சுவிசில் இருந்து தமிழர் தாயகத்துக்கு வருகை தந்திருந்த போதகர் ஒருவரினால் யாழ்ப்பாணம் அரியாலையில் நடந்த ஒன்றுகூடலின் ஊடாகவே தமிழர்தாயகப் பகுதிக்குள் “கொரோனா” புகுந்தது என்ற செய்தி தாயகத்தை மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்களையும் அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.
வளர்ந்த நாடுகள் பலவுமே கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழர் தாயகம் எவ்வாறு கொரோனாவுக்கு முகங்கொடுக்கப் போகின்றது என்ற கவலையும் அச்சமும் புலம்பெயர் தமிழர்களிடத்தில் பரவலாக காணப்படுகின்றது.
இதுபோலவே பிரான்சிலும் போதகர் ஒருவரின் ஒன்றுகூடலினாலேயே பிரான்ஸ் முழுவதும் கொரோனா பரவக் காரணமாக அமைந்துள்ளது என்பது மட்டுமல்ல, யாழ்ப்பாணத்துக்கு சம்பவத்துக்கும், பிரான்ஸ் சம்பவத்துக்கு தொடர்பு இருக்கும் என்றே தோன்றுகின்றது.
அதுபற்றி விரிவாக பார்பதற்கு முன்னராக, இப்பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் வியாழன் இரவு, பிரான்சின் சுகாதார அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 365பேர் உயிரிழந்துள்ளதோடு, 3922பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என செய்தியோடு 16 வயது சிறுமியொருவரும் கொரோனா வைரசுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களில் ஒருவர் என்ற விடயம் பிரான்சை உறையவைத்துள்ளது.
இதே நாளில் 33வயது தமிழ் இளைஞர் ஒருவர் கொரோனாவுக்கு இலக்காகி உயிரிழந்த செய்தி காலை வெளிவந்திருந்தது.
இந்த கொடிய வைரஸ் முதியவர்கள், உடல்ரீதியாக கடுமையான நோய்களை கொண்டிருப்பவர்களே அதிகம் பாதிக்கும் என்ற நிலையில், மேற்குறித்த இரு இளவயது உயிரிழப்புக்களும் கொரோனா குறித்த மருத்துவ மதிப்பீடுகளை மீள்சிந்தனைக்கு உள்ளாக்கியுள்ளதோடு, பலரையும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
வியாழன் (26-03-2020) வரை மொத்தமாக 29 155பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 1696 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடளாவியரீதியில் அறிவிக்கப்பட்ட 15 நாட்களுக்கான பொதுமுடக்கம், தடையுத்தரவுகள் இரண்டாவது வாரத்தினை இறுதி நாட்களை எட்டியிருக்கின்ற நிலையில், அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குகின்ற மருத்துவ ஆய்வறிஞர்கள் மேலும் நான்கு வாரத்துக்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
சீனாவினைத் தொடர்ந்து இக்கொடிய வைரசுக்கு அதிக உயிர்பலிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஒன்றாக பிரான்சும் காணப்படுகின்றது.
பிரான்சுக்கு பெப்ரவரி நடுப்பகுதியிலும், கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டவர்கள் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள ஆசிய நாடுகளில் இருந்து வந்தவர்களாகவே காணப்பட்டிருந்தனர்.
பெப்ரவரி பின்வாரத்திலும், மார்ச் முதல்வாரத்திலும் கிழக்கு பிரான்சின் “முலூஸ்” எனும் பகுதியில் பலர் கூட்டாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை பிரான்சக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.
காரணம், பெப்ரவரி 17,25 ஆகிய தேதிகளில் போதகர் சமூவெல் பீற்றர்சிமிற் என்பவரது தலைமையில் இப்பகுதியில் அமைந்துள்ள டு’éபடளைந éஎயபெéடஙைரந னந டுய Pழசவந ழரஎநசவந இவரது சபையில் இடம்பெற்றிருந்த ஒன்றுகூடலில் பங்கெடுத்திருந்தவர்களே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.
அண்ணளவாக 2000ம் பேர், பிரான்சின் பல பாகங்களில் இருந்து மட்டுமல்ல பிரான்சின் ஆளுகைக்கு உட்பட தீவுக்கூட்டங்களில் இருந்தும், ஜேர்மனி, சுவிஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து பங்கெடுத்துள்ளனர்.
