்றொரு பதம் மரபணு அறிவியலில் உண்டு. உடலிலுள்ள அணுக்கள், சில நேரங்களில் ஆங்காங்கே உடைந்து சிதறி சில துண்டுகளாகப் பிரிந்துவிடும்.

அவை எங்கு இருக்கக்கூடாதோ, அங்கு மிதந்துகொண்டிருந்தால் தேவையற்ற நோய்களை உருவாக்கும் பாகங்களாக மாறிவிடும்.

அப்படி மாறாமல் தவிர்க்க, அனைத்து பாலூட்டிகளிலுமே ஒருவித தற்காப்புச் செயல்பாடு இயற்கையாகவே இருக்கும். ஆனால், பறக்கும் பாலூட்டிகளின் பரிணாம வளர்ச்சியில் அந்தச் செயல்பாடு பலவீனமடைந்துவிட்டது.

 அதேநேரம், அத்தகைய தொற்றுநோய்கள் உருவாகும்போது, அவற்றால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாமல் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் அவற்றின் உடலில் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துவிட்டது. பரிணாம வளர்ச்சியின்போது, முந்தைய செயல்பாடு பலவீனமடைந்ததால் உருவாகின்ற நோய்களை எதிர்த்துச் சண்டையிட வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதனால், அவற்றை எதிர்க்கக்கூடிய திறனுள்ள ஆற்றலைப் பரிணாமவியல் அவற்றுக்கு வழங்கியுள்ளது.

மனிதர்களுக்கு விலங்குகளிடமிருந்து பரவக்கூடிய பெருவாரியான வைரஸ் தொற்றுகளை மற்ற பாலூட்டிகளைவிட வௌவால்கள் அதிகமாகச் சுமந்திருக்கின்றன.

இப்போது பரவிக்கொண்டிருக்கும் 2019-கொரோனா வைரஸை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவருவது என்பதே பெரும் சவாலாக இருக்கிறது.

ஆனால், அதன் மூலாதாரத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதே இந்த தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஒரே தீர்வாக இருக்கமுடியும்.

அதற்கு, வௌவால்களைக் கண்காணிப்பதும் அவைகுறித்து ஆய்வு செய்வதும் ஒரு வழியாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர் டஸ்ஸாக் கூறியுள்ளார். சீனாவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே அதற்கான வேலையைத் தொடங்கிவிட்டனர்.

எலி, பறவை போன்ற உயிரினங்களும்கூட இத்தகைய நோய்ப் பரவலைச் செய்கின்றன. ஆகவே, இந்த விஷயத்தில் வௌவால்களை மட்டுமே நாம் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்ட முடியாது.

ஆனால், அவற்றின் மூலம் பரவும் நோய்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதே இந்த கவனக் குவியலுக்குக் காரணம். அப்படிப் பரவும் நோய்களின் எண்ணிக்கையும் அவை பரவும் வேகமும் அதிகம்.

அண்டார்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களிலுமே வௌவால்கள் வாழ்கின்றன. அதுவும் எலிகளைப் போலவே மனிதர்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு அருகிலேயே வாழ்கின்றன.

ஆனால், பறக்கும் திறன் இருப்பது நோய்களைப் பரவலாகக் கொண்டுசேர்க்கும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.

கொரோனா வைரஸ்

அது மட்டுமின்றி, வௌவால்கள்தான் சிறிய பாலூட்டிகளிலேயே அதிக ஆயுள் காலத்தைக் கொண்டவை. சைபீரியாவிலிருந்த ஒரு சிறிய வகை வௌவால், 41 ஆண்டுகள் வாழ்ந்தது. ஆனால், எலிகள் சராசரியாக இரண்டு ஆண்டுகளே வாழ்கின்றன.

சீனா உட்பட, பூமியின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் வௌவாலை சாப்பிடுகின்றனர். அவை, விலங்குச் சந்தைகளில் விற்கப்படுகின்றன. வௌவால்கள் குகைகளில் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. அத்தகைய கூட்டமான வாழ்வியலைக் கொண்ட உயிரினம் தொற்று நோய்களை எளிமையாகப் பரப்பிவிடும்.

2017-ம் ஆண்டின்போது, டஸ்ஸாக் மற்றும் அவருடன் பணிபுரியும் ஆய்வாளரான கெவின்.ஜெ.ஆலிவலோடு இணைந்து ஓர் ஆய்வு மேற்கொண்டார். அதன்மூலம் அவர்கள், 754 பாலூட்டி வகைகள் மற்றும் 586 வைரஸ் வகைகள் குறித்த தரவுகளைத் தொகுத்து, எந்த வைரஸ் எந்தப் பாலூட்டியிலிருந்து உருவாகிறது.

மேலும் அந்த வைரஸ்கள் தன்னைச் சுமந்து நிற்கும் உயிரை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை ஆய்வுசெய்து தரவுகளைத் தொகுத்தனர்.

அந்த ஆய்வின் முடிவில், மனிதர்களுக்கு விலங்குகளிடமிருந்து பரவக்கூடிய பெருவாரியான வைரஸ் தொற்றுகளை மற்ற பாலூட்டிகளைவிட வௌவால்கள் அதிகமாகச் சுமந்திருக்கின்றன என்பதை உறுதி செய்தார்கள். வௌவால்கள், வைரஸ்களால் பாதிக்கப்படாமல் பிழைத்திருப்பதை மட்டும் செய்யவில்லை, வைரஸ்களையும் உருவாக்குகின்றன.

தீவிரவாதமும் தொற்றுநோய்ப் பரவலும் ஒன்றுதான்.
ஆய்வாளர் பீட்டர் டஸ்ஸாக்

இதனாலேயே, வைராலஜி துறையில் வௌவால்களுடைய உடலியல் அமைப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட வேண்டும். கூடுதலாக, அவற்றில் ஒட்டி வாழ்கின்ற, உருவாகின்ற வைரஸ்கள் குறித்தும் ஆய்வுசெய்ய வேண்டும்.

அவற்றில் வைரஸ் உருவாவதால், இத்தகைய தொற்றுநோய்ப் பரவலுக்குக் குற்றம் சாட்டப்படவேண்டியது வௌவால்களே என்றில்லை.

உலக அளவில் சூழலியலாளர்கள் சொல்வதுபோல, நாம்தான் வௌவால்களின் வாழிடங்களை ஆக்கிரமித்துள்ளோம். அவற்றைப் பிடித்து சாப்பிடுகிறோம்.

பறக்கும் பாலூட்டி

எதிர்காலத்தில் இத்தகைய தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, காட்டுயிர் விற்பனைச் சந்தைகள் தடை செய்யப்பட வேண்டும்.

அதேநேரம், இவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க முடியாது என்பதால், முன்னெச்சரிக்கையாக அனைத்து விதமான ஆய்வுகளையும் மேற்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.

தீவிரவாதமும் தொற்றுநோய்ப் பரவலும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்கிறார் பீட்டர் டஸ்ஸாக். இரண்டையும் கட்டுக்குள் கொண்டுவர, முற்றிலுமாகத் தவிர்க்க, அறிவியலும் புத்திசாலித்தனமும் அவசியம். அவை இருந்தால், நிச்சயம் நம்மால் இரண்டையுமே கட்டுப்படுத்த முடியும். கொரோனாவையும் தான்.

Share.
Leave A Reply