மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த ஏழு இளைஞர்கள் அங்கிருந்து தமிழகத்திற்கு நடந்தே வந்துள்ளனர்.
கடந்த 29ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட அவர்கள், நேற்று (சனிக்கிழமை) மதியம் திருச்சி வந்தடைந்தனர். பின்னர் திருச்சியிலிருந்து அரசு உதவியுடன் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகளில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
அப்படி மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த ஒருவரான ராகுல் டிராவிட் என்பவரை தொடர்புகொண்டு பேசியது பிபிசி தமிழ்.
“நான் பி.எஸ்.சி வேதியியல் படித்துள்ளேன். மகாராஷ்டிரா மாநிலம் உமர்சட்யில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறேன். கடந்த 15 நாட்களுக்கு முன்பாக மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகமாக பரவியதையடுத்து அங்கு உள்ள நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு, பணியாளர்கள் யாரும் வேலைக்கு வர வேண்டாம் என கூறிவிட்டனர்.”
“எனது அறையில் 22 பேர் மற்றும் எனது பக்கத்து அறையில் 46 பேர் என தமிழகத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கியிருந்தோம். மொழி தெரியாததால் உதவிகள் கிடைக்கவில்லை. வெளி மாநிலத்தில் இருந்து வந்து தங்கி வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களை மகாராஷ்டிர அரசு முகாம்களில் தனிமைப்படுத்த ஏற்பாடு செய்தது. எங்களையும் அந்த முகாம்களில் தங்க வைத்திருந்தனர்.”
“மொழி பிரச்சனை காரணமாக எங்களால் மகாராஷ்டிர காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் உதவி கேட்க முடியவில்லை. அதுமட்டுமின்றி உள்ளூர் மக்கள் எங்களை சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்லுமாறு மிரட்டினர்” என்கிறார் அவர்.
“இதனால் எங்களால் முகாமில் தங்க முடியவில்லை. மேலும், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் இருப்பதால் எங்களுக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது என்ற அச்சத்தில் முகாம்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டோம்” என்றார் ராகுல் டிராவிட்.
“வீட்டிற்கு செல்வது மட்டுமே நோக்கம்”
“ஊரடங்கு உத்தரவால் வாகன வசதிகள் ஏதும் இல்லை. நடைபயணமாக சொந்த ஊர்களுக்கு சென்றுவிடலாம் என கடந்த 29ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் உமர்சட்யில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் புறப்பட தயாராகினோம். ஆனால், எங்களுடன் பயணம் செய்ய இருந்த சிலர், செல்லும் வழியில் காவல்துறை கைது செய்யும் என்ற அச்சத்தால் வர மறுத்து முகாம்களில் தங்கினர்” என்று மேலும் அவர் கூறினார்.
வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு புறப்பட்டோம் என்று கூறுகிறார் ராகுல் ட்ராவிட்
திருவாரூர், நாகபட்டினத்தை சேர்ந்த பிரபாகரன், முத்துராஜ், ஜெகன், உட்பட 7 இளைஞர்கள் இதில் அடங்குவர்.
“முதலில் நாங்கள் தங்கியிருந்த முகாம்களிலிருந்து புறப்பட்டு அங்கிருந்து 240 கிலோ மீட்டர் தூரம் உள்ள நாத்தேட் பகுதியை வந்தடைந்தோம். அதன் பின் அங்கிருந்த சோலாப்பூர் வந்த நாங்கள் பின் சேலம் வழியாக தமிழக எல்லைக்குள் நுழைந்து சுமார் 1,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து நடந்தே திருச்சி வந்தடைந்தோம்” என்று ராகுல் தெரிவித்தார்.
“வரும் வழியில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி அருகில் உள்ள முகாம்களில் தங்குமாறு அறிவுறுத்தினர். ஆனால் நாங்கள் எங்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பொதுமக்கள் சிலரின் உதவியுடன் தமிழகத்திற்குள் வந்தோம். வழிகளில் கடைகள் அடைத்து இருந்ததால், முகாம்கள் மற்றும் தன்னார்வலர்கள் வழங்கிய உணவை வாங்கி சாப்பிட்டோம்.”
இரண்டு நாட்கள் மட்டுமே தூங்கினோம்
“ஒருசில இடங்களில் கடைகள் திறந்திருந்தன. அங்கு பிஸ்கட், பிரெட் போன்றவற்றை வாங்கி சேமித்து வைத்து கொண்டு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். இரண்டு இரவுகள் மட்டுமே தூங்கினோம். மற்ற நாட்கள் தூங்காமல் நடந்தோம்” என்று மேலும் ராகுல் கூறினார்.
“நடை பயணம் துவங்கிய முதல் நாள் மிகவும் சோர்வாக இருந்தது. பின்னர் அனைவரும் மகிழ்ச்சியாக பேசி சிரித்து நடந்ததால் எப்படி நாங்கள் தமிழகம் வந்தோம் என தெரியவில்லை.”
“லாரிகளில் மொபைல் சார்ஜ் செய்தோம்”
தொடர்ந்து பேசிய ராகுல், “‘நாங்கள் இப்படி நடந்து வருவது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் கவலைப்படுவார்கள் என தினம் ஒருமுறை நாங்கள் அனைவரும் முகாம்களில் தங்கியிருப்பது போல் பெற்றோர்களிடம் பேசிவிடுவோம்.”
“அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. சார்ஜ் போட முடியாமல் போன்கள் ஸ்விட்ச் ஆஃப் ஆனது. பின் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் போன்களை சார்ஜ் செய்து வீட்டில் உள்ளவர்களிடம் பேசிவிட்டு போனை மீண்டும் ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுவோம்.”
“அவ்வழியில் செல்ல கூடிய லாரிகள் மூலம் சில இடங்களை கடந்து வந்தோம். எங்களை பொறுத்தவரை வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சொந்த ஊர்களுக்கு நடந்தே வந்து சேர்ந்தோம்” என்று ராகுல் கூறுகிறார்.
மேலும் இளைஞர்கள் நடந்து வருவதை திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்ற தன்னார்வலர் அருண் பிபிசி தமிழிடம் பேசுகையில், “நான் சனிக்கிழமை திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவேரி பாலத்தில் கொளுத்தும் வெயிலில் சோர்வடைந்த முகத்துடன் இளைஞர்கள் சிலர் தலையில் பைகளுடன் நடந்து செல்வதை பார்த்தேன். அவர்களிடம் விசாரித்ததில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வாகன வசதி இல்லாததால் நடந்தே திருச்சி செல்வதாக கூறினர்” என்றார்.
“இதை கேட்டதும் எனக்கு சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் நடந்தே சொந்த ஊருக்கு வரும் வழியில் உயிரிழந்த செய்தி நினைவுக்கு வந்தது. இந்த இளைஞர்கள் தொடர்ந்து இப்படியே நடந்தால் அவர்களுக்கு சோர்வு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்பதால் உடனடியாக ஊடக நண்பர் உதவியுடன் இளைஞர்கள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தோம்.”
“இளைஞர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல மாவட்ட ஆட்சியர் என்னுடைய வாகனத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கினார். பின்னர் என்னுடைய வாகனத்தில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். பின் இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள், கொரோனா தொற்று இல்லாததால் இளைஞர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்” என்றார் தன்னார்வலர் அருண்.