இஸ்ரேல் நாட்டில் ஏராளமான கொரோனா நோயாளிகளைக் கொண்டுள்ள தீவிர பழமைவாத யூத நகரம் ஒன்றில் தற்போது முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல் அவிவ் நகரத்துக்கு வெளியே உள்ள நே பிரேக் நகரில் அவசியத் தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். சில இன்றியமையாத பணியாளர்கள் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

2 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் 40 சதவீதம் பேருக்கு கொரோனா இருப்பதாக மூத்த சுகாதாரத் துறை அதிகாரி கூறுகிறார்.

இஸ்ரேலில் மொத்தம் 7,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் முழுவதும் மக்கள் வீட்டைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மக்கள் கூட்டமாக கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வெளியில் செல்பவர்கள் முகக்கவசம் அல்லது துணியால் முகத்தை மூடிக்கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பரிசோதனையில் தமக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியான பிறகும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வைரஸ் பரவுவதைத் தடுக்க மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.

வியாழக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நே பிரேக் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னரே போலீஸார் நகருக்குள் நுழையவும், நகரில் இருந்து வெளியேறவும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினர். இதற்காக நகரைச் சுற்றி போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நகரில் சுமார் 4,500 மூத்தக் குடிமக்கள் இருக்கின்றனர். அவர்கள் ஆபத்தில் இருப்பதால் தனிமைப்படுத்தப்பட்ட விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என ஜெருசலேம் போஸ்ட் என்ற நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிலர் உள்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உதவ பணியமர்த்தப்பட்டுள்ளனர் என அந்த நாளேடு கூறுகிறது.

மிகப் பெரிய மாநகரான ஜெருசலேம் நகருக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் இருக்கும் நகரமாக உள்ளது நே பிரேக்.

வியாழனன்று சுகாதாரத்துறை தலைவர் கூறுகையில் நே பிரேக்கில் 38 சதவீத மக்களுக்கு வைரஸ் தொற்று இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

_111625252_3b8df16c-6847-4650-a054-5156dd3b774aகொரோனா பரவலைத் தடுப்பதற்காக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்று நடைமுறைப்படுத்த தீவிர பழமைவாத சமூகம் ஒன்று தயக்கம் காட்டுவது இஸ்ரேல் மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீவிர பழமைவாதிகளில் ஏராளமானோர் கூட்டுக் குடும்பமாக மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். மத நம்பிக்கை காரணமாக, இணையம் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடும் இவர்கள் மத்தியில் குறைவாகத்தான் இருக்கும்.

இதனால் வெளியுலகச் செய்திகள் மற்றும் தகவல்கள் பெரிதாக அவர்களை சென்று சேராது.

நாடு முழுவதும் முடக்கம் அமலில் இருந்தாலும், இறுக்கமான மத நம்பிக்கை உள்ள சில சமூகங்களில் வழிபாட்டுக்காகவும், திருமணம் போன்ற கொண்டாட்டங்களுக்காகவும் மக்கள் இன்னும் கூட்டமாக கூடுவது தொடர்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரமர் நெதன்யாஹு, இந்தப் பழமைவாதிகளிடம், வைரஸ் தொடர்பில் ஒரு நேர்மறையான முன்னேற்றம் தெரிவதை கவனித்ததாக கூறினார்

Share.
Leave A Reply