மார்ச் 3ம் நாள் மாவட்ட ஆட்சியகம், கலந்து கொண்ட 2 ஆயிரம் பேர்களது விபரங்களையும் தருமாறு போதகரை தொடர்பு கொண்டபோது, சபையின் பெயரே “கதவுகள் திறந்துள்ளன” என்பதாகவுள்ள நிலையில், யாரும் வந்து “தேவனிடம் ஆசிபெறலாம்” என்ற வகையில் பெயர் விபரங்கள் தம்மிடம் இல்லை என கையை விரித்துவிட்டார்.
மார்ச் 4ம் நாள் மாவட்ட ஆட்சியகம் இக்கூட்டத்தில் பங்கெடுத்தவர்களை இனங்காணும் வகையில் பொதுஅழைப்பொன்றினை விடுத்தனர்.
உடனடியாக வைரஸ் தொற்றுக்கு உள்ளான 81 பேர் அடையாளங்காணப்பட்டிருந்ததோடு, 16 பேர் அக்காலகட்டத்தில் உயிரிழந்ததோடு, பலர் சுயநினைவந்த நிலையில் உள்ளனர்.
பின்னராக பிரான்ஸ் முழுவதும் வைரஸ் தொற்று தீயாக பரவத் தொடங்கிய நிலையில், இதன் மூலவேராக போதகரின் கூட்டமே காணப்பட்டுள்ளது. கூட்த்தில் பங்கெடுத்த பலரே வைரசை தம்முடன் கொண்டு சென்று, அவர்களை அறியாமலேயே பரப்பிவிட்டனர்.
இவ்விடத்தில்தான், யாழ்பாணத்துக்கு சென்ற சுவிஸ் போதகரும் இக்கூட்டத்தில் பங்கெடுத்திருக்கலாம் என்றே தோன்றுகின்றது.
யாழ்பாணத்தில் மார்ச் 15ம் தேதியே ஒன்றுகூடல் இடம்பெறுவதற்கு முன்னராவே பெப்17,25 ஆகிய தேதிகளில் ஒன்றுகூடல் நடந்துள்ளது. இதில் சுவிஸ் போதகர் பங்கெடுத்திருக்க நிறையயே வாய்ப்புகள் காணப்படுகின்றன.
கடந்த 24ம் திகதி பிரான்ஸ்செய்திச்சேவையொன்றுக்கு செவ்வியினை வழங்கியுள்ள பிரான்ஸ் போதகர், தமக்கு எதிராக உடல்ரீதியான வன்முறைகள் ஏவப்படுவதாகவும், சமூகவலைத்தளங்களில் தான் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவததாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரான்சில் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று பரவியமைக்கு தமது சபையே பொறுப்பேற்க வேண்டும் என்ற விமர்சனத்தினை தாம் நிராகரிப்பதாகவும், அது உலகம் முழுவதற்கும் பொதுவானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் போதகருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் என்பதற்கு பிரான்ஸ் கொரோனாவுக்கு கொடுத்து வருகின்ற உயிர்பலிகளின் எதிர்வினையே ஆகும்.
குறிப்பாக இச்சபையின் கூட்டத்தில் பெரும்பாலும் பங்கெடுத்திருந்தவர்கள் மூதாளர்கள் ஆகும். மூதாளர்கள் ஊடாக மூதாளர் அவர்கள் தங்கியிருந்த மூதாளர் மையங்கள் தோறும் கொத்துக் கொத்தான மூதாளர்கள் கொரோனாவுக்கு இரையாகி வருவது பிரான்சை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக சுவாசக்கவசங்கள், கையுறைகள், செயற்கை சுவாசக்செலுத்திகள் என போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லாது தடுமாறுகின்றது. சுகாதார அவசரகாலநிலையினை பிரகடனப்படுத்தியுள்ளதோடு, இராணுவம் உட்பட அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டுள்ளது.
வைரஸ் தொற்றுக்கு எதிரான போரின் தொடக்கத்தில் உள்ளோம் என பிரான்ஸ் அதிபர் ஏமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளமை, இது நீண்ட போர் என்பதனை உணர்த்துகின்றது. மறுபுறம் சபைக் கூட்டங்கள் யாவும் பொதுமுடக்கத்தினால் முடக்கப்பட்டள்ள நிலையில், ‘ஸ்கைப்” “வட்ஸ்அப்” மூலமாக தேவனின் சபை கூடிக்கொண்டுள்ளது.
பாரிஸிலிருந்து சுதன்ராஜ்